• இருளின் ஊடாக குருதி மழையில்
    நனைந்து கிடக்கிறோம்
    நாங்கள் இருவரும்.
    அவள் இதழோரம் கொஞ்சம் மிச்சமிருக்கிறது
    அவளால் கொல்லபட்டவனின் இரத்தம்.
    செந்நீரின் சுவைக்காக ஏங்கி கிடக்கிறேன்
    நான்.

    நிலவை இழந்த வானத்தில்
    அவ்வபோது மின்னி மறைகிறது
    ஒற்றை வெள்ளை கோடு.
    கோட்டானின் கதைத்தலும்
    வௌவால்களின் இறைச்சலும் தூரத்தில்.

    பிணங்களின் கனவுகள்
    மேகங்களாய் மேலெழுந்து
    பாழடைந்த மாளிகையின் சுவர்களில் அப்பி
    சிதைவுகளில் கொஞ்சம் தப்பி போகிறது.

    ஜன்னல், கதவுகளில் மரச்சட்டங்கள்
    சடசடவென உடைகின்றன.
    இறக்கைகளை அடித்தபடி
    யாரோ பறந்து போகிறார்கள்
    கீழ்வானத்தை நோக்கி.

    அவள் கண்களில் காதல் பொங்க
    என்னை பார்க்கிறாள்.

    பின்னிரவு பனியில் உறைய தொடங்குகிறோம்.

    பிறகு
    ஞாயிறு எங்களை மனிதர்களாக மாற்றியது.


  • சருகுகள் கூட இல்லாது போன நிலப்பரப்பில்
    பட்டு போன மரம் போல
    அதன் காய்ந்த பட்டை போல
    அவன் கிடக்கிறான்.

    கேள்விகுறி போல கிடக்கிறது
    அவன் உடல்.
    முதுமையும் காயங்களும் உடலெங்கும்.

    ஆரவாரமான கூட்டம் கடந்து போகும்
    அதே சாலையில் தான்
    அவனும் கிடக்கிறான்.

    கூட்டத்தின் ஒலி
    அவனை தொடும் போதெல்லாம்
    புரண்டு படுக்கிறான்
    தன் கிழிசல்களோடு.

    கறுப்பு வெள்ளை புகைப்படமாய் எடுத்தால்
    மனதை கலைத்து போடும் சித்திரம்.

    அவனை என் கவிதையாய் எழுத
    வார்த்தைகளை தேடி கொண்டிருக்கிறேன்.
    அவனுடைய பார்வை எத்தனை கூர்மையானது என்பதை
    இன்னும் நான் அறியவில்லை.


  • நான்கைந்து நாட்களாக ஒரே உடை.
    கலைந்த தலைமுடி.
    தாடி.
    இமைக்காதது போல அலைபாயும் கண்கள்.
    சிந்தனையைப் போர்த்திக் கொண்ட உடல்.
    குப்பையில் எறிவதற்கு முன்
    கவனமாய் காகிதங்களை
    மடித்து மடித்து வைக்கிறான்
    தினந்தோறும்.

    சாப்பாடு பார்சலாய் வந்த தினசரிகள்,
    பழைய பில்கள்,
    என்றோ உதிர்ந்து போன பத்திரிக்கைத் தாள்கள்,
    மற்றும்
    அவனுடைய கிறுக்கல் பக்கங்கள்.

    காகிதங்களில் இருந்து உதிர்கின்றன
    ஒவ்வொரு எழுத்தாய்.


  • எங்கள் தெருவிற்குள் நுழைவதற்கு அந்த மதுக்கடையை தாண்டி தான் வந்தாக வேண்டும். இரவு எட்டு மணிக்கு மேலே மதுக்கடையை சுற்றி கும்பலாய் ஆட்கள் குழுமி இருப்பார்கள். தெரு விளக்கு வேறு பல சமயங்களில் எரியாது. அந்த அக்கா ஜீன்ஸ் பேண்டும் கையில்லாத சட்டையும் போட்டு கொண்டு நாலைந்து தடவை மார்க்கெட்டிற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருப்பாள். அவள் அந்தக் கடையை தாண்டி தெருவிறகுள் நுழையும் போதும் வெளியேறும் போது சட்டென பேச்சரவம் குறைந்து அனைவரது கண்களும் அவள் மேல் தான் இருக்கும். தெருவிற்குள்ளோ அனைத்து பெண்மணிகளுக்கும் அவள் தான் பேசு பொருள்.

    அவள் பேரு ரேகா. கோபத்தை எப்போதும் முகத்தில் சுமந்து இருக்கவில்லை என்றால் மிக அழகானவளாய் இருந்திருப்பாள். ரொம்ப திமிரானவள் என்று எல்லாரும் அவளை சொல்வார்கள். அதற்காகவே அவள் இன்னும் திமிருடன் திரிய தொடங்கினாள். என்றும் அவள் வெட்கப்பட்டோ பயப்பட்டோ பார்த்ததே இல்லை. பார்வையில் படும் யாரையும் கண்டுகொள்ளவே மாட்டாள். ஆளற்ற சாலையில் செல்பவள் போல பதட்டமில்லாமல் நடந்து போவாள். அவள் சிரித்து யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவளது வாழ்க்கை அப்படி. மனநிலை சரியில்லாத தாய். குடிக்கார தந்தை. மாதத்திற்கு நாலு முறை ஊரை விட்டு போய் விடுவார். எங்கு போனார் எப்போ வருவார் என்று யாருக்கும் தெரியாது. பள்ளிக்கூடத்தில் படிக்கும் தங்கை. ரேகா தான் குடும்பத்தை நடத்தி வந்தாள். கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டு ஒரு கம்பெனியில் கணக்கு எழுத போய் விட்டாள். ஒவ்வொரு நாளும் வீட்டிற்கும் வேலை செய்யும் இடத்திற்கும் நாற்பது கிலோமீட்டர் தூர பயணம். அதுவும் சென்னை டிராபிக்கில் காலையில் இரண்டு மணிநேரம் மாலையில் இரண்டு மணிநேரம் என அவளது நேரத்தை அவளது பயணமே தின்றது. ஆனால் அவள் களைத்து நின்றது கிடையாது.

