Author: சாய்ராம் சிவகுமார்

  • கடந்த ஞாயிற்று கிழமை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது அரசியல் பிரவேசத்தை முறைப்படி அறிவித்தார். சில மாதங்களாகவே ஆந்திராவில் எதிர்பார்க்கபட்ட விஷயம் என்றாலும், சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் பலவிதமான எதிர்பார்ப்புகளை தூண்டியிருக்கிறது. அடுத்த தேர்தலிலே முதலமைச்சர் ஆகுமளவு அவரது புகழ் இல்லையென்றாலும் தேர்தல் முடிவுகளில் அவரால் ஓரளவு தாக்கத்தை உண்டு செய்ய இயலும் என்பதை யாரும் மறுப்பதிற்கில்லை.

    சிரஞ்சீவி எதற்காக அரசியலில் பிரவேசிக்கிறார்?

    மக்களுக்கு சேவை செய்வதற்காக தான் அரசியலில் நுழைவதாக சிரஞ்சீவி சொல்லியிருக்கிறார். மேலும் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது தன்னால் ஆந்திர அரசியலில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தை கொண்டு வர முடியும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

    சிரஞ்சீவியை கவனித்து வரும் சிலருக்கு சிரஞ்சீவியின் அரசியல் ஆசைக்கு ஜோதிடமும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் அறிவார்கள். நடிகர் சிரஞ்சீவிக்கு பல காலமாகவே கணிதம் மற்றும் ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உண்டு. அரசியல் கட்சி தொடங்கும் திட்டம் உருவான பிறகு அவர் மக்களது பிரச்சனைகளுக்காக நேரம் ஒதுக்கியதை விட ராமேஸ்வரத்தில், திருப்பதியில் ஹோமம், யாகம் என்று தான் அதிக நேரம் ஒதுக்கியிருக்கிறார் என சொல்கிறார்கள் விமர்சகர்கள்.

    …மேலும் வாசிக்க

  • டாக்ஸிக் ரைட்டர் என்றொரு வலைப்பதிவர். இந்த வருடம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இவர் பிளாக்கரில் உள்ள தன் வலைப்பதிவில் மும்பையை சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனத்தை பற்றி சில குற்றச்சாட்டுகளை எழுதியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை அந்த கட்டுமான நிறுவனத்தால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அந்த வலைப்பதிவருக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடுப்பதாக முடிவு செய்தார்கள். இதற்காக அந்த வலைப்பதிவர் யார் என்கிற தகவல்களை கூகுள் நிறுவனம் தங்களுக்கு தெரிவிக்க வேண்டுமென மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். நீதிபதிகளும் அந்த தகவல்களை சொல்லும்படி கூகுள் நிறுவனத்திற்கு தற்போது உத்தரவிட்டு இருக்கிறார்கள். இப்போது டாக்ஸிக் ரைட்டரின் வலைப்பதிவு ஏற்கெனவே கூகுள் நிறுவனத்தால் அழிக்கப்பட்டு விட்டது என்கிறார்கள். வலைப்பதிவு அழிக்கபட்டது பற்றிய உறுதியான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இஸ்ரேலில் இதே போன்று ஒரு வழக்கு நடந்தது. ஒரு வலைப்பதிவர் தனது ஊர் முனசிபல் கவுன்சில் தேர்தலுக்கு நிற்பவர்களை பற்றிய குற்றச்சாட்டுகளை தனது வலைப்பதிவில் எழுதியிருக்கிறார்.… …மேலும் வாசிக்க


  • இந்த மாதம் இரண்டு குழந்தைகளை பற்றிய இரு தனி செய்திகள் பத்திரிக்கைகளில் சர்ச்சைகளாக உருவெடுத்தன.ஒன்று மும்பையில் உள்ள ஹரீஷ் மற்றும் நீகிதா மேத்தா தம்பதியினர் கருவில் உள்ள தங்கள் (25 வார வயதுள்ள) குழந்தைக்கு இருதயத்தில் குறைபாடு உள்ளது கண்டுபிடிக்கபட்டுள்ளதால் அதனை கருகலைப்பு செய்ய அனுமதி கேட்டு மும்பை உயர் நீதிமன்றம் படியேறியதும், அதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்த சம்பவம். கருகலைப்பு செய்வதற்கான சட்டம் இந்தியாவில் இப்போது விவாத பொருளாகி இருக்கிறது. 20 வாரங்களுக்குள் அபார்ட் செய்ய சட்டம் அனுமதிக்கிறது. அதற்கு பிறகு அபார்ஷன் செய்வதென்பது தாயின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என சட்டம் பொருள் கொண்டுள்ளதால் இந்த நிலை. இந்த சட்டம் இயற்றபட்ட ஆண்டு 1971-ம் வருடம். இதற்கு பிறகான 35 வருடங்களில் மருத்துவத்துறை பெரியளவு முன்னேறி விட்டது. இன்று தாயாரின் உயிருக்கு பாதகம் விளைவிக்காமல் பிரசவ காலத்தின் எந்த சமயத்திலும் கருகலைப்பு செய்யும் திறன் மருத்துவத்திற்கு உண்டு. என்றாலும் சட்டம் இந்த வளர்ச்சியை கணக்கில் எடுத்து கொண்டு தன்னை மேம்படுத்தி கொள்ளவில்லை.
    …மேலும் வாசிக்க

  • சென்னை அண்ணா நகர். ஷேர் ஆட்டோ ஒன்றில் இரு பெண்மணிகள் பல காலம் கழித்து சந்திக்கிறார்கள். இருவருமே மத்தியவர்க்கத்தினர். வயதான பெண்மணி ஆஸ்திரேலியாவில் டாக்டருக்குப் படிக்கும் தனது மகளைப் பற்றி பேசி கொண்டு வருகிறார்.

