• இன்று முதல் உலக மக்கள்தொகை 700 கோடியாக  உயர்ந்து விட்டது என எல்லா ஊடகங்களும் பரபரப்பாக செய்தி வெளியிடுகின்றன. உத்தரபிரதேசத்தில் அந்த சிறப்பு குழந்தை பிறக்க போகிறது என சொல்கிறார்கள். பிலிப்பைன்ஸில் குழந்தை பிறந்து விட்டதாக அந்த ஊர் ஊடகம் சொல்கிறது. எங்கே எங்கே அந்த 700 கோடியதாக உலகிற்கு வருகை தரும் அந்த மனித பிறவி? ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவலை சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் மக்கள்தொகை 700 கோடியை தொடுவதற்கு இன்னும் ஒரு வருடம் கூட ஆகலாம் என்பது தான் உண்மையாக இருக்கக் கூடும்.

    ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அமைப்பு இந்த மக்கள் தொகை பிரிவு. இந்த வருடத்தின் தொடக்கத்தில் அவர்கள் மக்கள்தொகை பற்றியும் அதன் பாதிப்புகளை பற்றியும் வெளியிட்ட ஓர் அறிக்கையின் மீது மற்றவர்களது கவனத்தை ஈர்க்க இந்த வருடம் அக்டோபர் 31-ம் தேதியை 700 கோடியாக மக்கட்தொகை உயரும் தினமாக அறிவித்தார்கள். ஆனால் இந்த கணக்கு அறிவியல்பூர்வமானது அல்ல: ஆறு மாதங்கள் முன்பின் இருக்கலாம் என்பதை ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை பிரிவு அதிகாரிகளே ஒப்பு கொள்கிறார்கள்.

    சமீப பத்தாண்டுகளில் உலகத்தின் பல நாடுகளில் அதிகாரப்பூர்வமான மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் முழுமையாக நடந்தேறவே இல்லை. முக்கியமாக ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் தான் இன்றைய நிலவரப்படி மிக வேகமாக மக்கள்தொகை அதிகரித்தபடி இருக்கிறது. இங்கு கடந்த இருபதாண்டுகளில் முழுமையான ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவே இல்லை. இந்த சூழலில் மக்கள் தொகை 700 கோடியாக உயரும் என்பது ஓர் எதிர்பார்ப்பு அவ்வளவு தான். இன்னும் சொல்ல போனால் ஒரு யூகம் என்பதை தவிர வேறு எதுவுமில்லை.

    அமெரிக்க நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை உலக மக்கள் தொகை 2012- ம் ஆண்டு 700 கோடியைத் தொடும் என சொல்கிறது. வியன்னாவில் உள்ள மக்கள் தொகை பற்றி ஆய்வு செய்யும் அமைப்பு ஒன்று 700 கோடியாக மக்கள் தொகை 2013 அல்லது 2014-ம் ஆண்டு தான் உயரும் என தனது அறிக்கையில் சொல்கிறது. ஆனால் உலகளவில் மக்கள் தொகை வளர்ச்சியின் விகிதம் குறைந்து கொண்டே வருவதால் ஆய்வாளர்கள் 700 கோடியாக மக்கள் தொகை உயர்வது நாம் எதிர்பார்த்ததை விட தாமதமாக தான் இருக்கும் என சொல்கிறார்கள்.

    அந்த “ஹேப்பி பர்த்டே” வாழ்த்தினை சேமித்து வையுங்கள். இன்னும் நாள் இருக்கிறது.

    பி.கு: தி குளோப் & மெயில் வெளியிட்ட கட்டுரையை அடிப்பைடையாக வைத்து எழுதபட்டது.


  • உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு நிகராக நடந்து கொண்டிருக்கிறது. சட்டமன்ற தேர்தலுக்கு நிகராக பணம் விளையாடுகிறது. அன்பளிப்புகளுக்கும் பஞ்சமில்லை. அதிமுக, திமுக, ஏனைய அரசியல் கட்சிகள் இந்த உள்ளாட்சி தேர்தலை மிக முக்கியமாக பார்ப்பதால் அவர்களின் பிரச்சாரங்கள் பிரம்மாண்டமாக இருக்கின்றன. அதை ஒப்பிட்டு பார்க்கும் போது சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் நிலை பரிதாபமாக இருக்கிறது.

    அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலை ஆக்ரமித்து கொள்வதால் வேட்பாளர்கள் தேர்தலில் ஜெயித்தபிறகு கட்சிகளுக்கு உண்மையான ஆட்களாக இருப்பார்களே அன்றி தங்கள் பகுதி மக்களுக்கு உண்மையானவர்களாக இருக்க வாய்ப்பில்லாமல் போகும். (மேலும் வாசிக்க; உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்)

    அரசியல் சின்னங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தலில் தடை விதிக்க முடியாத நிலை இருப்பின், உடனடியாக அடுத்த தேர்தலுக்குள் செய்யபட வேண்டிய விஷயம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செலவுகளை அரசாங்கமே ஏற்று கொள்ள வேண்டியது. இது எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தேர்தலுக்கும் யோசிக்கபடுகிற ஆலோசனையாக இருந்தாலும் அங்கே இது செல்லுபடியாகாமல் போவதற்கு காரணங்கள் உண்டு.

    மக்கள் பெரிய பிராண்டுகளை விரும்பும் நுகர்வோர் கலாச்சாரத்திற்கு பழகி விட்டார்கள். கோக், பெப்சி அல்லது விளம்பரங்களில் அடிக்கடி தோன்றும் பிராண்டுகளை உபயோகப்படுத்துவது தங்களது அந்தஸ்தினை பிரதிபலிப்பதாக நினைக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது அதிமுக vs திமுக தான் கண்களில் தெரியும். தங்களது பகுதிக்கு தகுதியான வேட்பாளர் யார் என்று அவர்கள் யோசிப்பதை விட இந்த தேர்தலில் அதிமுக ஜெயிக்குமா? அல்லது திமுக ஜெயிக்குமா? என்றே யோசிப்பார்கள். அப்படியிருக்க அந்த பிராண்டு தகுதியை காப்பாற்றி கொள்ள பெரிய கட்சிகள் ஆடம்பர செலவுகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இந்த கட்டாயம் நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் பிரதிபலிப்பதை கூட ஓரளவு சகித்து கொள்ளலாம் ஆனால் இது உள்ளாட்சியிலும் தொடர்வது தான் வேதனை.

    அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்தை மட்டுபடுத்தி எல்லா வேட்பாளர்களுக்கும் சமமான ஆடுகளத்தை நிறுவி தர வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த சூழலுக்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அது உள்ளாட்சியில் போட்டியிடும் பலரும் குற்ற பின்னணி கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது. படித்தவர்களோ அல்லது சமூக சேவகர்களோ ஒதுங்கி கொள்ள ஒரு காலத்தில் சாராயம் காய்ச்சி தங்கள் பகுதியில் வளர்ந்தவர்கள், சட்டபுறம்பான வியாபாரம் செய்பவர்கள் இப்படியான ஆட்கள் சுயேட்சையாக அல்லது அதிர்ஷ்டமிருந்தால் பெரிய கட்சி வேட்பாளர்களாக போட்டியிடுவதை பார்க்க முடிகிறது. இவர்களிடம் பணம் கொட்டி கிடப்பதால் இவர்களது பிரச்சாரத்தில் பணம் ஆறாய் ஓடுகிறது.

    எல்லா வேட்பாளர்களுக்கு இடையே சமமான ஆடுகளத்தை உருவாக்க உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களது அனைத்து தேர்தல் செலவுகளையும் அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும். முடிந்தால் தனிதனியான பிரச்சாரம் என்கிற நிலையை கூட மாற்றி விட்டு ஒரே மேடையில் அனைத்து வேட்பாளர்களுக்கும் பேச அனுமதி, ஒரே நோட்டீஸில் அனைத்து வேட்பாளர்களை பற்றிய குறிப்புகள், இணையத்தில் வேட்பாளர்களை ஒப்பிட்டு நோக்கும் அளவு தகவல்கள் என பிரச்சாரத்தை கூட எளிமைபடுத்தி விடலாம் அல்லது பிரச்சாரத்திற்கே தடை விதித்து விட்டு தேர்தல் பூத்தில் வேட்பாளர் பற்றிய விவரங்களை ஒட்டி வைத்து/ஆடியோவில் பதிவு செய்து வைத்து விடலாம்.


  • சமீபத்தில் நண்பர் சந்தானமூர்த்தி மூலமாக அ.மார்க்ஸ் மற்றும் 17 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவின் பரமக்குடி வன்முறை தொடர்பான அறிக்கை வாசிக்க கிடைத்தது. துப்பாக்கிச்சூடு மாதிரியான அதீத நடவடிக்கைக்கு முன் தயாரிப்போடு தான் காவல்துறையினர் சம்பவத்தன்று வந்திருந்தார்கள் என குற்றம் சாட்டுகிறது அறிக்கை. சாதிய மனநிலை எப்படியெல்லாம் எல்லா மட்டங்களிலும் ஊடூருவி இருக்கிறது என்பதையும் அது தலித் மக்களுக்கு எதிரான சாதிவெறி இயக்கத்தை எப்படி உருவாக்குகிறது என்பதையும் இந்த அறிக்கையை வாசித்தால் புரிந்து கொள்ளலாம் … மேலும் முழு அறிக்கையை வாசிக்க

    அந்த அறிக்கையின் மைய நோக்கத்தை தவிர்த்த வேறு இரண்டு விஷயங்கள் எதோ என் கவனத்தை ஈர்த்து கொண்டே இருந்தன.

    பள்ளிக்கூடங்களில் சாதி

    மண்டல மாணிக்கம் தேவர் சாதி ஆதிக்கம் உச்சமாக உள்ள ஒரு ஊர். இதன் காரணமகவே இந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயில்கிற தேவேந்திரர் குலப் பிள்ளைகள் மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு வேறு ஊர்களில் உள்ள பள்ளிகளில் சேர்கின்றனர். 2010-11 கல்வியாண்டில் மண்டல மாணிக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற 28 தலித் பிள்ளைகளில் இவ்வாண்டு 23 பேர் இவ்வாறு டி.சி. பெற்றுச் சென்றுள்ளனர். – அறிக்கை

    ஆழ்மனதில் இருக்கும் சாதிய மனநிலை எங்கு இருந்து உருவாகிறது? எல்லா பாடப்புத்தகங்களிலும் முதல் பக்கத்தில் தீண்டாமை எதிர்த்து பிரச்சாரம் இருப்பது மட்டும் போதாது என்பது தான் நாம் அறிய வேண்டியது. பல கிராமங்களில் பள்ளிக்கூடங்களில் தலித் மாணவர்கள் ஒதுக்கபடுவது, வித்தியாசமாக நடத்தபடுவது அல்லது துரத்தபடுவது இன்றும் நடக்கிறது. கிராமங்கள் மட்டுமல்ல நகரங்களிலும் சாதியை பற்றிய அறிவுறுத்தல் பிள்ளைபருவத்திலே தொடங்கி விடுகிறது. ‘அவர்கள்’ vs ‘இவர்கள்’ மனநிலை மேலோங்குகிறது. அதுவும் ஏற்கெனவே சாதி பிரச்சனைகள் அதிகமாக இருக்குமிடத்தில் பத்து வயது சிறுவன் கூட தன் சாதி பற்றிய பிடிப்போடு அல்லது தாழ்வு மனப்பான்மையோடு இருப்பதை காண முடியும். மாணவர்கள் அனைவரும் சாதி பற்றியும் அதன் படிநிலை பற்றியும் தங்கள் சாதி எந்த படிநிலையில் இருக்கிறது என்பதையும் அறிந்தே இருக்கிறார்கள்.

    பாடப் புத்தகங்கள் சாதி பிரச்சனையை பற்றி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. இன்றும் சாதி என்பது எப்படி கொழுந்து விட்டு எரியும் சமூக பிரச்சனையாக இருக்கிறது என்பதை அரசாங்கம், அதிகார மையங்கள், ஊடங்கங்கள் எல்லாம் ஒப்பு கொள்வதில்லை; அவற்றை மறைக்கவே செய்கின்றன. ஒரு பிரச்சனைக்கான தீர்வின் முதல் படி அந்த பிரச்சனையை பிரச்சனை என ஒப்பு கொள்வதில் தான் தொடங்குகிறது.