    ரேகாவிற்கு நண்பர்கள் என்று யாரும் கிடையாது. ஆம்பிள்ளைங்களை நம்பவே கூடாது என்பது சண்டை நேரங்களில் அவள் சொல்லும் வாக்கியம். ஒரு முறை அவளை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் ஒரு தாடிக்காரனோடு பார்த்ததாக எனது பள்ளிக்கூடத்து நண்பன் ஒருவன் சத்தியம் செய்து சொன்னான். நல்ல வேளை தாடிக்காரனோடு பார்த்த விஷயம் எங்கள் தெரு பொம்பளைங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்களது புரணி கற்பனை முழுவதும் ரேகாவைச் சுற்றியே பெரும்பாலும் இருக்கும். முக்கியமாக அவள் அணியும் உடைகள் தான் துவேஷத்தை கிளப்பும்.

    ஒருமுறை இரவு பத்து மணிக்கு அவளது வீட்டில் பெரும் கூச்சல் சத்தம். அவளது தாய் காச் மூச்சென கத்தி கொண்டிருந்தாள். தெருவில் இருக்கிற எல்லா குடும்பங்களும் வெளியே வந்து விட்டன வேடிக்கை பார்க்க. ரேகாவின் தந்தை வழக்கம் போல நான்கு நாள் காணாமல் போய் விட்டு இன்று தான் வீடு திரும்பி இருக்கிறான். போகும் போது வீட்டில் இருந்த பணத்தைத் தூக்கி கொண்டு போய் விட்டான் போல. ரேகாவிற்கும் அவனுக்கும் சண்டை. சண்டை இன்று அதிகமாகி ஒருகட்டத்தில் அவள் துடைப்பத்தை வைத்து தகப்பனை அடிக்க தொடங்கி விட்டாள். தாய் கதறுகிறாள். தங்கை விக்கித்து நிற்கிறாள். அப்பன்காரன் அடி வாங்கி கொண்டு சிலை போல நிற்கிறான். தெருவே வேடிக்கை பார்க்கிறது. யாருக்கும் அவளை எதிர்த்து பேச தைரியமில்லை. முணுமுணுப்போடு நிற்கிறார்கள். ஒருகட்டத்தில் ரேகா சோர்ந்து போய் துடைப்பத்தை கீழே போட்டாள். தூ என்று அப்பாவின் முகத்தில் துப்பினாள். வேகமாய் வீட்டிற்குள் போனாள். ஒரு கறுப்பு நிற பையில் அப்பாவின் உடைகளை போட்டு அதை கொண்டு வந்து தெருவில் எறிந்தாள். சிலை போல அவமானத்தைத் தாங்கி கொண்டிருந்த அவளது அப்பா எதோ பேச வாய் திறந்தார். அவள் எட்டி அவரது இடுப்பில் உதைத்தாள். இன்றும் அந்த காட்சியை சொல்லி சொல்லி எங்க தெரு ஆண்களும் பெண்களும் அவளை தூற்றுவார்கள்.

    அவளது அப்பா அதற்குப் பிறகு பல மாதங்கள் வீட்டிற்கே வரவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்றே யாருக்கும் தெரியாது. அப்படி ஒருவர் இருக்கிறார் என்பதையே எல்லாரும் மறந்து போய் இருந்தோம். பிறகு ஒரு நாள் குடிபோதையில் தள்ளாடி தள்ளாடி அவர் ரேகா இல்லாத சமயமாய் வீட்டிற்கு வர தொடங்கினார். பிறகு மெல்ல பழைய கதை மீண்டும் தொடங்கியது.

    ரேகாவிற்கு திருமணம் நடக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதுவும் அவளுக்கு ஆண்கள் மீது எவ்வளவு வெறுப்பு என தெரிந்தவர்கள் அவளுக்கு காதல் திருமணம் என்று சொன்னால் நம்பவே மாட்டார்கள். ஆனால் அவளுக்கு காதல் திருமணம் நடந்தது. அவளோடு வேலை செய்த ஓர் ஆள். பார்ப்பதற்கு நல்லவன் மாதிரியே இருந்தான். மாப்பிள்ளையோட தாய் தான் ஆரம்பத்திலே வில்லி போல தெரிந்தாள். நினைத்தது போல மாமியார் மருமகள் சண்டை உடனே ஆரம்பிக்கவில்லை. சொல்ல போனால் தொடக்க காலத்தில் மாமியாருக்கு ரேகா மீது நிறைய பிரியமிருந்தது.

