சற்று முன்பு பெய்த மழையின்
பளபளப்பில்
ஓர் இரயில் நிலையம்.
ஈரத் தரை விரிந்து கிடந்த
பிளாட்பார்மில்
சோகமுடன் அமர்ந்திருக்கிறாள்
அந்தப் பெண்.
அழுகிறாள்.
காரணம் தெரியவில்லை.
வெள்ளை நிறமே பெருகி உருகுவது போல்.
துயரத்தின் கருவறைக்குள் குழுந்தையாய்.
ஈரம் சொட்டும் இலைகளாகிறாள்.
கூட்டம் அதிகமில்லை.
குழந்தையுடன் நடந்து போகும் பெண்ணொருத்திக்கு
இவளைக் கண்டு முகம் கோணுகிறது.
கண்ணீர் திரண்டு நிற்கிறது.
அழுகிற பெண்ணின் அழகில்
எல்லாம் மறந்து
அவளையே வெறித்தபடி நிற்கிறாள்
ஒரு மூதாட்டி.
அழுபவளின் உடல் குலுங்குகிறது.
கைகளைக் கண்ணில் பொத்தி
தன்னைச் சுருட்டி கொள்கிறாள்.
சுருண்டு கிடந்தவளுக்குப் பின்னாலிருந்த
இரயில்வே வேலி உருகுகிறது.
சோகம் தாளாமல் மீண்டும் தூறல் தொடங்குகிறது.
நிலமெல்லாம் தூறலின் தடதடப்பு.
தவளைகள் எங்கிருந்தோ தொடக்க வாத்தியமிசைக்கின்றன.
அலையாய் பரவி வந்த காற்றொன்று
மரத்திலெல்லாம் சப்தமெழுப்பி
இலையிலிருந்து ஈரத்தை தரையில் கொட்டி
படபடத்து இசைக்கிறது.
அந்தப் பெண்ணைக்
கண்ட கண்கள் அனைத்தும்
இருண்டு கிடக்கின்றன.
சோகமாய் ஊளையிட்டு
ஓடி வருகிறது
இரயில் ஒன்று.
Leave a Reply