    “அவ பத்தாவது, பனிரெண்டாவது படிக்கும் போது இரண்டு தடவையும் நான் இரண்டு மாசம் லீவு எடுத்து வீட்டுலயே இருந்தேன். அவளுக்கு சூப்புன்னா அவ்வளவு இன்ட்ரெஸ்ட். ஒரு அண்டா நிறைய சூப் கொடுத்தா கூட குடிச்சிடுவா. அவ அப்பவே சொன்னா என் படிப்பிற்காக நீங்க அஞ்சு காசு கூட செலவழிக்க கூடாதுன்னு. அதே மாதிரி அவ படிப்பு முழுக்க மெரீட்ல தான் வந்தா. அப்படியிருந்தும் ஆஸ்திரேலியாவுல படிக்க இது வரைக்கும் பத்து லட்சம் செலவாயிடுச்சு. அவங்க அப்பா என்னென்ன ஷேவிங்க்ஸ் வைச்சிருக்கிறாருன்னு எனக்கு தெரியாது. ஆனா என் பணமெல்லாம் உனக்கு தான்டான்னு அவ பனிரெண்டாவது முடிச்சவுடனே பத்து லட்சத்தை எடுத்து வைச்சிட்டாரு. ஆமா, உன் பையன் கூட இப்ப பனிரெண்டாவது படிக்கிறான் தானே?”

    …மேலும் வாசிக்க

  • துப்பாக்கி தோட்டாக்கள் வெடித்து எங்களிடையே நுழைவது
    மெல்லிய கம்பிகள் ஈட்டிகளாய் எறியபடுவது போல தோற்றம்.
    செவி தன் திறனை இழந்து விட்டது.
    கம்பிகள் கால்களை நோக்கி தான் வருகின்றன.
    ஒளியை கிளப்பி போவதும்
    தரையில் பட்டு சிதறுவதும்
    எல்லாரும் கால்களை தூக்கி தப்பிக்க நினைப்பதும்
    யாருடைய இரத்தமோ யார் யாரோ மீதெல்லாம் பரவி கிடப்பதும்…!
    யார் யார் சாக போகிறார்கள்?
    நானில்லை.
    நானில்லை.
    காற்றடித்து ஒதுங்கும் உதிர்ந்த இலைகள் போல
    நான் சாதுரியமாக ஒதுங்கி கொண்டிருக்கிறேன்.
    கண்கள் இருளும் போது தான்
    ஏன் எனக்கு எப்போதும் இப்படி நடக்கிறது என வருந்துகிறேன்.
    ஆனால் வலியே இல்லை.
    இறந்து விட்டேனா?


  • பாதி சொம்பு அரிசி எடுக்க
    அடுக்கி வைத்த மூட்டைகளில்
    மேல் மூட்டையை பிரிக்கவும்
    கொட்டி விழுந்து தரையில் பரவிய அரிசி போல்
    ஒரு நினைவு கோர்த்து இழுத்து வருகிறது பலவற்றை.


  • மேகங்கள் கர்ஜித்து மழை ஊற்ற தயாரானது போல
    புயல் கிளம்பியது போல
    போலீஸ்காரர்கள் ஓடி வரவும்
    சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள் அவசரமாய் ஓட எத்தனிக்க
    பிளாட்பார்ம் வியாபாரிகள் பையை சுருட்டி தப்பிக்க முயன்றார்கள்.

    போர்களமாய் சாலை பரபரப்பானது.
    ஒற்றை செருப்புகள் நிறைந்திருக்க,
    லத்தி உடலில் விழும் சத்தமும்,
    வலியில் சிலர் கத்துவதும்,
    பீதியுற்ற பார்வைகளும் அங்கு நிறைந்திருக்கின்றன.

    சைக்கிள் ரிக்ஷாவில் இருந்து அவன் எழுந்திருக்க முயலும் போது
    அது கவிழ்ந்தது.
    கால் சுளுக்கி கொண்டது.
    அவன் எழுந்திருக்க முயலும் போதே ஒல்லியாய் இருந்த ஒரு போலீஸ்காரன்
    உயர்த்தபட்ட லத்தியுடன் ஓடி வந்தான்.
    சர்வமும் ஒடுங்கி கைகளை தலைக்கு மேலே வைத்து அவன் சுருண்டான்.

    பணிதலை கண்ட லத்தி சந்தோஷமாய் கீழே இறங்கும் போது
    மிருகத்தனமான அலறலுடன் குறுக்கே வந்தாள் அந்த ரிக்ஷாக்காரனின் மனைவி.