    சில மாதங்கள் கழித்து மாமியாருக்கும் ரேகாவிற்கும் உரசல் தொடங்கியது. என்ன என்ன காரணங்கள் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் காட்டுத்தீ போல இருவருக்கும் இடையில் பகை வளர்ந்து ரேகா மீண்டும் தாய் வீட்டிற்கு வந்தாள். சில நாட்கள் கழித்து அவளது கணவனும் அங்கேயே வந்து விட்டான். அப்போது ரேகா கர்ப்பமாய் இருந்தாள். பிரசவ சமயத்தில் அவளது மாமியார் வந்தாள். குழந்தையை மாமியார் தொடவே கூடாது என்பதில் ரேகா உறுதியாக இருந்தாள். மருத்துவமனையிலே பெரிய வாக்குவாதம் நடந்தது. ரேகாவின் புருஷன் கோபித்து கொண்டு அவனுடைய தாய் வீட்டிற்கு போய் விட்டான்.

    பல மாதங்கள் கழித்து ஒரு நாள் மாலை ரேகாவின் கணவன் தரப்பு உறவுக்காரர்கள் இரு வயசாளிகள் ரேகாவின் மாமியாரோடு எங்கள் தெருவிற்கு வந்தார்கள். ரேகா அவர்களை உள்ளே கூட கூப்பிடவில்லை. வெளியே நிற்க வைத்து தான் பேசினாள்.

    “குழந்தைய ஒரு முறை தூக்கி பார்த்துட்டு போயிடுறேன்ம்மா,” என்றாள் மாமியார்காரி. இந்த முறை காலில் விழுந்து விடுவாள் என்கிற அளவிற்கு கெஞ்சினாள். வீட்டு கதவு அவளுக்கு திறக்கபடவே இல்லை. வழக்கம் போல தெரு வேடிக்கை பார்த்தது.

    “பொம்பளைக்கு இவ்வளவு ஆணவம் கூடாது,” என்றார் பஞ்சாய்த்து பண்ண வந்த வயதானவர்.

    “டேய் போயிடு. இன்னும் ஒரு நிமிஷம் நின்ன உனக்கு மரியாதை இருக்காது,” என்று அந்த வயதானவரை பார்த்து உக்கிரமாய் கத்தினாள்.

    “பஜாரி கிட்ட எதுக்கு பேச்சு வளர்க்கிறீங்க, போயிடுங்க போயிடுங்க,” என்று யாரோ வேடிக்கை பார்ப்பவன் ஒருவன் கத்தினான்.

    “போங்கடா போக்கத்தவன்ங்களா,” என்று சொல்லி விட்டு எல்லாருக்கும் பொதுவாக மொத்தமாய் துப்பி விட்டு வீட்டின் கதவை சாத்தி கொண்டாள் ரேகா. வீட்டின் உள்ளே குழந்தையின் அழுகை ஒலி.

    நன்றி:

    படங்கள் – பேபோ

    மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


  • வானத்தை போர்த்தி இருக்கிறது இருள்.
    நகரத்தின் மீது கவிந்திருக்கிறது விளக்கு வெளிச்சம்.
    பிரதான சாலை, குறுக்கு சந்து எங்கும் வாகனங்கள்.
    முழுச் சுற்று போகாத சக்கரங்கள்.

    ஒருவரது தலையில் இருந்து ஊற்றுகிறது வியர்வை.
    இன்னொரு காரில் புலம்பியபடி இருக்கிறாள் ஓர் இளம்பெண்.
    பைக்கில் கண்களை மூடியபடி காத்திருக்கிறான் ஒரு வழுக்கை இளைஞன்.

    காத்திருத்தலின் வேதனையோடு கதறுகின்றன அவ்வபோது ஹாரன் சத்தம்.
    நடைபாதையில் தனது பேரனோடு விளையாடிக் கொண்டிருக்கிறாள் ஒரு கிழவி.
    வாகனங்களுக்கு இடையே பாதையை உருவாக்கி கொண்டு சாலையை கடக்கிறாள் ஒருத்தி.

    வானத்தை பார்த்தேன்.
    ஒளிக்கற்றையை இழுத்தபடி கீழ் இறங்குகிறது ஓர் எரிகல்.


  • நேற்று காலை பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. நேற்றைய மாலை நாளிதழ்களும் இன்றைய காலை நாளிதழ்களும் தேர்வு முடிவுகளையும் அதில் முதலிடம் வகித்தவர்களையும் பற்றி பக்கம் பக்கமாக எழுதி பிரசுரித்து இருக்கிறார்கள். புத்திசாலி பள்ளிக்கூடங்கள் தங்களது சந்தை மதிப்பை உயர்த்தி கொள்ள இந்த சந்தர்ப்பத்தை தான் எதிர்பார்க்கின்றன. மாவட்ட அளவில் தங்களது மாணவர் ஒருவர் எதாவது ஒரு பாடத்தில் முதலிடம் பெறுவதை நேரடி விளம்பரமாகவோ அல்லது ஒரு செய்தியாகவோ பத்திரிக்கைகளில் பிரசுரிக்க அவை ஆர்வமாய் ஓடி வருகின்றன. இன்று ஒரு பள்ளியின் முதல்வர் முதலிடம் பெற்ற ஒரு மாணவன் மற்றும் மாணவி இருவரையும் தன் இருபக்கமும் நிறுத்தி கை கோர்த்து கைகளை உயர்த்தி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து இருந்தார். குத்துச் சண்டை நடுவர், போட்டியின் இறுதியில் வெற்றியாளரை கையை உயர்த்தி அறிவிப்பாரே அப்படி இருந்தது அந்த போஸ்.

    எனக்கு தெரிந்து மகனின் தேர்விற்காக இரண்டு மாதம் மூன்று மாதம் தனது அலுவலகத்தில் விடுப்பு எடுத்த தாய்மார்கள் எல்லாம் உண்டு. பிளஸ் டூ தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்ணை தனது மகன் பெறவில்லை என்று நேற்று முழுவதும் வீட்டில் சமைக்காமலே சோகமாய் அமர்ந்திருந்த குடும்பங்களும் உண்டு.