    வாகனத்தை கண்டால் பயந்து ஓடும் மக்கள்

    சுமார் 10 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாரை வேண்டுமானாலும் கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யத்தக்கதாக இந்த முதல் தகவல் அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன. 1500 பேருக்கு மேல் கைது செய்ய இருப்பதாக காவல் துறை திட்டமிட்டுச் செய்திகளை ஊடகங்களில் பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஊட்டுகிறது. தவிரவும், அவ்வப்போது கிராமங்களுக்குச் சென்று பேருந்து முதலிய பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டிற்காக கைது செய்ய ஆட்களைக் கொடுங்கள் எனவும் காவல் துறையினர் மிரட்டுகின்றனர். பரளை என்ற கிராமத்திலிருந்து வந்த நாகவல்லி, ரேணுகாதேவி உள்ளிட்ட பெண்கள் செப்டம்பர் 18ம் தேதியன்று ஒரு போலிஸ் வேனில் வந்த காவல் துறையினர் இவ்வாறு மிரட்டியதை எம்மிடம் குறிப்பிட்டனர். தவிரவும், சாதாரண உடையில் வந்த போலிசார் சீருடையில் இருந்த போலிசாரை நோக்கிக் கற்களை வீசித்தாக்குவது போல பாவனை செய்து வீடியோ படம் எடுத்ததாகவும் எம்மிடம் குறிப்பிட்டனர். நயினார்கோயில், பரமக்குடி, முதுகுளத்தூர், இராமநாதபுரம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களில் இரவில் ஆண்கள் பயந்து வீட்டில் தங்காத நிலை இன்று உள்ளது. எஸ்.காவனூர் என்கிற ஊரில் இருந்த அடிப்பட்ட ஒருவரைக் காண இரவு 8 மணி வாக்கில் நாங்கள் வாகனங்களில் சென்றதைக் கண்ட அக்கிராமத்திலுள்ள அத்தனை ஆண்களும், வருவது காவல்துறையோ என அஞ்சி ஓடியதை நாங்கள் நேரில் கண்டோம். – அறிக்கை

    ஈழத்தில் நடந்த போர் குற்றங்கள், எகிப்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடந்த மக்கள் எழுச்சிக்கு அடுத்து அவற்றை கட்டுக்கு கொண்டு வர நடத்தபட்ட அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகள், இப்போது பரமக்குடி சம்பவம், வாச்சாத்தி தீர்ப்பு இவை எல்லாவற்றையும் கதைகளாக பாவித்தோ, இவை நடக்கவே இல்லை என உதறி விடவோ, இவை நடந்தது தெரியாது என மறந்து விடவோ தான் மனம் எப்போதும் விரும்புகிறது. ஆனால் ரத்தமும் சதையுமாக அங்கே வன்முறையால் பாதிக்கபட்டவர்கள் எப்படி துன்பப்படுகிறார்கள் என்பதை கேள்விபடும்போது வேதனையாக தான் இருக்கிறது. இவை வெளியுலகம் அறிந்து கொள்ள வேண்டியது. ஊடகங்கள், அதிகார மையங்கள், அரசாங்கம் இவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். குற்றத்தில் ஈடுபடும் காவல்துறையினரையும் அதிகாரிகளையும் மற்றவர்களையும் சட்டம் தண்டிக்க வேண்டும்.


  • இந்த முறை உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற பாராளுமன்ற தேர்தல் போல பரபரப்பாக இருக்கிறது. தெரு தெருவாக பிரச்சாரம் தினமும். கட்சி துண்டுகளை அரசியல் தலைவர் ஸ்டைலில் அணிந்து வேட்பாளர்கள் தங்கள் அடிபொடிகளுடன் வலம் வரும் போது அவர்கள் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்களா அல்லது எம்.எல்.ஏ பதவிக்கா என வியப்பு மேலோங்குகிறது. இத்தனை அடிபொடிகள், தேர்தல் அலுவலகம், வண்ணச் சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், வாகனங்கள் என எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்தால் செலவு கணக்கு கட்டாயம் பெரிதாக தான் இருக்குமென புரிகிறது.

    எதற்காக இத்தனை செலவு?

    சென்னையில் வார்டு கவுன்சிலர் பதவியே அதிகாரமிக்கது என்கிறார் ஒரு நண்பர். வார்டில் எந்த வேலையாக இருந்தாலும் காண்டிராக்ட் எடுப்பவர் வார்டு கவன்சிலருக்கு 25 சதவீதம் கொடை கொடுக்க வேண்டியதிருக்கும் என்கிறார். மற்றவர்களுக்கு கொடை கொடுத்தது போக அதிகபட்சமாக மிச்சமிருப்பது 60 சதவீதம் அல்லது 65 சதவீதம் தான். அதில் என்ன உருப்படியாக வேலை செய்து கொடுத்து விட போகிறார்கள்? நகராட்சிகளில் வார்டு கவன்சிலர்கள் தங்களுடைய நகரத்தில் எடுக்கபடும் பெரும் காண்டிராக்ட்டுகளில் தங்களுக்கு சரியாக பங்கு கிடைக்கவில்லை எனில் ஒட்டிமொத்தமாக சேர்ந்து சேர்மன் பதவியில் இருப்பவரை தூக்கி எறியும் துணிவில் இருக்கிறார்களாம். நல்ல பணவரத்து மிக்க கவுன்சிலர் பதவிக்கு வேட்பாளர்கள் இத்தனை செலவு செய்வது அவர்களை பொறுத்தவரை தேவையானதாக இருக்கும். அதுவும் சம்பாதிக்க போகும் பெரும்பணத்திற்கு முன் இந்த செலவு மிக குறைவாக தான் இருக்கும்.

    கட்சிகளுக்கு இந்த தேர்தல் மான பிரச்சனை

    கடந்த சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு பெரும் சாதகமாக அமைந்து விட்ட காரணத்தினால் திமுகவிற்கு இப்போது உள்ளாட்சி தேர்தலில் ஜெயிப்பது முக்கியமான விஷயம். இதிலும் முற்றிலுமாக தோற்றால் கட்சிக்கு அனேகமாக பெரும் பின்னடைவு தான். அதனால் கடந்த ஐந்தாண்டுகளில் சம்பாதித்தவற்றை கொட்டியாவது அவர்கள் ஜெயிக்க பெரும் பிரயத்தனம் செய்வார்கள். விஜய்காந்த் கட்சிக்கோ சட்டமன்ற வெற்றியில் தங்கள் பங்கும் இருக்கிறது என நிரூபிக்க வேண்டிய நெருக்கடி. அதிமுகவிற்கு தங்களது மெஜாரிட்டியை தக்க வைத்து கொள்ள வேண்டும். முக்கிய கட்சிகள் எல்லாருமே இந்த உள்ளாட்சி தேர்தலை முக்கியமானதாக பாவித்து வேலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். விளைவு என்றுமில்லாத அளவு பணம் தேர்தல் செலவிற்காக கொட்டபடுகிறது.

