Category: கவிதைகள்

  • அடிமைகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் சுகம்.
    வேலைகளை ஏவலாம்.
    கோபத்தைக் கொட்டலாம்.
    அடிக்க கூட செய்யலாம்.
    வல்லுறவு கொள்ளலாம்.
    நம் காலில் விழுந்து அவர்களை அழ வைக்கலாம்.

    “மன்னித்து விட்டேன் இந்த முறை பிழைத்து கொள்,” என்று மட்டும் சொல்லாதீர்கள்.
    அதற்குப் பதில் அவர்களை கொன்று விடலாம்.


  • மோகம் வென்று
    கழுத்தை அறுத்து இரத்தம் குடித்து
    உதிரப் படுக்கையில் தூங்கும் போது
    வருவதெல்லாம் துர்கனவுகள்.
    இரத்தம் பீறிடும் போது எப்படி வலிக்கும்?
    என்னுள் குத்திய ஊசிகளின் எண்ணிக்கை
    அதிகரித்து கொண்டே இருக்கின்றன.
    இத்தனை வலியையும் கொடையளிக்க
    தினம் தினம் திரிகிறேன்
    சிலுவையை சுமந்தபடி.


  • சற்று முன்பு எனது வார்த்தைகளை திருடிச் சென்றவன்

    இதோ இந்த நகரின் ஏதோ ஓர் இருள்சந்தினுள்

    அதனை திறந்து பார்ப்பான்.

     

    எதை எடுத்து கொள்வான், எதை எறிந்து செல்வான் என தெரியவில்லை.

    திருடியவன் தன் வழியில் எங்காவது எதாவது கொட்டி இருக்கிறானா என

    என் பாட்டி பாதை எங்கும் தேட போய் விட்டாள்.

    மௌனத்தை வாயில் மென்றவாறு சலித்து கொள்கிறேன் நான்.


  • ஆயிரம் முட்களாய் குளிர்.
    சுருண்டு கிடக்கும் கிழவியிடமிருந்து
    பிளாட்பார்ம் எங்கும் பரவுகிறது நடுக்கம்.
    அவளது தனிமையை அவ்வபோது தின்று போகின்றன
    சாலை பெருவாகனங்கள்.
    கருவிழிக்குள் எறும்புகள் பாதை அமைக்கும் வரை காத்திருக்கிறது இருள்.

    பிறகு ஒரு இரவு
    குளிரையும் இருளையும் மாண்டவளுக்காக அங்கே படையல் போட்டு
    உட்கார்ந்திருக்கிறாள் மற்றொரு பிளாட்பார்ம் கிழவி.


  • பாம்புகள்!
    தடித்தவை! இளைத்தவை! பெருந்தலை!
    நீண்டவை! குறுகியவை!
    சில படமெடுக்கும்! சில சுருங்கி கிடக்கும்!
    ஒன்றன் மேல் ஒன்றாய் நெளிந்து கொண்டு இருக்கும்
    ஆயிரக்கணக்கான சர்ப்பங்கள்
    சிலந்தி வலைப்பின்னலாய்
    பச்சைவெளியை கறுப்பாக்கி கொண்டிருக்கின்றன.

    உச்சியில் ஆணவமாய் தாண்டவமாடும்
    ஐந்து தலையானின் சீறல்
    மிச்சமிருக்கும் தாவரங்களையும் வாடச் செய்கின்றன.

    வானத்தை சூழ்கின்றன செந்நிற மேகங்கள்.
    நிலமென்றும் மலையென்றும் பாராது
    நடுநடுங்க செய்கிறது
    மெல்லியதாய் படமெடுத்து பின் விஸ்வரூபமெடுக்கும்
    நிலநடுக்கம்.

    விட்டு விட்டு பெய்த மழையால்
    உருவாகிறது ஒரு பெருவெள்ளம்.

    ஐந்து தலையானில் தொடங்கி
    ஓரே சர்ப்பமாய் பின்னி நிற்கின்றன
    மற்ற ஆயிரக்கணக்கான பாம்புகள்.

    ஒரு மின்னல் வெட்டி முறிந்து போனது.


  • எவ்வளவோ முறை தவிர்க்க முயன்றாலும்
    இன்று மீண்டும்
    அந்த விழிகளை பார்த்து விட்டேன்.

    சுயத்தை மறந்து
    தரையோடு தரையாய்
    கரைந்தாற் போல பரிதவிப்பு.

    தனது அடுத்த நொடி
    இன்னொருவன் கைகளால் எழுதபட போகிறதென பயம்.

    சுருண்டு பொசுங்கி புள்ளியாய்,
    கடைசி எழுத்திற்குள்
    ஒளிந்திருக்கும் இயலாமை.

    கண்களால் மன்றாடுவதை தவிர
    உடலிலும் உயிரிலும்
    வேறு செயலில்லை.