    இப்போது வரை இரண்டு தற்கொலைகள். இன்னும் எவ்வளவு நூற்றுக்கணக்கான மாணவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் மன இறுக்கத்தில் மூழ்கியிருப்பார்கள் என நினைக்கும் போது மனம் பதறுகிறது.

    பிளஸ் டூ தேர்வுகள் தான் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம் என மத்திய வர்க்கம் தீர்மானமாய் நம்புகிறது. எல்லாருமே டாக்டர்களாகவும் என்ஜீனியர்களாகவும் மட்டுமே ஜீவிக்க முடியுமென்கிற மத்திய வர்க்க அபத்தம் இது.

    ஒரு தேர்வு ஒருவரது வாழ்க்கையை தீர்மானிக்கும் என சிலர் நினைக்குமளவு நமது கல்வி முறை ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கிறது? முதல் காரணம் கல்வி முறையை தீர்மானிக்க இங்கு சரியான கல்வியாளர்கள் கிடையாது. வாத்தியார்களை சொல்லவில்லை. கல்வி முறைகளை பற்றி ஆராய்ந்து அறிந்தவர்களை பற்றி சொல்கிறேன். அப்படிபட்டவர்கள் எண்ணிக்கையில் குறைவு. இருக்கும் சிலருக்கும் ஒழங்கான வாய்ப்பு கிடைக்கிறதா என தெரியாது. ஜால்ரா அடிப்பவர்கள் தான் இங்கு கல்வி முறையை தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கிறார்கள். ஜால்ராக்களுக்கு மாணவர்கள் பற்றியும் கல்வி முறை பற்றியும் அக்கறை இருக்குமா?

    பத்தாம் வகுப்பிற்கு பிறகு மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு கோர்ஸ்களை தேர்ந்தெடுக்கும் வசதி உண்டு. ஆனால் எல்லாரும் கணிதம்-உயிரியல் பாடத்திட்டத்திற்கு தான் ஓடுகிறார்கள். வருடத்திற்கு வருடம் மற்ற பாடத்திட்டங்களை தேர்ந்தெடுப்போரின் எண்ணிக்கை குறைந்தபடி இருக்கிறது. இதை இன்னும் மோசமாக்கும் வகையில் கடந்த ஆண்டு 2009-இல் ஜனவரி ஆறாம் தேதி அரசாங்கம் lithographic printing, training for medical lab assistants போன்ற அதிக பாப்புலர் இல்லாத கோர்ஸ்களை மூட போவதாக அறிவித்து விட்டது. எல்லாருமே டாக்டர்களாகவும் என்ஜீனியர்களாகவும் மட்டுமே ஜீவிக்க முடியுமென்கிற மத்திய வர்க்க அபத்தத்தினுள் அரசாங்கமும் இருக்கிறது என்பதை உணர்த்தும் சம்பவங்கள் இவை.

    ஒரு பக்கம் மத்திய வர்க்கத்தின் நிலைப்பாட்டை காசாக மாற்ற ஒவ்வொரு ஊரிலும் கல்வி தந்தைகள் (முன்னாள் சாராய வியாபாரிகள்?) பெரிய பெரிய வலையை விரித்து காத்திருக்கிறார்கள். இன்னொரு புறம் இதற்கு எதிலும் சம்பந்தமில்லாத மார்க் குறைவாக வாங்கிய மாணவர்கள். இந்த 1200 மார்க் ஒருவனது திறமையை நிரூபிக்கிறதா? நன்றாய் மனப்பாடம் செய்யும் திறன் இருந்தால் நல்ல மதிப்பெண் வாங்க முடியும் என்கிற நிலை தான் இன்றும். வருடம் வருடம் மாநிலத்தில் முதலிடம் வாங்கியவர்களும் மாவட்டத்தில் முதலிடம் வாங்கியவர்களும் பிறகு எங்கு காணாமல் போகிறார்கள்?

    வணிகமாகி போன நமது கல்வி முறையில் அதிக பாப்புலர் ஆகாத பாடங்களை/துறைகளை விரும்பும் மாணவர்களுக்கு மதிப்பில்லை. அவர்களை நசுக்கி வாழ்கிறது நம் சமூகம்.

    ஒவ்வொருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு. ஒரு பாடத்தில் தேறவே முடியாத ஒரு மாணவன் வேறு ஒரு துறையில் நன்றாக பிரகாசிக்க கூடும். எல்லாரையும் ஓட்ட பந்தயத்திற்கும் தயாராக்கும் குதிரைகள் போல் நினைப்பது அபத்தம். இந்த சிந்தனை எதிர்காலத்தில் நமது சமூகத்தையே திறனற்ற ஒன்றாக மாற்றி விடக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.

    இந்தியாவில் இயந்திரம் போல சொன்னதை செய்யும் பெரும் இளைஞர் கூட்டம் இருக்கிறது. அதனால் தான் ஐ.டி துறை இங்கு காலடி எடுத்து வைத்தது. ஒரிஜினல் ஐடியா என்று இந்தியாவில் இருந்து எத்தனை பேர் பிரபலமாகி இருக்கிறார்கள். மிக மிக குறைவு.

