• இருண்ட குகை.
    மலையே சர்ப்பமாய் எங்களை சுற்றி நிற்கிறது.

    கருமேகங்கள்.
    இதோ உருளைகள் மீண்டும் உட்செல்கின்றன.
    இது வரை இந்த சங்கிலி பிணைப்புகள் ஓய்ந்து பார்த்ததில்லை.

    வயிற்றில் அமிலம்.
    கண்களில் எரிநீர்.
    வெறும் உமிழ்நீர் தாகத்தை போக்குமா?
    செவித்திறன் இன்னும் இருக்கிறதா?
    நீண்ட அமைதியும் நீண்ட சத்தமும் ஏறத்தாழ ஓன்று தான்.

    இன்றைய பொழுதின் முதல் பெட்டி வெளி வர வேண்டும்.
    நேரம் கடந்து விட்டது.
    காத்திருத்தலின் வலியும் தவிப்பும் பயமும் வெறுமையும்
    நாங்கள் யார் என்பதை மறக்க செய்கிறது.

    நாங்களும் இயங்கி கொண்டிருக்கிறோம்
    அதனோடு.


  • இதற்கு முன் பதித்த தமிழ் வலைப்பதிவுலகம் என்கிற இடுகையின் தொடர்ச்சியாக இதனை வாசிக்கவும். 🙂

    தமிழ் வலைப்பதிவுலகம் என்கிற என் இடுகையை படித்து நிறைய பேர் என்னை இமெயிலிலும் போனிலும் நேரிலும் தொடர்பு கொண்டு நீங்கள் எப்படி வலைப்பதிவுகளின் தரத்தினை உயர்த்தி பேசுனீர்கள் என்று தங்கள் ஆச்சரியத்தினை தெரிவித்தார்கள். (இப்படியாக பொய் சொல்ல விரும்பவில்லை.) உண்மையில் அதற்கு கருத்து சொன்ன ஒரே ஆள் நமது ரவிசங்கர் தாம்.

     

    தமிழ் வலைப்பதிவுகளின் தரம் பற்றி இங்கு நான் பேச வரவில்லை. தரம் என்று ஒன்று உண்டு என்றும் அது உலகம் முழுக்க ஒரே அளவுகோளினை கொண்டது என்றும் நான் நம்புவதை விட்டு பல காலமாகிறது. ஆனால் நான் சொல்ல வருவது வலைப்பதிவுகள் ஏற்படுத்தும் புது வகையான வாசிப்பனுபவம் பற்றியது. இது எதன் காரணமாய் ஏற்படுகிறது என யோசித்தால் வலைப்பதிவுகளில் உள்ள ‘நான்‘ தான் இதன் காரணியாக இருக்கும் என நினைக்கிறேன்.

    வலைப்பதிவர்கள் தனி மனித தேடல் கொண்டவர்களாய், தன்னுள்ளே தேடுபவர்களாய் இருக்கிறார்கள். அதோடு அவர்களது எழுத்து அவர்களால் மட்டுமே தணிக்கை செய்யபடுகிறது. (உள் மனதின் தணிக்கை வேறு எந்த சர்வதிகார சென்சார் மீடியாவை விட கடுமையானது.) என்றாலும் வலைப்பதிவில் எழுதபடுவதை மற்ற ஊடகங்களில் உள்ளது போல வேறொரு கை எடிட் செய்வதில்லை. எழுதி முடித்தவுடனே பதித்து விட முடிகிறது. இதன் காரணமாய் மனித மனத்தின் யதார்த்தம் வேறு எங்கும் வெளியில் தெரிவதை விட வலைப்பதிவுகளில் அதிகமாய் தெரிகிறது. மனித மனதை நாம் rawஆக இவ்வளவு அருகில் இருந்து பார்த்தில்லை என்பதே நமக்கு ஏற்படும் அதிர்ச்சிக்கு காரணம். இவ்வளவு rawஆக எழுதுவதற்கு காரணமென்ன? அப்படி எதற்கு வலைப்பதிவிட வேண்டும்? அவசியமா?

    மனிதனுக்கு வலைப்பதிவு என்பது மற்றொரு வகையான communication தானே! இது மற்றொரு கேள்வியை கொண்டு வருகிறது. எதற்காக மனிதன் மற்ற மனிதனிடம்/மனிதர்களிடம் தொடர்பு கொள்ள அல்லது எண்ணங்களை பரிமாறிக்கொள்ள விரும்புகிறான்.