    உள்ளாட்சி ஜனநாயகம் கேலிகூத்தாகிறது

    சட்டமன்ற, பாராளுமன்ற அதாவது பிரதிநிதித்துவ ஜனநாயகம் ஏற்கெனவே கேலிகூத்தாகி விட்டது. தேர்ந்தெடுக்கப்படும் நம் பிரதிநிதிகள் (அதாவது எம்எல்ஏ அல்லது எம்பி) அதிகாரமற்றவர்களாக தங்கள் கட்சி தலைமை சொல்வதை மறுபேச்சு சொல்லாமல் ஏற்று கொள்பவர்களாக பொம்மைகளாக இருக்கிறார்கள். இந்த பணிவிற்கு பரிசாக அவர்களுக்கு வேறு வழியில் பெரும்பணம் சம்பாதிக்கும் வழிகள் திறந்து விடபடுகின்றன. இன்று பாராளுமன்றத்தில் இருக்கும் எம்.பிக்கள் பலரும் லட்சாதிபதிகள். மத்திய அமைச்சர்கள் பலர் கோடீஸ்வரர்கள். எங்கே இருந்து வந்தது இத்தனை பணம்? எல்லாருக்குமே தெரியும் இது நியாயமான முறையில் வந்த பணமில்லை என்று. ஆனால் மக்கள் அவர்களை ஏற்று கொண்டு தான் இருக்கிறார்கள். சட்டமன்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்தெடுப்பதில்லை. மாறாக இரண்டு அரசர்களுக்கிடையே ஒருவரை தேர்ந்தெடுக்கிறார்கள். ஜெயலலிதாவா கருணாநிதியா? காங்கிரஸா பிஜேபியா? இப்படி அதிகார மையங்கள் தன்னிகர் இல்லா வலிமையுடன் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பது இப்படியான கேலிகூத்தாகி விட்டது.

    உள்ளாட்சி அமைப்பு என்பது ஜனநாயகத்தின் மற்றொரு வலுவான உறுப்பு. இன்று எப்படி சட்டமன்றம், பாராளுமன்றம் அதிகார மையங்களின் கட்டுபாட்டில் இயங்குகிறதோ அது போல உள்ளாட்சி அமைப்புகளும் அதே அதிகார மையங்களுக்கு கீழே இயங்க தொடங்குகின்றன. உள்ளாட்சி என்பது மக்கள் தங்களுக்கான பிரச்சனைகளை தாங்களே ஒன்றுகூடி முடிவெடுத்து தீர்க்க வேண்டிய இடம். அங்கே கட்சிக்காரர்கள் எதற்கு?

    அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்

    அரசியல் கட்சிகள் உள்ளாட்சியில் அதிகாரம் செலுத்தினால் அங்கே பிரதிநிதிகள், மக்களின் பிரதிநிதிகளாக இருக்க மாட்டார்கள்; மாறாக கட்சியின் பிரதிநிதிகளாக தான் இருப்பார்கள். எம்.எல்.ஏ-வாகவோ எம்.பி-யாக தகுதியடைகிற நிலையில் இல்லாத கட்சிகாரர்கள் வார்டு கவுன்சிலராகவாது மாறி சம்பாதிக்கலாம் என நினைக்கிறார்கள். கட்சியும் அப்படி அவர்கள் பலனடையட்டும் என நினைக்கிறது. அரசியல் சின்னங்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் இடமிருக்க கூடாது. அரசியல் கட்சிகள், கட்சிக்காரர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கபட வேண்டும். இல்லையெனில் இது மற்றொரு பிரதிநிதித்துவ கேலிகூத்தாக தான் முடியும்.

    தடை சாத்தியமா?

    அரசியல் கட்சிகளுக்கு தடை என்கிற விஷயத்தை செய்ய வேண்டும் எனில் அதை செய்ய வேண்டியவர்கள் அரசியல் கட்சிகளே என்பதே இதில் வேடிக்கை. அதனால் அவர்கள் கட்டாயம் அதை முன்நின்று செய்ய போவதில்லை. ஆனால் என்றாவது ஒரு நாள் இந்த பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கேலிகூத்துகள் மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தும் போது, உள்ளாட்சி தேர்தலிலாவது அரசியல் கட்சிகள் விலகி இருக்க வேண்டிய கட்டாயம் நிகழ தான் போகிறது. அது வரை நாம் இந்த கேலிக்கூத்துகளை சகித்து கொள்ள தான் வேண்டும்.


  • பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது. உயிர்பலி வேதனைக்குரியது. இச்சம்பவத்தில் சாதி மனநிலை மிகுந்து இருப்பதை மறைக்கவே முடியாது.

    துப்பாக்கி சூட்டை ஆதரித்து பேசிய முதல்வர் தொடங்கி, மருத்துவமனையில் போய் அட்மிட் ஆன போலீஸ் உயர் அதிகாரிகள், வருட வருடம் விழாவிற்கான அனுமதி/உதவி ஆகியவற்றை சரியான சமயத்தில் தர மறுத்து, சம்பந்தபட்டவர்கள் கோர்ட் படியேற காரணமான அரசு அதிகாரிகள், விழாவில் கலவரம் வரும் என எதிர்பார்த்து அப்படி வந்தால் ஆக்ரோஷமாய் செயல்பட வேண்டுமென தீர்மானித்த அதிரடிப்படை தலைவர்கள், துப்பாக்கி சூடு நிகழ்த்திய போலீஸ்காரர்கள், பிணத்தை எதோ விறகுகளை சுமந்து செல்வது போல தூக்கி கொண்டு வந்த காவலர்கள், இவனுங்க விழாவுல அப்படி ஆட்டம் போடுவானுங்க அதனால் தான் சுட்டிருப்பானுங்க என டீக்கடையோரம் பேசும் நபர்கள் என சாதி மனநிலை என்பது எங்கோ ஆழத்தில் ஒளிந்திருப்பது மட்டுமல்ல, அது கட்டுபடுத்த முடியாமல் வக்கிரத்துடன் பல இடங்களிலும் வெளிபடவும் செய்கிறது என மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது.