    நாட்டின் முக்கிய துறைகளை கரையான் போல் அரித்து கொண்டிருக்கும் ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் ஒரு புறம். மத்திய வர்க்கத்தின் அபத்தம் இன்னொரு புறம். இவற்றை எல்லாம் சாதகமாக்கி கொண்டு வணிகத்தில் புரளும் கல்வி தந்தைகள் (முன்னாள் சாராய வியாபாரிகள்?) மற்றொரு புறம். பெரும் சுமையோடு திரிகிறார்கள் மாணவர்கள்.

    நேற்று பிளஸ் டூ தேர்வை பற்றியே தனது எல்லா பக்கங்களிலும் செய்தி வெளியிட்டிருந்த ஒரு மாலை நாளிதழின் கடைசி பக்கத்தில் ஒரு முழுப்பக்க விளம்பரம் வெளியாகி இருந்தது. “ஒரு முறை தோத்தா வாழ்க்கை முடிஞ்சிடாது…” என்று தொடங்கும் அந்த விளம்பரம் வேந்தன் டூடோரியல் வெளியிட்ட விளம்பரம். ஐ லைக் இட்.


  • இந்த வலைப்பதிவினை தொடங்கி 12 மணி நேரத்தில் ஹேக்கிங் (hacking) நடந்தது. இப்போது முழுமையாய் துடைத்து எறிந்து விட்டு புதிய மென்பொருளில் மீண்டும் தொடங்கி இருக்கிறேன். எல்லாம் சரியாகி விட்டது.

    ஏறத்தாழ பதினொரு வருடங்களுக்கு முன் பிரவுசிங் சென்டர்கள் முதன்முதலாய் சென்னையில் முளைக்க தொடங்கிய நேரம். இணையத்தின் மீது ஒருவித பித்து போல பிரவுசிங் சென்டர்களுக்கு போய் கொண்டிருப்பேன். யாகூ தான் அப்போது பிரபலமான தளம். மின்னஞ்சல், குரூப், சாட் என பிரவுசிங் என்பது யாகூவில் தான் பெரும்பாலும் இருக்கும். யாகூவில் அப்போது geocities என்றொரு பகுதி இருந்தது. அதாவது இணையத்தில் இலவசமாய் உங்களுக்கென்று ஓரிடம். இப்போது blogspot போல என வைத்து கொள்ளுங்களேன். முதலில் நமது ஆர்வத்திற்கு ஏற்ற வகையில் நமக்கு இணையத்தில் இலவசமாய் இடம் கொடுப்பார்கள். அதாவது எனக்கு கலை மற்றும் இலக்கியத்தின் மீது ஆர்வம் என்றால் பாரீஸ் என்கிற இடத்தில் (yahoo.com/geocities/paris/0968 என்பது போல) இடம் கொடுப்பார்கள். (இதைப் பற்றி எழுத்தாளர் அம்பை கூட எதோ ஒரு கதையில் குறிப்பிட்டு இருப்பதாக ஞாபகம்.) ஆனால் இந்த யாகூ ஜியோசிட்டிஸ் வலைப்பக்கத்தை உருவாக்க தொழில்நுட்பம் இப்போது போல அப்போது எளிமையானது அல்ல. தொழில்நுட்பத்தை அறியாதவர்கள் அதில் கொடுக்கபட்டிருக்கும் filemanager, upload, custom designer போன்ற சில விஷயங்களை அப்போதைய பிரவுசிங் ஸ்பீட்டில் அணுகுவதே கஷ்டமாக இருக்கும். அதில் மணிக்கணக்காய் உட்கார்ந்திருப்பேன். இணைய பக்கம் உருவாகுவதை கூட இருந்து கவனிப்பது ஒரு நல்ல உணர்வை உள்ளுக்குள் ஏற்படுத்தும்.

    Blogspot வந்த போதும் அதில் நான் வடிவமைப்பு விஷயங்களுக்காக மணிக்கணக்கில் நேரம் செலவிட்டது உண்டு. என்னுடைய செவ்வாயக்கிழமை கவிதைகள் பிளாக்கர் வலைப்பதிவை தொடங்கிய காலத்தில் இருந்து கவனித்தவர்கள் இதனை உணர்ந்திருக்க கூடும். பதிவு எழுதுவதற்கு நேரம் இந்தளவு ஒதுக்கியிருந்தால் இன்னும் நிறைய பதிவுகள் எழுதியிருக்க முடியும்.

    அது போல நான் இந்த வலைப்பதிவை சொந்தமாய் இணையத்தில் உருவாக்க நினைத்த போது எனக்கு wordpress.com-க்கும் wordpress மென்பொருளுக்கும் கூட வித்தியாசம் தெரியாது. நண்பர் ரவிசங்கர் தான் என்னுடைய சொந்த வலைப்பதிவு ஆசையை செயலாக்கி கொடுத்தார். பிறகு தான் கூகுள் உதவியால் இந்த மென்பொருளை புரிந்து கொண்டேன். கடந்த திங்கட்கிழமை மதியம் இந்த வலைத்தளம் எனக்கு முழுமையாக கிட்டியவுடன் பல மணி நேரங்கள் லே அவுட்டில் செலவழித்து கொண்டிருந்தேன். நடுவில் நண்பர் பாலபாரதி ஆன்லைனில் வந்து ஒரு வாழ்த்து கமெண்ட் கூட போட்டு விட்டு போனார்.