    எத்தனை முறை நமது வலைப்பதிவினை பார்த்து நாமே அட எதற்காக இதை எல்லாம் எழுதி குவித்தோம் என சலித்து கொள்கிறோம். அடுத்து சில தினங்களிலே சலிப்பினை மறந்து மீண்டும் எழுதி பதிக்கிறோம் இல்லையா. ஏன் அப்படி என்ன ஆர்வம்? நமது எழுத்துகளை பகிர்ந்து கொள்ள?

    சமூகத்திற்கு என்னாலான பங்களிப்பு! ஓகே!
    ஜஸ்ட் டைம் பாஸ், மச்சி! ம், ஓகே!
    வேறு எங்கு கொட்ட, அதனால் இங்கு கொட்டுகிறேன்…

    …ம் பொறுங்கள், அந்த கடைசி பாயிண்ட் திரும்ப படியுங்கள். அப்படியானால் அதனால் தான் இது வரை கொட்டபடாத விஷயங்கள் முதல் முறையாக கொட்டபடும் போது புது வகையான அதிர்ச்சியை கொடுக்கின்றனவா? யோசியுங்கள்! யோசியுங்கள்!


  • கூகுள் ரீடரில் தமிழ் வலைப்பதிவுகளை ஒட்டுமொத்தமாய் வாசிக்கும் அனுபவம் என்னுடைய நீண்ட கால வாசிப்பனுபவத்தை குடிக்காரன் மனநிலைக்குதள்ளி விட்டது என்று சொல்லலாம். பதினொரு வருடங்களுக்கு முன்பு ஆறாம்திணை இணைய இதழில் பணிபுரிந்த காலம் தொடங்கி இன்று வரை தமிழ் எழுத்துகள் இணையத்தில் வலம் வருவதை பார்த்து வந்திருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழில் வலைப்பதிவுகள் எண்ணிக்கையில் பல மடங்கு அதிகரித்து இருக்கின்றன என்று தோன்றுகிறது. சிலர் ஆரம்பித்த ஜோரில் தங்கள் வலைப்பதிவினை கை கழுவி போனாலும் நிறைய பேர் தங்களது வலைப்பதிவை சீரியஸான விஷயமாக எடுத்து கொண்டு அவ்வபோதாவது எழுத தான் செய்கிறார்கள்.

    எழுதுவது என்றால் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என்று இதை வகைப்படுத்தி விட முடிவதில்லை. குமுதம், ஆனந்த விகடன் மற்றும் அதன் பிரதி பத்திரிக்கைகள் எல்லாவற்றிலும் இருக்கும் சரக்கினை விட இன்றைய தமிழ்கூறு வலைப்பதிவுலகம் ஆபாரமான சரக்குகளை பதித்தபடி அதுவும் ரியல் டைமில் பதித்தபடி இருக்கிறது. என்ன வேண்டும் சொல்லுங்கள், சினிமா விமர்சனங்களா? கவர்ச்சி படங்களா? புரணிக்கதைகளா? இலக்கிய கூட்டத்தில் நடக்கும் சைடு லைன் செய்திகளா? கட் அண்ட் பேஸ்ட் செய்திகள் மற்றும் கொஞ்சம் கருத்துகளா? பிரபல பத்திரிக்கைகள் கொடுக்கிற விஷயங்களை விட அதிகபடியான விஷயங்கள் இங்கு கொட்டுகின்றன. சில வலைப்பதிவுகள் சிற்றிதழ்களை விட கூடுதல் தகுதியுடன் மிளிரவும் தவறுவதில்லை. கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், தன் வாழ்வில் நடப்பதை சுவாரஸ்யமாக சொல்ல தெரிந்தவர், குறிப்பிட்ட பிரச்சனைகளை பற்றி தொடர்ந்து கதைத்து வருபவர் என தமிழ் வலைப்பதிவுலகில் வெரைட்டி கூடியபடி இருக்கிறது. Excel பற்றி ஒரு பிரத்யேக வலைப்பதிவு கூட கண்டேன். பெரும்பாலான அரட்டைகள் டிவிட்டருக்கும் பேஸ்புக்கிற்கும் இடம் பெயர்ந்து விட்டன. இதனால் தானோ என்னவோ இன்று தமிழில் வலைப்பதிவினை வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் கூடி கொண்டே போகிறது.