    சாதி உணர்வும் வெறியும் துவேசமும் இன்றும் எல்லா மட்டங்களிலும் எல்லா வகை மனிதர்களிடமும் ஆழத்திலோ அல்லது வெளிபடையாகவோ இருக்கவே செய்கிறது. என்னுடைய பெற்றோர் தொடங்கி என் அளவு வரை சாதி பற்றிய உணர்வே இல்லாமல் தான் நான் வளர்ந்தேன். பள்ளிக்கூடத்திலும் சாதி உணர்வு என்பது இழிவானது என்று தான் சொல்லி இருந்தார்கள். ஆனாலும் தலித் மக்களுக்கான போராட்டங்களை முன் எடுத்து செல்பவர்கள், அந்த கருத்தாக்கத்தில் பங்கு பெறுபவர்களை சந்தித்த போது என்னுள் எங்கோ ஆழத்தில் சாதி மனநிலை இருப்பது கண்டு துணுக்குற்றேன். என்னுள் வர்க்க பேதம், ஆணாதிக்கம், அறிவு கற்பித திமிர் என பல விஷயங்களுடன் கலந்து கிடந்தது சாதி மனநிலை. என்றாலும் தனித்து இருந்தது. எங்கோ ஆழத்தில் அது என்னை இயக்கும் சக்தி படைத்ததாகவும் இருந்தது. என் சக மனிதர்களும் அவ்வாறே இருப்பதாய் நான் ஒவ்வொரு முறையும் கண்டறிகிறேன்.

    துப்பாக்கிச்சூடு, அதனால் நிகழ்ந்த உயிர்பலி ஏன் பெரும் விவாதமாகவில்லை? கலவரம், கலவரசவாதிகள் என்றே ஒரு கூட்டம் இப்போது வண்ணம் அடித்து காட்டபடுவது ஏன்? உயிர்பலிக்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முடியாது தடுப்பது எது? துப்பாக்கியை எடுத்து விசையை அழுத்தியவர்கள் மனதில் ஒரு கணம் சாதி உணர்வு தோன்றாது இருந்திருந்தால் அவர்கள் மனிதர்களை பார்த்து சுடாமல் இருந்திருப்பார்களா? அல்லது குறைந்தபட்சம் கால்களை நோக்கி துப்பாக்கியை தாழ்த்தியிருப்பார்களா?

    துப்பாக்கிச்சூடு நிகழ்த்துமளவு அங்கு என்ன வன்முறை நிகழ்ந்தது? குடித்து விட்டு கலாட்டா செய்வார்கள் என சொல்கிறார்கள். எனக்கு தெரிந்து சமீப வருடங்களில் எல்லா கட்சி பொதுகூட்டங்களும் அப்படி தான் நடக்கின்றன. ரோட்டில் அந்த சமயம் போகும் கட்சி வண்டிகளில் இருந்து பொது மக்களுக்கு எந்தளவு ஆபாச அர்ச்சனை நடக்கும் என சொல்லி மாளாது. இப்படி அங்கு நடந்ததா என தெரியாது. அப்படி நடந்திருந்தாலும் இத்தனை ஆயிரம் கூட்டங்களில் எதுவும் செய்யாது கை கட்டி கொண்டிருந்த போலீசார் இந்த விழாவில் மட்டும் ஏன் பொங்கி எழுந்தார்கள்? தலித் அல்லாதோர் நடத்திய விழாவாக இருந்ததிருந்தால் இத்தனை தூரம் போலீசார் ஆக்ரோஷம் காட்டியிருப்பார்களா?

    வருட வருடம் போலீசார் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் உள்குத்துகளை மீறி தான் இம்மானுவேல் சேகரன் பூசை நடந்து இருக்கிறது. இந்த வருடம் கூட நீதிமன்றத்தை நாடி பிறகு தான் விழாவிற்கான முறையான அரசு உதவி கிடைத்து இருக்கிறது. வருட வருடம் இந்த விழாவை நடத்த சிரமப்பட வைத்த அரசாங்க அதிகாரிகள் யார்? அவர்களுக்கு உத்தரவிட்ட பெருந்தலைகள் யார் யார்?

    கலவரத்தை ஒடுக்க எத்தனையோ நவீன வகை சமாச்சாரங்கள் வந்து விட்டன. நீரை அடித்து விரட்டுதல், கண்ணீர் புகைக்குண்டு, ரப்பர் புல்லட் என எதுவுமே நமது போலீசாரிடம் இல்லையா?

    இவர்கள் எல்லாரும் குற்றவாளிகள் என்று பொதுப்படையாக சொல்லி விடமுடியாது. எல்லாருமே இப்படியான சாதி உணர்வுடன் செயல்பட்டார்கள் என எல்லார்பக்கமும் கை நீட்டி குற்றம் சாட்டி விட முடியாது தான். ஆனால் எல்லாரும் அறிந்தோ அறியாமலோ வெளிபடையாகவோ மறைமுகமாகவோ தங்களுக்கே தெரிந்தோ அல்லது ஆழ்மன வக்கிரத்தினாலோ சாதி மனநிலையாலே இப்படியான கொடூரம் அரங்கேற தங்களுடைய பங்கினை ஆற்றியிருக்கிறார்கள்.

    இம்மானுவேல் சேகரன் சாதி வெறிக்கு எதிராக போராடியவர். அதே சாதி வெறியால் கொல்லபட்டவர். இவ்வளவு வருடங்கள் கழித்தும் நிலைமை இன்னும் பெரியளவு மாறி விடவில்லை என்பது தான் வேதனைக்குரியது.


  • இருளிலே இருளோடு இருளாய் இருந்தான்.
    அவனது கர்ஜனை ஓயும் வரை நாங்கள் மதிலோடு ஒண்டியிருந்தோம்.

    அவள் எங்களை கடந்தாள்.
    வெள்ளை.
    பிரகாசம்.
    வெளிச்சம்.
    இளமையின் உயிர்ப்பு.

    அவளது முகத்தை சோகமே திரையிட்டிருந்ததை பார்த்தோம்.
    எங்கள் இரைஞ்சும் கண்களை உணர்வின்றி பார்த்து விட்டு
    அவள் அவனை நோக்கி நடந்தாள்.

    அவன் பார்ப்பதும்
    திணறுவதும்
    கூத்தாடுவதும்
    இறுதியாய் மண்டியிடுவதையும்
    எங்களால் உணர முடிந்தது.

    எங்கள் அம்புகளை தயாராக்கினோம்.


  • எங்கள் அறையில் எங்கெங்கும்

    குவிந்தும்

                 சிதறியும் கிடக்கின்றன

    அவனது வார்த்தைகள்.

    தனக்குள்ளே பேசியும்,

                                        சி

                                       ரி

                                        த்

                                        து

                                          ம்,

                                                 கதைசொல்லியும்

    கழிகின்றன அவனுடைய நாட்கள்.