    நான் இப்போது பயன்படுத்துவது reliance netconnect வயரில்லா இணையச்சேவை. இரவு பத்து மணிக்கு முன் ஒரு கட்டணம் அதற்கு பிறகு ஒரு கட்டணம் என்கிற மாதிரியான அமைப்பு. அதனால் இரவு பத்து மணிக்கு சரியாக இணைப்பை துண்டித்து விடுவார்கள். அப்படி அன்றிரவும் இணையத்தொடர்பு பத்து மணிக்கு துண்டிக்கபட்டது. நான் மீண்டும் இணையத்தொடர்பை உருவாக்கி வேர்ட்பிரஸ் அட்மின்னுக்குள் நுழைய முயன்றேன். பயனர் பெயர் தவறு என வந்தது. எதோ தவறாக தட்டச்சு செய்து விட்டேன் என்று நினைத்து மீண்டும் மீண்டும் முயன்றேன். முடியாது போடா என்கிற மாதிரி வேர்ட்பிரஸ் என்னை வாசலிலே வைத்து நிறுத்தி விட்டது. பிறகு இந்த பயனர் பெயர், கடவுச்சொல் என்ன என்பதை சரி பார்த்து குழம்பினேன்.

    இந்த நேரத்தில் தான் எதோ ஒரு கணத்தில் என்னுடைய வலைப்பதிவின் முதல் பக்கத்தை கண்டேன். ஒரு கணம் அது தவறான முகவரி என்று தோன்றியது. இல்லை அது என்னுடைய வலைப்பதிவு தான். நான் மணிக்கணக்கில் ரசித்து செய்திருந்த லே அவுட் எதுவுமே இல்லை. அதற்கு பதிலாக முற்றிலும் அன்னியமாக ஒரு பக்கம். ஆனால் அதில் hacked என்கிற ஆங்கில வார்த்தை மிக அழகாக கறுப்பு பக்கத்தில் சிவப்பில் மின்னிக் கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு சாத்தான் படம். அதோடு கேம் என்றொரு நபர் இந்த வலைப்பதிவை hack செய்து விட்டதாக எழுதபட்டிருந்தது. பிறகு அவரது வலைத்தள முகவரி. 2004இல் இருந்து hacking செய்வதாக ஓர் அறிவிப்பு. இரண்டு மூன்று வரிகள் புரியாத மொழியில் எழுதபட்டிருந்தன. கடைசி வரி ஆங்கிலத்தில் இருந்தது. அது முகத்தில் அறைவது போல என்ன நடந்தது என்பதை எனக்கு உடனே உணர்த்தியது. Game over என்பது தான் அந்த வரி. (hack செய்யபட்ட போது எனது வலைப்பதிவு முதல் பக்கம் எப்படி மாறியது என்பதற்கான screenshot படத்தை இங்கே காணலாம்.)

    hacked site screenshot

    எனக்கு ஹேக்கிங் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. அது எதோ பெரிய பெரிய வங்கிகள், அரசியல்வாதிகள் ஆகியோருடைய வலைத்தளங்களுக்கு நிகழும் விபரீதம் என்பதாய் நினைத்திருந்தேன். சீனர்கள் உலகம் முழுக்க திபெத்திய சுதந்திரத்திற்காக போராடும் வலைப்பதிவர்களது வலைப்பதிவுகளை ஹேக் செய்ததாக சில நாட்களுக்கு முன் வாசித்த ஞாபகம் இருக்கிறது. நண்பர் பாலபாரதியின் வலைப்பதிவு ஹேக் செய்யபட்டதாய் நினைவு இருக்கிறது. ஆனால் வலைப்பதிவை முழுமையாய் தொடங்க கூட இல்லை சில மணி நேரங்களில் இப்படி ஹேக் செய்வார்கள் என்பது எனக்கு அதிர்ச்சியான விஷயம் தான். இத்தனைக்கும் நான் அப்போது ஆன்லைனில் வலைப்பதிவில் தான் இருக்கிறேன்.

    பள்ளிக்காலத்தில் ஒரு முறை நான் சைக்கிளை தொலைத்து வீட்டிற்கு எப்படி அதை சொல்வது என பயந்து இருக்கிறேன். அது போல கல்லூரி முடிந்த ஒரு வருடத்தில் என்னுடைய பைக் திருடு போனது. அப்போது பயமில்லை. ஆனால் மனதில் ஒரு குற்றவுணர்வு. நம்மை நம்பி கொடுத்தார்கள், அதை கெடுத்து கொண்டோமே என்கிற உணர்வு. இப்போது முதலில் அப்படி ஓர் உணர்வு ஏற்பட்டது நிஜம். என்ன செய்வது என்று புரியாமல் மானிட்டரை பார்த்து கொண்டிருந்தேன். வீட்டில் எல்லாரும் தூங்கி கொண்டிருக்கிறார்கள். உதவி கேட்டு நண்பர்களுக்கு போன் செய்ய முடியாது. காரணம் இரவு வெகு நேரமாகி விட்டது. வீட்டின் கதவு ஜன்னல்கள் எல்லாம் சாத்தபட்டு பாதுகாப்பாய் தான் இருக்கிறேன். ஆனால் கண் முன்னே ஒரு திருட்டு அரங்கேறி விட்டது.