    பின்னிரவு நேரத்தில் எனது கூகுள் ரீடரை திறந்து தமிழ்கூறு வலைப்பதிவுலகம் இன்று என்ன பிளாக்கி இருக்கிறது என மேயும் போது அதன் வெரைட்டி பல சமயம் சுவாரஸ்யமாகவும் சில சமயம் வெறுமையையும் ஏற்படுத்தி விடுகிறது.

    பல பேர் சமூகத்தை பற்றி நிறைய கவலைப்படுகிறார்கள். அக்கிரமத்திற்கு அட்வைஸ் செய்கிறார்கள். சில பேர் தங்கள் அஜண்டாவை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அதற்கான போஸ்டர், அட்வர்ட்டைஸ்மெண்ட்கள் தான் அவர்களது வலைப்பதிவுகள். நல்ல வேளை இந்த SEO, Google ranking போன்ற விஷயங்கள் இன்னும் தமிழ் வலைப்பதிவுலகத்தினை ஆக்கிரமிக்கவில்லை. அப்புறம் அந்த பார்முலா எழுத்துகள் வேறு கொட்ட தொடங்கி விடும். அதே போல paid reviewகளும் இன்னும் பரவலாகவில்லை.

    எனக்கு மனித மனதின் விசித்தரம் தான் கூகுள் ரீடரில் மேயும் போது முகத்தில் சட்டென அறைகிறது. முக்கியமாக மனித மனதின் ஆணவம் தாம் இதற்கு காரணம். இதை மனித மனதின் கம்பீரம் என்று கூட சொல்லலாம். எந்த வார்த்தைகளால் சொன்னாலும் ஓர் அப்பாவி தமிழ் மனதிற்கு இது பயமுறுத்தும் விஷயமாக இருப்பதும் உண்மை. பெரிய பத்திரிக்கைகளில் இதே வகையான எழுத்துகளை படிக்கும் போது இந்த பட்டவர்த்தனம் கண்களில் இருந்து ஒளித்து வைக்கபட்டிருந்தது. ஆனால் நம்மை போன்றவர்கள் அதை எழுதும் போது அந்த ஒளித்து வைத்தல் அல்லது அந்த பத்திரிக்கை பிராண்ட் தன்மை இல்லாது போவதால் எழுத்திற்கு பின்னால் இருக்கும் மனிதினை வாசிக்கும் துணிச்சல்
    வருகிறது. ஆனால் மனதின் நேர்மையை பற்றி கேள்வி கேட்கவே முடியாது. மனதில் இருப்பது கீபோர்டு வரை வருவதற்குள் பல சென்சார் கமிட்டிகளை தாண்டி பல சுய தீர்மானங்களால் வடிகட்டபட்டு தானே ஆக வேண்டும். இந்த வடிகட்டல், சென்சார் இதையெல்லாம் தாண்டிய சிறிதளவாவது நேர்மையான எழுத்துகள் எனக்கு சமீப காலமாய் பிடித்தமானவைகளாக இருக்கின்றன. சிற்றிதழ் ஆட்கள் சிலர் இப்படியாக தான் இருக்கிறார்கள். அப்புறம் மொக்கை போடுகிறேன் பேர்வழி என உண்மைகளை உடைத்து பேசும் ஆட்களும் இதே வகையறா தான். இப்படியான விசித்திரங்கள் நிரம்பியிருப்பதால் தான் தமிழ் வலைப்பதிவுலகம் தற்போது இது வரை கிடைக்காத வாசிப்பனுவத்தை கொடுக்கின்றன. அந்த அனுபவம் இதற்கு முன்பு வேறு எங்கும் கிடைத்ததில்லை. இதற்கு முன்பிருந்த வெள்ளை தாளினை மேயும் கண்கள் கொடுத்த வாசிப்பனுபவங்களை எல்லாம் தூள்தூளாக்கி வேறொரு கட்டத்திற்கு மனதினை தயார் செய்கின்றது.