    கலைந்த தலைமுடி,
    விரித்த கைகள்,
    திறந்த மார்புகள்,
    மிருகத்தனமான அலறல்,
    பார்வையில் தாங்க முடியா வீரியம்.

    விழுந்து கிடந்த கணவனுக்கு
    கேடயமாக தன் உடலை பரப்பி
    இனம் புரியா மிருக அலறலுடன் நிற்கும் அந்த மனைவியை கண்டு
    லத்தி திகைத்தது,
    பயந்தது,
    குழம்பியது,
    வெட்கமுற்றது,
    பின்வாங்கியது.


  • ஒரு கனவு மெய்ப்பட்ட சம்பவம் அது; நிலவினில் மனிதன் காலடி வைத்தான். அறிவியல் முன்னேற்றங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல கனவுகளையும் மாற்றி விட்ட தருணமது.அமெரிக்க ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையத்தின் ‘அப்போலோ’ திட்டங்கள் நிலவுக்கு மனிதனை அழைத்துச் செல்லும் குறிக்கோளுடன் தொடங்கப்பட்டவை. ஆறு அப்போலோ பயணங்கள் (அப்போலோக்கள் 11, 12, 14, 15, 16 & 17) இந்தக் குறிக்கோளை அடைந்தன. அப்போலோ 11, 16 ஜூலை 1969 அன்று ஏவப்பட்டது. ஜூலை 20, 1969-இல் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவினில் காலடி வைத்தார்.

    பயணத்தைத் தொடங்கும்பொழுது ‘விண்வெளிக் குழு’ உயிரோடு திரும்பி வருவதற்கு 90 சதவீத வாய்ப்பும், நிலவினில் காலடி வைப்பதற்கு 50 சதவீத வாய்ப்பும் இருந்ததாகவே ஆர்ம்ஸ்ட்ராங் எண்ணிக் கொண்டிருந்தார். அப்போலோ திட்டத்தில் செயலாற்றிய எல்லாருக்கும் இவ் விஷயம் தெளிவாகத் தெரியும். அன்றைய அமெரிக்க அதிபர் நிக்சன், ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்குப் பின் பேச வேண்டிய உரையையும் தயாராக வைத்திருந்தார். நிக்சனுக்கு உரையை எழுதித் தரும் வில்லியம் சபையர், ‘விதி, நிலவினில் அமைதியாக ஆராயப் போனவர்களை அமைதியாக உறங்க வைத்துவிட்டது,’ என்று எழுதியிருந்தார்.

    …மேலும் வாசிக்க

  • என்னுடன் பணி புரிந்த நண்பர் ஒருவரின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. உயிருக்குப் போராடி கொண்டிருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவரது உடல்நிலை அவரை வீட்டோடு முடக்கியிருந்தது. நண்பரின் தாயோ மனநிலை குன்றியவர். நண்பர் ஒரே மகன். திருமணமும் ஆகவில்லை. அவரது வாழ்க்கையே மற்றவர்கள் பார்த்து பாவப்படும் அளவில் இருந்தது. இதில் திடீரென தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் முற்றிலுமாய் தளர்ந்து விட்டார்.

    அன்று காலை அவரது தந்தை வீட்டு குளியலறையில் மயங்கி விழுந்தவுடன், நண்பர் தன் தந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் சென்னையில் உள்ள ஒரு பிரபலமான மருத்துவமனைக்கு தந்தையை அழைத்து போயிருக்கிறார். நம் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு உடல்நிலை சரியில்லையென்றால் முதலில் உயிரைக் காப்பாற்றுவோமென தான் நினைப்போம். பணத்தைப் பற்றி கவலைப்பட அப்போது தோன்றாது.

    மருத்துவமனையில் நண்பரின் தந்தை சேர்க்கப்பட்ட இரண்டாவது நாள் தாம் நண்பருக்குத் தனது தவறு புரிந்தது. சூடு வைக்கப்பட்ட ஆட்டோ மீட்டர் போல ஒரு நாளைக்குச் சில ஆயிரங்கள் பில் தொகையாக உயர தொடங்கியது.… …மேலும் வாசிக்க


  • முதலாளி தன் மனைவிக்கு
    வாங்கி கொடுத்த முத்துச்சரத்தில்
    உதிர வாசம்!

    உதிரம் திருடப்பட்டவர்கள்
    மாலை நேரம் வீடு திரும்புகையில்,
    கதவை திறக்கும் போது படியும்
    உடற்களைப்புடனான மன சலிப்பு!

    அஞ்சால் அலுப்பு மருந்தினை
    உட் கொண்டு
    களைப்பையும் சலிப்பையும்
    டாஸ்மாக்கில் ஊற்றி
    வாழ்வின் அபத்தத்தை பாடுவோம், வா!

    நம் மனைவிமார்களின் கண்ணீரை
    அவர்களது கண்ணீராலே குளிப்பாட்டுவோம்.
    அவர்களிடமாவது நாம் முதலாளிகளாய் இருப்போம்!