    ஆனால் இதெல்லாம் சில நிமிடங்கள் குழப்பம் தான். பிறகு தெளிவாகி என்னுடைய இணையத்தளஅட்மின் என்வசமிருக்கிறதா என சோதித்தேன். நல்ல வேலையாக அது என்வசமிருந்தது. ஆக என்னுடைய வலையிட வேர்ட்பிரஸ் அட்மின்னுக்குள் தான் ஹேக்கிங் நடத்தி இருக்கிறார்கள். முதல் வேலையாக இணையத்தள அட்மின், இமெயில் முகவரி என என தரப்பு கடவுச்சொற்களை மாற்றினேன். கூகுளில் ஹேக்கிங் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என தேடினேன். எல்லாருமே பதிவுகளை (போஸ்ட்) காப்பாற்றுவது எப்படி என எழுதியிருந்தார்கள். ஹேக்கிங் நடந்த போது நான் என்னுடைய பிளாக்கர் வலைப்பதிவில் இருந்து 121 போஸ்ட்களை உள்ளே பதித்திருந்தேன். அது போனால் ஒன்றும் பிரச்சனையில்லை. மீண்டும் கொண்டு வந்து கொள்ளலாம்.

    வலைப்பதிவை தொடங்கிய சில மணி நேரங்களில் ஹேக்கிங் நடந்தது அதிர்ச்சியான விஷயம் தான். ஆனால் அந்த குறுகிய கால விஷயம் தான் என்னை ஹேக்கிங்கில் இருந்து மீள உதவியது. இழப்பதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை என்பதால் கண்ணை மூடி கொண்டு வேர்ட்பிரஸ் மென்பொருளை அழித்தேன். மனதிற்குள் இப்படி செய்யவில்லையெனில் இருக்கிற இணையத்தள அட்மின்னும் பறிபோகுமோ என்கிற பயம் வேறு.

    இப்போது மீண்டும் முதல் படியில் நிற்கிறேன். வலைப்பக்கம் எனக்கு ஒதுக்கபட்ட போது எப்படி இருந்ததோ அப்படி நிலை மாறியிருக்கிறது. ஹேக் செய்தது அனேகமாக தானாக இயங்கும் மென்பொருளாக இருக்கும் (bot?) ஒரு மனிதனாக அப்படி ஆன்லைனில் உள்நுழைந்து இருந்தால் ஹேக்கிங் தொடங்கி அதிகபட்சம் அரை மணி நேரத்தில் அது முடிந்து போனதை நினைத்து குழம்பி போய் இருப்பான் என கற்பனை செய்து கொண்டேன். எங்கோ ஒரு வெள்ளைக்காரன் மானிட்டரை கொலை வெறியோடு பார்ப்பது போல கற்பனை விரிந்தது. அதோடு அந்த மனிதன் ஹேக்கிங் பார்த்து பயந்து நான் 121 போஸ்ட்களையும் அதோடு இருந்த நிறைய கமெண்ட்களையும் இப்படி அவசரப்பட்டு அழித்த எனது பயத்தை நினைத்து ஆச்சரியப்பட்டு போயிருப்பான். பாவம் அவனுக்கு தெரிந்திருக்காது இது imported என்று.

    அன்றிரவு அதற்கு மேல் எதை செய்யவும் பயமாக இருந்த காரணத்தால் ஒரு நாள் எல்லாவற்றையும் தள்ளி போட்டேன். அடுத்தடுத்த நாட்கள் அலுவலக சுமை இடம் கொடுக்கும் போதெல்லாம் மீண்டும் முதல் படியில் இருந்து வலைப்பதிவை நிர்மானிக்க தொடங்கினேன். ஏற்கெனவே ஒரு முறை பழகி விட்டதால் இப்போது கொஞ்சம் சுலபமாக இருந்தது. இதோ வலைப்பதிவு ரெடி.

    ஹேக்கிங் காரணமாக நான் இழந்தது என்னுடைய பல மணி நேர உழைப்பை. ஆனால் சரியாக பேக் அப் எடுக்கபடாத ஒரு தளத்தில் இது நடந்து இருந்தால் இழப்பு பெரிதாக இருந்திருக்க கூடும். இப்போது நான் இழந்த ஒரே கமெண்ட் அன்று மாலை பாலபாரதி எழுதியது மட்டும் தான். பாலபாரதி மீண்டும் வந்து அதை விட பெரிய பெரிய கமெண்ட் போடுவார் என ஆறுதல் கொள்கிறேன்.

    என்னுடைய இப்போதைய பயம் இது தான். ஹேக்கிங் செய்த நபர் தமிழராக இருந்து அவர் இந்த போஸ்ட்டை படித்தால் என்ன ஆகும். அவரும் இப்படி அவருக்கு நேர்ந்த அனுபவத்தை எனக்கு இமெயிலில் அனுப்பினால் அதையும் பதிப்பிக்கிறேன். ஆனால் மீண்டும் ஹேக்கிங் நடக்காமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை இப்போது முழுமையாக செயல்முறையில் இருக்கிறது.

    ஹேக்கிங்-இல் இருந்து பாதுகாக்க வழிமுறைகள்

    http://www.crucialp.com/resources/tutorials/website-web-page-site-optimization/hacking-attacks-prevention.php

    http://www.hackingalert.com/hacking-articles/hacker-tricks.php

    http://ravidreams.com/2009/09/wordpress-security/


  • என்னுடைய புது வலைப்பதிவிற்கு உங்களை வரவேற்கிறேன். ஏறத்தாழ இரண்டரை வருடங்கள் பிளாக்கரில் செவ்வாய்க்கிழமை கவிதைகள் என்கிற பெயரில் ஒரு வலைப்பதிவு நடத்தி கொண்டிருந்தேன். என் வாழ்வில் மறக்க முடியாத நினைவு அது. இப்போது எனக்கென்று இணையத்தில் சொந்த வீடு கட்டி இங்கு குடி புகுந்திருக்கிறேன். என்னுடைய பழைய பிளாக்கர் பதிவுகள் அனைத்தும் இப்போது இங்கேயே வாசிக்க கிடைக்கும்.