  • அவன் கைதான மறுநாள்.
    சூரியன்.
    நெற்றியில் வியர்வை.
    பாதையில் செருப்பற்ற கால்களை துன்புறுத்தும் முட்கள்.
    நாவினில் தாகம்.
    நிழல் கூட சுருங்கி கொண்டு விட்டது.
    சந்தையின் மணம் மட்டுமே மிச்சமிருக்கும் வெற்றுவெளியில் நடந்து கொண்டிருக்கிறேன்.
    தூரத்தில் ஒற்றை குடிசைக்கு வெளியே கொலையானவனின் சகாக்கள் சீட்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
    பாலை நிலத்தில் ஒற்றை ஆளாய் என்னை தூரத்திலே பார்த்திருக்கக்கூடும்.
    ஆட்டத்தை நிறுத்தி விட்டு சேர்ந்து நிற்கிறார்கள்.
    என்னால் மரணத்தை காற்றில் உணர முடிகிறது.
    எல்லா திசைகளிலும் அவர்களது பார்வை அலைபாய்கிறது.
    என் கையில் இருந்து ஊற்றிய உதிரத்தை வேட்டியில் துடைத்து விட்டு ஓடுகிறேன்
    கொடூரமாய் ஓலமிட்டபடி அவர்களை நோக்கி.


  • எங்களுக்கு கல்வி வேண்டாம்.
    எங்கள் எண்ணங்களை நீங்கள் கட்டுபடுத்த வேண்டாம்.
    பள்ளிக்கூடத்தில் வார்த்தைகளில் விஷம் ஊற்ற வேண்டாம்.
    குழந்தைகளை தனியாக விடுங்கள்.
    ஆசிரியர்களே குழந்தைகளை தனியாக விடுங்கள்.
    எல்லாமே சரியாக தான் இருக்கிறது.
    சுவரில் அது மற்றொரு செங்கல்லாக தான் இருக்கிறது.
    நீங்களும் அங்கே இன்னொரு செங்கல் தான்.

    – பிங்க் ஃபிளாயிட், ராக் இசை கலைஞர்

    கட்டாய கல்வி என்று ஒன்று கிடையாது. கல்வி எங்கள் அடிப்படை உரிமை என்கிற வாசகமே சரியாக இருக்கும். கல்வியுரிமை (right to education) ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று அமுலுக்கு வந்ததாக சொல்லி இருக்கிறார்கள். வழக்கம் போல பாராட்டு வாசகங்கள், சிற்சில விமர்சனங்கள். ஆனால் அதிகார பாதைக்கு இது ஒரு மைல் கல். தங்களுடைய பெருமையாக பறைசாற்றி கொள்ள ஒரு சாதனை.

    ஆறு வயதில் தொடங்கி 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கல்வி அளிக்கபட வேண்டும். தற்போது 22 கோடி குழந்தைகள் இந்த வயதில் இருக்கிறார்கள். இதில் 1.1 கோடி பேர் பள்ளிக்கூடத்திற்கு வந்ததே இல்லை. இன்று உலகத்திலே அதிக படிப்பறிவில்லாதவர்கள் வசிக்கும் தேசம் இந்தியா தான். உலகளவில் படிப்பறிவு உள்ளவர்கள் விகிதம் 84 சதவீதமாக இருக்கிறது. இந்தியாவிலோ இது 66 சதவீதமாக இருக்கிறது. இந்த பின்புலத்தில் அரசாங்கத்தால் அறிவிக்கபட்டிருக்கும் இந்த புது ‘உரிமை’ எத்தனை தூரம் மாற்றத்தினை கொண்டு வரும்? எந்த திசையில் இனி நாம் பயணப்பட வேண்டும்?

    இந்திய அரசாங்கம் மகத்துவமான வளர்ச்சி பாதையில் தான் பயணிப்பதாக ஒரு மாய பிம்பத்தினை நடுத்தர வர்க்கத்தினரிடையே ஏற்படுத்த முனைந்தபடி இருக்கிறது. பிரச்சனைகளை ஒப்பு கொள்ளாமல் அதற்கான தீர்வு நோக்கிய பயணம் தொடங்காது. உலகிலே அதிக படிப்பறிவில்லாதவர் வாழும் இந்த தேசத்தில் ‘படிப்பறிவுள்ளவர்கள்’ என்று யாரை இவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த கேள்விக்கான பதில் சற்று கடினமானது.