    கூர்மையானதொரு ஆயுதம்
    என்னுள் ஆழமாய் எங்கோ எதையோ அறுக்கிறது.


  • நாங்கள் சில நூறு பேர் இருந்தோம்.
    ஏழெட்டு மின்னல் கீற்றுகள்
    ஒரே சமயத்தில் வானத்தில் தோன்றுவதை பார்த்தோம்.
    அடர் கருப்பினூடாக அந்த மின்னல் கிழிசல்கள்
    அவரது வருகைக்கு முன்னுரை எழுதின.

    குழந்தை அழும் சத்தம்.
    அதை அதட்டும் ஒலி.
    அழுகை கட்டுபடாமல் பெரும் சத்தமாகி
    தொற்று போல பலருக்கும் பரவுகிறது.
    ஒரு பெண் தேம்பி தேம்பி அழுகிறாள்.
    முதியவர் சரிந்து தரையில் விழுகிறார்.
    ஒரு கூட்டுப் பாடல் போல அழுகை ஒலி
    பெரும் வடிவெடித்து வெடிக்கிறது.

    ஒரு பாம்பு நெளிவது போல
    எங்களுக்கு அடியில் பூமி நெளிகிறது.
    ஒரு பெண் பயந்து அலறுகிறாள்.
    காற்று எங்களது முகத்தில் மழைத்தூறலை வீசி அடிக்கிறது.
    கண்ணிமைக்கும் நேரத்தில் அது நிகழ்ந்தது.


  • பக்கத்தில் படுத்திருக்கும் பெண்
    யாரென தெரியவில்லை.
    இருளை அகற்ற சுவிட்ச்
    எங்கிருக்கிறது என புரியவில்லை.
    இது என் வீடுமில்லை.
    இங்கு இதற்கு முன் வந்ததாய்
    ஞாபகமும் இல்லை. 

    என் துணிகளை தேடி
    தரையில் கைகளால் துளாவிய போது
    மீண்டும் வந்தது
    மண்டைக்குள் அந்த நெளியும் புழு.

    கண்கள் இருட்டின.
    காதிலிருந்து இரத்தம் வழிந்தது.
    அந்த புழு பெருத்து கொண்டு இருக்கிறது.
    உடலெங்கும் வலி வியாபித்தது.
    விஷ முற்கள் கடகடவென
    உடலெங்கும் முளைக்க தொடங்குகின்றன.

    முதுகு தண்டினில்
    மற்றொரு புழு இப்போது நகர தொடங்குகிறது.
    தரையில் படுத்து துடிக்கிறேன்.
    எழுந்து நின்றால் சற்று வலி குறையும் என
    எழுந்து நிற்கிறேன்.

    எதையும் அறியாமல் நிர்வாணமாய்
    தூங்கி கொண்டிருக்கும் அந்த பெண் யார் என
    இப்போதும் புலப்படவில்லை.

    காற்று தான் வலியை கொண்டு வருகிறதா?
    ஜன்னலில் எட்டி பார்த்தேன்.
    நான் நிற்பது கட்டாயம்
    பத்து அல்லது பதினைந்தாவது மாடியாவது இருக்கும்.
    இது கட்டாயம் என்னுடைய நகரமல்ல.…மேலும் வாசிக்க


  • எதிர்படும் ஒவ்வொருவரின் கண்களிலும்
    ஒளிந்திருக்கிறது
    கார்முகிலென சோகம்.

    புன்னகையால் அவர்கள் தங்களது துயரத்தை
    மறைக்க முயல்கிறார்கள்.
    எனினும் அது எப்போதும் சாத்தியபடுவதில்லை.

    வெளிவரும் அரிய கணங்களில்
    ஒருவரது சோகம்
    மற்றவரையும் தொற்றி கொள்கிறது.
    அதனோடு குண்டூசிகளாய் குத்துகின்றன
    ஏன் ஒளித்து வைக்கிறீர்கள் என்கிற
    துன்பம்.


  • கோலி குண்டுகளாய் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள்
    உருண்டோடும் பரந்த நகரத்து சாலை.
    எப்போதும் போல  இப்போதும் டிராபிக் ஜாம்.

    இந்த முறை காரணம் ஒரு கிழவி.
    பொறுமையில்லாமல் ஹாரண் ஓலி அலறுகிறது.
    சாலையை கடக்க வந்த கிழவி சாலையிலே அமர்ந்து விட்டாள்.
    பல பேர் கத்தி கொண்டிருக்கிறார்கள்.

    பைத்தியமா அவள்?

    சாலையில் என்னவோ செய்து கொண்டிருக்கிறாள்.
    அவளருகே அறுந்து போன மஞ்சள் பை.
    சாலையில் பையிலிருந்து கொட்டிய அரிசி.
    வசையொலி கூடியபடி இருக்கிறது.
    அரிசியை அள்ளி மீண்டும் பையினுள் திணித்து விடும்
    முனைப்பில் இருக்கிறாள் கிழவி.