    செவ்வாய்க்கிழமை கவிதைகள் வாசித்து வந்த நண்பர்கள் கவலைப்பட வேண்டாம். இது அப்படியே அந்த வலைப்பதிவு தான். முகவரி மட்டும் மாறியிருக்கிறது. முன்னர் மாதத்திற்கு மூன்று நான்கு பதிவுகள் போடுவேன். இப்போது வாரத்திற்கு மூன்று பதிவாவது போட வேண்டுமென திட்டம். பார்க்கலாம் எப்படி போகிறதென…

    நன்றி!


  • என்னை தாக்குவது அவனது ஒரே நோக்கமாக இருக்கிறது.
    நாளுக்கு நாள் அது அதிகரித்தபடியே இருக்கிறது.
    அவனது கண்கள் நெருப்பினை உமிழ்வதாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.
    உடல்தசைகள் அசுர முறுக்கில் இருப்பதாக பேச்சு.
    அவனது நடை நிதானமாக மாறுவது இன்னும் பயமுறுத்துகிறது.

    இரத்த வாடையுடன் சுற்றும் அவனிடம் இருந்து நான் எங்கு ஓடினாலும் தப்ப முடியாது.
    நான் கடக்கும் அனைத்து தெருக்களிலும் அவனது தடம் இருக்கிறது.
    கனவுகளிலும் மிருக கர்ஜனையுடன் துரத்துகிறான்.

    பயத்தையும் வலியையும் பல முறை கற்பனையில் உண்டு முடித்த பிறகு
    அது எப்போது நிகழும் என்று
    நானும் காத்திருக்கிறேன்
    ஒவ்வொரு நிழல் தோன்றும் போதும்.


  • சசிதரூர் கொச்சி அணியின் மூலமாக தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஆதாயம் தேடி கொண்டாரா? லலித் மோடி தன்னுடைய மருமகனுக்கு சாதகமாக தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தாரா? ஐபிஎல்லில் கலந்து கொள்ளும்  சில அணிகள் பொய்யாக நஷ்ட கணக்கு காட்டினார்களா? ஊடகங்களில் ஐபிஎல் பற்றி புது புது தகவல்கள் சூடாக வந்து விழுந்து கொண்டிருக்கின்றன.

    வர்த்தம் விளையாட்டு துறைக்குள் நுழைந்தவுடன் அதன் பின்னே அழையா விருந்தாளிகளாக நுழைந்து விட்டன ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும். வர்த்தகரீதியாக ஐபிஎல் மிக பெரிய பணத்தை சம்பாதித்து இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இப்போது அதற்கான முறையான வரி கட்டபடவில்லை என குற்றச்சாட்டு வைக்கபடுகிறது.

    இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு. அது இன்று நம் அரசாங்கம் லாபம் கொழிக்கும் தொழில்கள் வளர வேண்டும் என்றும் நிறைய புது பணக்காரர்கள் உருவாக வேண்டும் எனவும் முன் மொழிகிறது. காரணம் இப்படியாக தனிநபர்களின் வளர்ச்சியில் அரசிற்கு நிறைய வரிகள் கிடைக்கும், நாட்டில் பண நடமாட்டம் அதிகரிக்கும் என்பது தான். ஆனால் இந்த முதலாளித்துவ சிந்தனை பெரும்பாலும் யதார்த்தத்தோடு ஒத்து போவதில்லை. உதாரணமாக ஐபிஎல் என்கிற வர்த்தக வெற்றியை எடுத்து கொள்வோம். பணம் சம்பாதிப்பவர்கள் நமது அமைப்புரீதியான ஓட்டைகளில் புகுந்து பேராசையுடன் பெரும் பணம் எடுத்து செல்லவே விரும்புகிறார்கள் என்றே அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் நம்மை எண்ண வைக்கிறது. ஆக அரசாங்கத்தின் ஆதரவோடு வெள்ளை பணம், அப்புறம் அரசிற்கு தெரியாமல் கறுப்பு பணம் இப்படியாக இரட்டை சம்பாத்தியம் வர்த்த ஆட்களுக்கு. இன்னொருபுறம் அரசிற்கு முறையான பணம் வராமல் வருமான இழப்பு, சலுகைகள் என்கிற பெயரில் மேலும் இழப்பு, மக்களுக்கு பெரியளவு நேரடி பொருளாதார லாபமும் இல்லை. ஐபிஎல் மாதிரி தான் இன்று பல வர்த்தகங்கள் சலுகையை பெற்று கொண்டு அரசிற்கு பட்டை நாமம் சாத்தி கொண்டிருக்கின்றன போல.

    மக்களுக்கான நலத்திட்டங்கள், சலுகைகள் தேர்தல் சமயத்தில் அதிகரித்தாலும் கடந்த இருபது வருட காலகட்டத்தை அதற்கு முந்தைய காலகட்டத்தோடு ஒப்பிடும் போது இவை தற்போது குறைந்து வருவதை கவனிக்க வேண்டும். உலக ஜனதொகையில் ஆறில் ஒருவர் இந்தியர். ஆனால் உலகத்தில் பட்டினியால் பாதிக்கபட்ட மக்களில் ஐம்பது சதவீதம் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள்.

    வர்த்தக நிறுவனங்களை வளருங்கள், எங்களுக்கு ஓர் ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதில் காட்டுகிற அக்கறையில் பத்தில் ஒரு பங்காவது ஜனங்கள் மீதும் காட்டுங்கள் என்பதே இன்றைய காமன் மேன்னின் வாதம்.