     

    களவாடி பகிர்ந்துண்ட நினைவுகள்

    கல்மழை நெஞ்சில் விழ பயந்து ஓடிய கணங்கள்

    மழை நீரோடிய மெல்லிய மணலை சுவைத்த பாதங்கள்

    களிமண்ணில் பானைகள் வடித்தும், வயலில் நாற்று நட்டும்,

    துண்டுகளில் சடை வளர்த்தும் திரிவதாக கனவுகள்

    கைகோர்த்து பூப்பறிக்கச் சொல்லும் சடங்குகள்

    ‘கத்திரிக்கா தோட்டத்தில களை பறிக்க வாரியாளா’

    எனக் கூவும் பாடல்கள்

    எதிர்நீச்சல் போடசொல்லும் கால்வாய்கள்

    இசைவோடு நீந்தச்சொல்லும் குளங்கள்

    பள்ளத்தை கண்டு மிரளாத கிணற்று குளியல்கள்

    நண்பர்களுடன் கோபித்து

    பின் வெட்கப்புன்னகையுடன் சமாதானமாகும் பொழுதுகள்

    சண்டைகள்; சச்சரவுகள்

    இன்றும் எனது துயரங்களுக்கு மருந்து

    பால்யகால நினைவுகளே!

    அவற்றை நெஞ்சில் சுமந்து திரிந்து

    வீடு திரும்புகையில்

    தொலைந்த எதையோ

                                       அட்டைப்பெட்டிகளில்

                 துழாவிக்

                            தேடிக் கொண்டிருக்கிறான்

                                                       என் மகன்.

    – இளமதி.


  • chennai traffic

    எங்களூர் நெடுஞ்சாலையில் எப்போதும் வாகனங்கள் நிறைந்திருக்கும். என்னுடைய சிறு வயதில் அந்த சாலையை கடப்பதை ஒரு கலையாக பாவித்து கற்று கொண்டேன். லாரிகளும் பஸ்களும் ஸ்கூட்டர்களும் ஓடி கொண்டிருக்கும் சாலையினை கடக்க ஒரு கணம் நிதானித்து, பிறகு சரியான சந்தர்ப்பத்தில் ஓட்டமும் நடையுமாக கைகளை முன்னால் நீட்டியபடி கடந்து விடுவேன். சாலையை கடக்க முடியாமல் நிற்கும் பெரிசுகளை பார்க்கும் போது சிரிப்பாக இருக்கும். பள்ளிகாலம் முடிந்து கல்லூரியில் சேர்வதற்காக சென்னைக்கு வந்த போது இந்த கலை கைகொடுக்கவில்லை.

    சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஒரு சிக்னலில், பச்சை விளக்கு எரியும் போதே சாலையை கடக்க முனைந்தேன். அர்ஜுனனின் அம்புகள் போல காவேரி பெருவெள்ளம் போல வாகனங்கள் என்னை அரவணைத்தபடி போனது. சுழலில் மூழ்கி விடுவோம்; இதோ விபத்திற்குள்ளாகி இறந்து விடுவோம் என தோன்றியது. முன்னாலும் போக முடியாமல் பின்னாலும் போக முடியாமல் நான் தவிப்பதை அங்கிருந்த டிராபிக் போலீஸ்காரர் முறைத்தபடி இருந்தார். ஒருவழியாய் தடுமாறி வந்த இடத்திற்கே திரும்பி போது சென்னை என்பது வேறு நிலப்பரப்பு என உறைத்தது.

    காலையில் நூற்றுக்கணக்கில் மக்கள் சென்ட்ரல் ரயில் நிலையம் சப்வேயில் ஓட்டமும் நடையுமாக போகும் போது என் நண்பன், “இவங்க எல்லாம் எங்கடா போறாங்க? ஏன் இவ்வளவு அவசரமா போறாங்க? இவங்களை நிறுத்தி கேட்கனும்டா,” என்றான்.

    சென்னை மக்களின் வாழ்க்கைமுறையில் என்னை எப்போதும் உறுத்தி கொண்டே இருப்பது அவர்களின் அவசரம் தான். குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்கள். எப்போதும் நிறைந்து கிடக்கும் சாலையில் ஒரு சந்து கிடைத்தாலும் இரண்டு வாகனங்களுக்கிடையே புகுந்து; முடிந்தால் பிளாட்பார்ம் மீது ஏறி, சிக்னல் பச்சையாக ஒளிர்வதற்கு முன்பே பாதி சாலையை கடந்து நிற்கும் அவசரம். நாற்பது ஐம்பது வாகனங்கள் கும்பலாய் சிக்னலை மீறுவதை கவனித்து இருக்கிறேன். டிராபிக் போலீஸ்காரர் சோர்ந்து போய் ஓரமாய் வேடிக்கை பார்த்தபடி இருப்பார். அல்லது இதற்கு சம்பந்தமே இல்லாமல் வேறொரு இடத்தில் நின்று யாராவது அப்பாவியை பிடித்து மாமூல் வசூலிக்க முனைந்திருப்பார்.

    முதியவர்கள், குழந்தைகள் சாலையை கடப்பது சிரமம். சிக்னலையே மதிக்காதவர்கள் எப்படி சாலையின் குறுக்கே கடப்பவர்களுக்காக பிரேக் அடிப்பார்கள்? ஒட்டியபடி வளைந்து போவார்கள். அல்லது டென்சனாகி திட்டுவார்கள். சிக்னல் பச்சையான பிறகு தான் வண்டியை நகர்த்துவேன் என நீங்கள் அன்னா ஹசாரேத்தனம் செய்தால் வார்த்தைகளும் ஹாரன்களும் சூடாக அபிஷேகிக்கும்.

    அவசரம். நிதானமின்மை. அலட்சியம். இதற்கெல்லாம் என்ன காரணம்? நான் அவர்களில் ஒன்றான பிறகு எனக்கு லேசாக புரிய தொடங்கி இருக்கிறது. சென்னையின் நிலப்பரப்பு பெரியது. அதோடு பத்து கிலோமீட்டரை டிராபிக் ஜாமில் கடக்க ஒரு மணி நேரம் கூட ஆகிவிடுகிறது. நகரத்தின் மைய பகுதிகள் அலுவலகங்களாகவும் புறநகர் பகுதிகள் அந்த அலுவலகத்தில் வேலை செய்பவர்களின் வீடுகளுமாக இருக்கின்றன. ஒவ்வொருவரும் காலையிலும் மாலையிலும் மணிக்கணக்கில் பயணிக்க வேண்டியதிருக்கிறது. என்னுடைய கவிதைகளிலே எக்கசக்க ஹாரன் சத்தம், டிராபிக் ஜாம், ரோடு என வார்த்தைகள் இருப்பதை சமீபத்தில் யதேச்சையாக கவனித்து ஆச்சரியத்திற்கு உள்ளானேன்.