    யுனெஸ்கோ நிறுவனம் படிப்பறிவு (literacy) என்பது பதிப்பிக்கபட்ட மொழியொன்றின் பல்வேறு பிரதிகளை இனம் காணுதலும், புரிந்து கொள்ளுதலும், அதை எழுத தெரிதலும் என வரையறுக்கிறது. இதை இன்னும் நீட்டி யுனெஸ்கோ, இந்த படிப்பறிவானது அந்தந்த மனிதர்களின் அறிவனை வளர்த்து கொள்ள உதவுவதாகவும், அதன் மூலம் அவர்கள் தங்களது வளர்ச்சிக்கும், தங்களது சமூக மற்றும் மனித இன வளர்ச்சிக்கு பங்களிக்க உதவுவதாகவும் இருக்க வேண்டுமென பொருள் காண்கிறது. இந்திய சென்சஸ் பொருளுரையில் இந்த வரையறை சுருங்கி படிப்பறிவு என்பது ஏழு வயதோ அதற்கு மேலோ ஆனவர்கள் எழுதவும் படிக்கவும் தெரிதல் என்பதாக இருக்கிறது. கையெழுத்து போட தெரிதல் என்கிற அளவிற்கு இது சுருங்கி விடுகிறது.

    படிப்பறிவு என்பது என்ன என்று சென்சஸ் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும், யதார்த்தத்தில் இன்று சமூகத்தில் நாம் பார்ப்பது என்ன? கல்வி என்பது வணிகமயமாகி விட்டது. காரணம் அது வேலை வாய்ப்பிற்கான தகுதி. கல்வி என்பது வேலை வாய்ப்பு தகுதி என்பதாக சுருங்கி விட்டது. ஏன் நாம் நமது கல்வி அமைச்சகத்தில் தொடங்கி கிராமத்து பள்ளிக்கூடம் வரை கல்வி என்கிற வார்த்தை எங்கெல்லாம் பயன்படுகிறதோ அங்கெல்லாம் கல்விக்கு பதிலாக ‘வேலை வாய்ப்பு தகுதி’ என்கிற ப


  • எப்படி துரத்தினாலும் அடுத்த நாள் காலை
    மீண்டும் கூரையில் தோன்றும் குரங்குகளை போல
    கறை படிந்து தான் போகிறது
    எனது சட்டையில்.

    நண்பன் இறந்து போன நாளில்
    அவனுடைய சடலத்தை தூக்க தயங்கிய கணத்தில்
    கறையின் நிறம் மாறி போனது.


  • இந்த வாரம் உயிர்மை குழுமத்தின் இணைய இதழான உயிரோசையில் என்னுடைய ‘பிச்சையும் வேண்டாம்! தானமும் வேண்டாம்!’ என்கிற கட்டுரை வெளிவந்து இருக்கிறது. ஊடகங்களில் பணிபுரிய தொடங்கி ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு மேலாகியும், எனது கட்டுரை வேறொரு ஊடகத்தில் பதிக்கபட்டிருப்பதை பார்க்கும் போது இன்றைக்கும் என் மனம் சந்தோஷத்தில் பொங்குவதை என்ன என்று சொல்ல! கட்டுரையை மீண்டும் படித்த போது அதன் நீட்சியாக சில எண்ணங்கள் தோன்றின. அதை பதிவு செய்ய தான் இந்த தொடர்ச்சி.

    இந்திய அரசாங்கத்தின் பதினொன்றாவது திட்ட அறிக்கை ஒரு முக்கியமான இலக்கினை வரைந்திருக்கிறது. நாட்டின் அடித்தட்டு மக்களுக்கும், விளிம்புநிலை மனிதர்களுக்கும் வளர்ச்சியின் பங்கு சரியான அளவு கொண்டு சேர்க்கபட வேண்டும் என்பது தான் அந்த இலக்கு. கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் இது சாதாரண காரியமாக இருக்க போவதில்லை. பெரும்பாலும் பேப்பர் திட்டங்களாக மலர்ந்து விடுமோ என்பது தான் இப்போதைய அச்சம்.

    வளர்ச்சியின் பங்கினை கொடுப்பது என்பது எப்படி? இயேசு கிருஸ்து உன்னிடம் இரண்டு ரொட்டி இருந்தால் ஒன்றினை இல்லாதவனிடம் கொடு என்றார். தீவிர கிருஸ்துவ பெண் ஒருத்தி விடாமல் என்னிடம் பிரச்சாரம் செய்த போது உன்னிடம் இருக்கும் சூடிதார்களை ஏழை பெண்களுடன் பங்கிட்டு கொள் என்று சொன்னதும் வாயடைத்து போனாள். பங்கிடுதல் என்றால் தானமிடுதலோ பிச்சையோ அல்ல. அது அதிகார பகிர்வில் இருந்து தான் தொடங்கும்.

