Category: கவிதைகள்

  • கண்ணீரில் மிதந்து செல்கிறது ரயில்.
    சோகம் ததும்ப
    அது நகருகையில்
    வானத்தில் இருந்து
    மேகங்களாய் கீழ் இறங்குகின்றன
    கனவுகளும், ஆசைகளும், நிராசைகளும்.

    நிகழ் காலத்தில் ரயில்.
    கடந்த காலத்திற்கு அவற்றை இழுத்து செல்ல
    வலுவற்ற கரங்களால் பிரயத்தனபடுகின்றன மேகங்கள்.

    உருவாகிறது
    சோகத்தின் பெருமழை.


  • அவ்வபோது பார்க்கும் காட்சி தான்.
    ஆனால் இன்று
    வேகமாய் நகரும் மேகங்களை பார்க்கும் போது
    வானமே இடிந்து கீழே விழுவது போல
    பிம்பம் உருவாகிறது.

    என் சிறு வயதில் பார்த்த
    ரயில் நிலையத்தருகே கூடி
    சிறிது நேரம் அரட்டையடித்து திரும்பும்
    முதியவர் கூட்டம் பற்றி அவ்வபோது நினைப்பதுண்டு.
    சில சமயம் அதை மேற்கோளாக காட்டி எல்லாம் பேசியதுண்டு.
    ஆனால் இப்போது அவர்களில் பெரும்பாலனோர்
    உயிருடன் இருக்க மாட்டார்கள் என்கிற நினைப்பு
    சமீபத்தில் தான் தோன்றியது.

    தினமும் போகும் பாதை தான்.
    ஒரு நாள் வேறு திசையில் இருந்து வரும்போது
    அது முற்றிலும் அன்னியமானதொரு சாலையாக மாறுகிறது.

    தினசரி புழங்கும் இடங்களில் கூட
    திடீரென ஒரு நாள் முளைக்கின்றன
    பெரிய கட்டிடங்கள்.

    என்னுள் எங்கோ
    திடீர் விழிப்பு
    திடீரென நிகழ்ந்து
    பிறகு கரைந்து போய் விடுகிறது.


  • “நான் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.”

    “கவிதை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.”

    “எழுதிக் கொண்டு இருக்கிறேன்.”

    “இருக்கிறேன்.”

     


  • அது ஒரு விளையாட்டு.
    ஆதிகாலத்து அரூப வேட்டையின் அரைகுறை நீட்சி.
    எங்கு எப்போது தொடங்கும் முடியும் என தெரியாது.

    கண்களோடு கண்கள் கோர்க்கப்படும் போது
    அங்கு கவிழ்கிறது ஒரு பேரமைதி.
    ஒரு கணம் தான் எனினும்
    அது ஒரு சலனமற்ற அகண்ட நீர்ப்பரப்பு.
    முதல் கல் விழுவதற்கு முன் வென்றாக வேண்டும்.


  • இருளில் ஆயிரக்கணக்கானோர் கூட்டம்!
    நடுவில் நெருப்பு வளர்த்து
    பெருகுது சத்தம்!
    யார் யாரோ யாரை யாரையோ எறிகிறார்கள்
    தீக்குண்டத்தில்!
    நடுங்கி நிற்கிறேன் நான்
    கூட்டதிற்கு வெளியே!


  • இருளிலே இருளோடு இருளாய் இருந்தான்.
    அவனது கர்ஜனை ஓயும் வரை நாங்கள் மதிலோடு ஒண்டியிருந்தோம்.

    அவள் எங்களை கடந்தாள்.
    வெள்ளை.
    பிரகாசம்.
    வெளிச்சம்.
    இளமையின் உயிர்ப்பு.

    அவளது முகத்தை சோகமே திரையிட்டிருந்ததை பார்த்தோம்.
    எங்கள் இரைஞ்சும் கண்களை உணர்வின்றி பார்த்து விட்டு
    அவள் அவனை நோக்கி நடந்தாள்.

    அவன் பார்ப்பதும்
    திணறுவதும்
    கூத்தாடுவதும்
    இறுதியாய் மண்டியிடுவதையும்
    எங்களால் உணர முடிந்தது.

    எங்கள் அம்புகளை தயாராக்கினோம்.


  • எங்கள் அறையில் எங்கெங்கும்

    குவிந்தும்

                 சிதறியும் கிடக்கின்றன

    அவனது வார்த்தைகள்.

    தனக்குள்ளே பேசியும்,

                                        சி

                                       ரி

                                        த்

                                        து

                                          ம்,

                                                 கதைசொல்லியும்

    கழிகின்றன அவனுடைய நாட்கள்.