    நகரத்தின் சாலைகள் தங்களுடைய அளவை தாண்டி தினமும் அளவிற்கு அதிகமான வாகனங்களை சுமந்து கொண்டிருக்கின்றன என்கிறது ஒரு சர்வே. வாகனங்களின் எண்ணிக்கை அச்சுறுத்தும் வேகத்தில் அதிகரித்து கொண்டிருக்கிறது. ஒரு வேளை மெட்ரோ ரயில் (மோனோ ரயில்?) வந்தால் இது எல்லாம் ஓரளவிற்கு சரியாகும் என்கிறார்கள். ஆனால் இந்த கட்டுமான பணிக்காக நகரமெங்கும் குழி தோண்டி இன்னும் டிராபிக் ஜாம்கள் அதிகமானது தான் மிச்சம்.

    தினமும் காலையிலும் மாலையிலும் சாலையில் பயணிக்கும் மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு பெரும்பகுதியினை இந்த பயணமே மென்று தின்று விடுகிறது என உணர்ந்திருக்கிறார்கள். நகரத்தின் சூட்சம கட்டங்களில் ஒளிந்திருக்கும் தங்களுடைய வாழ்க்கையினை தேடி அலையோ அலை என அவர்களது மனம் தேடியபடி இருக்கிறது. இந்த தேடலில் சிக்னலில் நிற்பதற்கும், பொறுத்து இருப்பதற்கும், நிதானிப்பதற்கும் நேரமும் இல்லை. பொறுமையும் இல்லை. நாட்கள் போக போக இது ஒரு பழக்கமாகி இதுவே வாழ்க்கையாகி போகிறது.


  • நான், மனைவி மற்றும் எங்கள் ஐந்து வயது மகன் மூவரும் மருத்துவமனைக்கு போய் விட்டு திரும்பும் போது வழியிலே ஒரு பொம்மை கடைக்கும் போனோம். பொட்டு முதல் பீரோ வரை அனைத்தையும் விற்கும் பெரிய கடை அது. அதில் ஒரு தளத்தில் குழந்தைகளுக்கான பொருட்கள் இருந்தன.

    கண்ணாடி பெட்டிகளில் கையளவு கார்கள் நூற்றுக்கணக்கில் பார்க் செய்யபட்டிருந்தன. விதவிதமான கார்களை பார்க்கும் போது அவை அனைத்தும் வெளிநாட்டு படங்களில் வரும் நவீன கார்களை போல் இருந்ததேயன்றி எதுவும் நம்மூர் ரோட்டில் ஓடும் கார்களை போலவே இல்லை. சிறிது நேரம் வேடிக்கை பார்த்தபடி இருந்த போது எனக்கே அந்த கார்களை வாங்கும் ஆசை அதிகரித்து விட்டது. எனது பையனோ தேர்ந்த மெக்கானிக் போல கார்களை ஒவ்வொன்றாய் அலசி கொண்டிருந்தான். வீட்டில் ஏற்கெனவே இது போல முப்பது நாற்பது கார்கள் இருக்கின்றன. அதனால் அவன் தான் அதில் நிபுணர்.

    கார்ஸ் என்கிற திரைப்படத்தின் இரண்டாவது பார்ட் சமீபத்தில் ரீலிசானது. அதில் ஒரு அழுக்கு டோ வண்டி வரும். அந்த பொம்மை அழகாய் இருந்தது. கையை விட சிறியதாய் இருந்த அதை எடுத்து திருப்பி பார்த்த போது, அதன் விலை 750 ரூபாய். ஓ!

    “லாரி, லாரி, லாரி,” என ஒரு இரண்டு வயது குழந்தை அதன் அப்பா தோளில் சாய்ந்தபடி கால்களை உதைத்து அழுது கொண்டிருந்தது. எந்த லாரியை சொல்கிறது? அல்லது லாரியை தான் சொல்கிறதா? புரியவில்லை.

    மாலை நான்கு மணி என்பதால் அங்கு பெரிய கூட்டம் எதுவுமில்லை. எனினும் வரிசைக்கு இருவராவது இருப்பார்கள். முதல் இரண்டு வரிசையில் பொம்மைகள் குவிந்து கிடந்தன. அடுத்த வரிசையில் புத்தகங்களும் செஸ் போர்டு, பந்து போன்ற விளையாட்டு சாமான்களும் இருந்தன. அடுத்த வரிசை கொஞ்சம் பெரியது. ஸ்கேட்டிங், சின்ன சைக்கிஸ் என பெரிய சாமான்களும், டெட்டி பியர்களும் குவிந்து கிடந்தன. ஒரு சுழல் அலமாரியில் குழந்தைகளுக்கான டிவிடி, சிடிகள் இருந்தன. ஒரு லெப்டாப் பொம்மையை நெருங்கி பார்த்த போது அதில் டிவிடி பிளேயர் இருப்பதை பார்த்தேன். டால்பி என்று கூட எழுதியிருந்தது. விலையை பார்க்காமலே அதை வைத்து விட்டு வந்து விட்டேன்.

    ஒரு பெண் இறுக்கமான சட்டை ஜீன்ஸ் அணிந்து புதியதாய் பிறக்க போகும் குழந்தைக்காக மனம் போன போக்கில் எது எதோ வாங்கி கொண்டிருந்தார். கூட யாரும் வரவில்லை.

    கண்ணாடி போட்ட நபர் ஒருவர் தனியே புத்தக அலமாரிகள் அருகே வெகு நேரம் ஒரே ஒரு புத்தகத்தை வாசித்தபடி நின்றிருந்தார். அவரிடம் என்ன சொல்வது என தெரியாமல் சற்று தள்ளி தயக்கத்தோடு நின்றிருந்தாள் அங்கு பணிபுரியும் பெண். அதே யூனிபார்மில் மற்ற இரண்டு பெண்கள் சிசிடிவி பார்க்காத இடத்தில் அலமாரிகளுக்கு அருகே நின்றபடி இருந்தார்கள். நான் நெருங்கும் போது ஒருத்தி மெல்ல விசும்புவதையும் இன்னொருத்தி அவளுக்கு சமாதானம் சொல்வதையும் பார்த்தேன்.

    எப்போது இங்கிருந்து கிளம்புவோம் என்கிற பதைபதைப்பு எனக்கு தோன்றும் போது எனது மனைவியும் மகனும் தீவிரமான ஷாப்பிங்கில் ஈடுபட்டிருப்பதை பார்த்தேன். மஞ்சள் நிறத்திலான கார் ஒன்றை செல்க்ட் செய்து விட்டான். நல்ல வேளை டெஸ்ட் டிரைவ் எல்லாம் இல்லை. அவ்வளவு தானா என்றால் என் மனைவி சின்ன சின்ன ஐட்டங்கள் இருக்குமிடத்திற்கு போய் குழந்தைகளுக்கான சோப்பு சீப்பு என்று பார்க்க தொடங்கி விட்டாள்.