    விளிம்பு நிலைக்கு அதிகார பகிர்வு முடியுமா? அதிகாரம் என்பது இன்று இந்தியாவில் இறுக்கமாகி கொண்டிருக்கிறது. அதிகார பரவலாக்கம் நடக்க வேண்டிய காலகட்டத்தில் ஓரிடத்தில் அதிகார குவிப்பு என்பது கன ஜோராக நடக்கிறது. இன்னும் உள்ளாட்சி அமைப்புகளுக்கே அதிகாரம் வழங்கபடாத சூழல். இந்நிலையில் அதிகாரத்தின் கோபுரத்தில் இருப்பவர்கள் தவிர மற்ற அனைவரும் அந்த இடத்திற்கு நெருங்கவே சிரமப்படும் நிலையில் விளிம்பு நிலையில் இருப்பவர்கள் அதிகாரத்தை நினைத்து பார்க்கவே முடியாது. இந்த இறுக்கமான அதிகார கட்டமைப்பு இன்னும் சில காலத்திற்கு உடைபட வாய்ப்பில்லை. அதனால் பதினொன்றாவது திட்ட அறிக்கையின் இலக்கு வெறுமனே ‘இலவசங்கள், தானங்கள், பிச்சைகள்’ என்கிற அளவில் பேப்பர் திட்டங்களாக மாறி போய் விடும் என்று தோன்றுகிறது.

    நிலப்பிரபுத்துவ சமூகத்தில் பண்ணையார்கள் கூலியாட்களுக்கு தானமளிப்பது போல அரசியல்வாதிகள் மேடையில் நின்று போட்டோ பிளாஷ்களுக்கு இடையே தானமளிக்க போகிறார்கள் என்பது மட்டும் உறுதியாகிறது.

    • அரசியல் அதிகார பரவாலக்கத்திற்கான சாத்தியபாடுகளை உருவாக்குதலே இப்போது முதன்மையானது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதற்கு உரிய அதிகாரம் உடனடியாக வழங்கபட வேண்டும். (படிக்க: மாநில சுயாட்சி நமக்கு தேவையா? & வோட்டு போடுவது மட்டும் தான் ஜனநாயக கடமையா?)
    • இலவசங்களை தானங்களை நம்பி ஏமாறுபவர்களுக்கு அவர்களுக்கான உரிமைகளை பற்றி விழிப்புணர்வு உருவாக்கபட வேண்டும்.
    • அதிகாரத்தினை நோக்கிய பயணம் முட்களினால் அல்ல, பங்கிடுதலால் சாத்தியமாக வேண்டும்.

    படம்: ‘300’ ஆங்கில திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சி.


  • அடிமைகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் சுகம்.
    வேலைகளை ஏவலாம்.
    கோபத்தைக் கொட்டலாம்.
    அடிக்க கூட செய்யலாம்.
    வல்லுறவு கொள்ளலாம்.
    நம் காலில் விழுந்து அவர்களை அழ வைக்கலாம்.

    “மன்னித்து விட்டேன் இந்த முறை பிழைத்து கொள்,” என்று மட்டும் சொல்லாதீர்கள்.
    அதற்குப் பதில் அவர்களை கொன்று விடலாம்.


  • மோகம் வென்று
    கழுத்தை அறுத்து இரத்தம் குடித்து
    உதிரப் படுக்கையில் தூங்கும் போது
    வருவதெல்லாம் துர்கனவுகள்.
    இரத்தம் பீறிடும் போது எப்படி வலிக்கும்?
    என்னுள் குத்திய ஊசிகளின் எண்ணிக்கை
    அதிகரித்து கொண்டே இருக்கின்றன.
    இத்தனை வலியையும் கொடையளிக்க
    தினம் தினம் திரிகிறேன்
    சிலுவையை சுமந்தபடி.


  • சற்று முன்பு எனது வார்த்தைகளை திருடிச் சென்றவன்

    இதோ இந்த நகரின் ஏதோ ஓர் இருள்சந்தினுள்

    அதனை திறந்து பார்ப்பான்.

     

    எதை எடுத்து கொள்வான், எதை எறிந்து செல்வான் என தெரியவில்லை.

    திருடியவன் தன் வழியில் எங்காவது எதாவது கொட்டி இருக்கிறானா என

    என் பாட்டி பாதை எங்கும் தேட போய் விட்டாள்.

    மௌனத்தை வாயில் மென்றவாறு சலித்து கொள்கிறேன் நான்.