     

    களவாடி பகிர்ந்துண்ட நினைவுகள்

    கல்மழை நெஞ்சில் விழ பயந்து ஓடிய கணங்கள்

    மழை நீரோடிய மெல்லிய மணலை சுவைத்த பாதங்கள்

    களிமண்ணில் பானைகள் வடித்தும், வயலில் நாற்று நட்டும்,

    துண்டுகளில் சடை வளர்த்தும் திரிவதாக கனவுகள்

    கைகோர்த்து பூப்பறிக்கச் சொல்லும் சடங்குகள்

    ‘கத்திரிக்கா தோட்டத்தில களை பறிக்க வாரியாளா’

    எனக் கூவும் பாடல்கள்

    எதிர்நீச்சல் போடசொல்லும் கால்வாய்கள்

    இசைவோடு நீந்தச்சொல்லும் குளங்கள்

    பள்ளத்தை கண்டு மிரளாத கிணற்று குளியல்கள்

    நண்பர்களுடன் கோபித்து

    பின் வெட்கப்புன்னகையுடன் சமாதானமாகும் பொழுதுகள்

    சண்டைகள்; சச்சரவுகள்

    இன்றும் எனது துயரங்களுக்கு மருந்து

    பால்யகால நினைவுகளே!

    அவற்றை நெஞ்சில் சுமந்து திரிந்து

    வீடு திரும்புகையில்

    தொலைந்த எதையோ

                                       அட்டைப்பெட்டிகளில்

                 துழாவிக்

                            தேடிக் கொண்டிருக்கிறான்

                                                       என் மகன்.

    – இளமதி.


  • இந்தக் கணம்.
    இதை என் கனவுகளில் பார்த்திருக்கிறேன்.

    மென்பனியில் வரைகோடாய் நீ தெரிவதை போல
    ஆழ்மனதில் இது எங்கோ எனக்கு தெரிந்தபடியே தான் இருந்திருக்கிறது.

    என் உதிரச்சுவையை உன் வாள் அறிந்திருப்பது போல
    இதன் சுவையை உணர்ந்து தான் இருந்திருக்கிறேன் இத்தனை காலமும்.

    உன் கண்களில் மிளிரும் குரோதம் போல
    என் பயங்களின் பெருந்தொகுப்பில் இது ஒளிர்ந்து கொண்டே தான் இருந்திருக்கிறது.

    உனக்கும் எனக்கும் இடையே
    காற்றினில் கனக்கும் பெருந்துயரம் போல
    என்னுள்ளே கனத்து தான் இருந்திருக்கிறது இந்த எதிர்பார்ப்பு.

    கருத்திருக்கும் பின்புலம் வாய்க்குமென
    ஏனோ அப்போதே உண்ர்ந்தேன் நான்.

    இன்று நீ எனக்கு செய்வதை
    இதற்கு முன்
    நான் செய்திருக்கிறேன் பலருக்கு
    நூற்றுக்கணக்கான முறை.

    எனினும்
    இந்த கணத்தினை
    நான் என் கனவுகளில் பார்த்திருக்கிறேன்.


  • அதிசயம் தான்.
    சடசடவென பெய்யும் மழையில்
    உடல் எங்கும்
    உள்ளுக்குள்ளாக வியாபிக்கிறது ஈரம்.

    கைகளில் மட்டுமே நீர்.
    எப்படி சுழற்றினாலும் மாற்றமில்லை.

    கண்களை மூடும் போது
    இடி இடிக்கும் சப்தம்
    இமைகளுக்குள்ளாக.

    கரைகிறேன்.

     


  • ஆயிரம் ரூபாயிற்கு சில்லறை உடனே கிடைத்தது ஆச்சரியம் தான்.
    நெரிசல் மிகுந்த டீக்கடையோரம்
    கால்களை பார்த்தவாறு
    ஒரு மூலையில் அமர்ந்து
    பத்து ரூபாய் நோட்டுகட்டுக்களை எடுத்து
    ஒவ்வொரு நோட்டாய் கிழித்து போட தொடங்கினேன்.
    முதலில் ஒரு மடிப்பு.
    இரண்டாக
    நான்காக
    எட்டாக கிழித்தேன்.

    கால்களை பார்க்கக்கூடாது.
    வெப்பத்தை உணரக்கூடாது.
    வியர்வையை துடைக்கக்கூடாது.
    ஓலியினை உணர்தல் வேண்டாம்.

    தரையெங்கும் குப்பைக்கூளம்.
    கால்களிடையே பறக்கும் கிழிசல்கள்.

    ஊழ்த்த இறைச்சி
    நும்மிடைப் பாவம் நில்லாவே.