    ஒரு பெண்மணி செல்போனில் தான் செல்லவிருக்கும் வீட்டிற்கு பேசி அங்கிருக்கும் குழந்தைக்கு என்ன பிடிக்கும் என கேட்டு அதை வாங்கி செல்வதை பார்த்தேன். எனது பையனை அழைத்து போய் புத்தகங்கள் பகுதியில் இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். ஒன்று காமிக்ஸ் புத்தகம். மற்றொன்று போக்குவரத்து ஊர்திகளை பற்றிய படங்களுடன் கூடிய புத்தகம். அவன் மெக்கானிக் என்பதால் அந்த கலர்கலரான படப்புத்தகம் பிடிக்கும் என அதை வாங்கினேன்.

    பில் போடுமிடத்தில் இறுகிய முகத்துடன் ஓர் இளைஞன் செல்போனை வெறித்தபடி அமர்ந்திருந்தான். அவனருகே சென்ற போது வேறொரு பெண்மணி அங்கு வந்தாள். அழகிய முகம் அந்த பெண்ணிற்கு. சிகப்பு நிறம். ஆனால் உடலோ பெருத்து போயிருந்தது. ரோஸ் நிற புடவை அணிந்திருந்தாள். முகம் சோகமாயிருந்தது. அவளுக்கு பின்னால் ஒரு தடியான ஆள் அமைதியாய் நின்றிருந்தார்.கணவன் என யூகித்தேன்.

    “போன் பண்ணி கேட்டுட்டு தான் வந்தோம். இப்ப இல்லைங்கிறீங்களே?” என புலம்பினாள் அவள்.

    “நீங்க கீழ ரிஷப்ஷன்ல கேட்டிருப்பீங்க. எங்க புளோருல கேட்டிருந்தா சொல்லியிருப்போம்.” அவர்களுக்கு பின்னாலிருந்து முன்னால் வந்த பணியாள் இப்படி சொன்னான்.

    “அப்ப உங்க புளோர் நம்பரை சொல்லுங்க.” அந்த பெண்மணி ஒரு விலையுயர்ந்த செல்போனை எடுத்து அவர்கள் சொன்ன நம்பர்களை குறித்து கொண்டாள்.

    பில் கவுண்டரில் உட்கார்ந்திருந்த இளைஞன் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அவர்களை பார்த்தான். சேட் வட்டிக்கடையில் உட்கார வேண்டிய நபர் என நினைத்து கொண்டேன்.

    “வாக்கி டாக்கி வந்தா சொல்லுங்க. பையன் ஆசைபடறான்.” அந்த அம்மாள் அழுது விடுவாள் போலிருந்தது. அந்த இரு குண்டு மனிதர்களுக்கு இடையில் ஓர் ஏழு வயது மதிக்கதக்க சிறுவன் நின்றிருப்பதை அப்போது தான் கவனித்தேன். அழுது அழுது முகம் சிவந்திருந்தது. மிகுந்த ஏமாற்றத்திற்கு பிறகு மீண்டும் அழுகையை துவக்கும் முகபாவனை தோன்றியது. மூவரும் மிகுந்த சோகத்துடன் படிகளில் இறங்கி போவதை பார்த்தபடி இருந்தேன். அந்த பையனின் சோகத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. பையனை ஆறுதல்படுத்துவதற்காக கணவனும் மனைவியும் நடிக்கிறார்களா என சந்தேகம் தோன்றியது. ஆனால் அப்படி நினைக்கவும் முடியவில்லை. நானும் படிகளில் இறங்கி போய் இந்த பகுதியில் வேறு எங்கெல்லாம் பொம்மைக்கடைகள் இருக்கின்றன என அவர்களுக்கு சொல்லலாமா என தோன்றியது. பிறகு, ‘ம்கூம் பணக்கார பன்றிகள். பையனை இப்படி வளர்க்கிறாங்க. புத்தகம் வாங்கி தர வேண்டியது தானே அவனுக்கு,’ என சலித்து கொண்டேன். அதே சமயம் புத்தகங்கள் வைத்திருந்த இடத்தில் இது வரை தனியே நின்றிருந்த கண்ணாடி நபர் சட்டென தான் இவ்வளவு நேரம் வாசித்து கொண்டிருந்த புத்தகத்தை திரும்பவும் அலமாரியிலே வைத்துவிட்டு வேகவேகமாய் வெறுங்கையோடு படி இறங்கி போனார்.

    நாங்கள் படி இறங்கும் போது மேலும் பல சிறுவர்கள் தங்கள் தாயாருடன் மலர்ந்த முகத்துடன் மேலே ஏறி போனார்கள். இவர்கள் கீழே இறங்கும் போது சோகமான முகத்துடன் ஏன் இருக்கிறார்கள் என யோசித்தபடி நான் படிகளில் இறங்கி கொண்டு இருந்தேன்.


  • இந்தக் கணம்.
    இதை என் கனவுகளில் பார்த்திருக்கிறேன்.

    மென்பனியில் வரைகோடாய் நீ தெரிவதை போல
    ஆழ்மனதில் இது எங்கோ எனக்கு தெரிந்தபடியே தான் இருந்திருக்கிறது.

    என் உதிரச்சுவையை உன் வாள் அறிந்திருப்பது போல
    இதன் சுவையை உணர்ந்து தான் இருந்திருக்கிறேன் இத்தனை காலமும்.

    உன் கண்களில் மிளிரும் குரோதம் போல
    என் பயங்களின் பெருந்தொகுப்பில் இது ஒளிர்ந்து கொண்டே தான் இருந்திருக்கிறது.

    உனக்கும் எனக்கும் இடையே
    காற்றினில் கனக்கும் பெருந்துயரம் போல
    என்னுள்ளே கனத்து தான் இருந்திருக்கிறது இந்த எதிர்பார்ப்பு.

    கருத்திருக்கும் பின்புலம் வாய்க்குமென
    ஏனோ அப்போதே உண்ர்ந்தேன் நான்.

    இன்று நீ எனக்கு செய்வதை
    இதற்கு முன்
    நான் செய்திருக்கிறேன் பலருக்கு
    நூற்றுக்கணக்கான முறை.

    எனினும்
    இந்த கணத்தினை
    நான் என் கனவுகளில் பார்த்திருக்கிறேன்.