இன்று புத்தக அலமாரியில் இருந்த XIII இரத்தப் படலம் காமிக்ஸ் முழு தொகுப்பினை மீண்டும் புரட்டி கொண்டிருந்தேன். 858 பக்கங்கள், ஏ4 சைஸினை விட பெரிய அளவு, 18 பாகங்களாக நீளும் ஒரே கதை; இந்தப் புத்தகத்தினை வாங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது. மூன்று முறைகளாவது முழு காமிக்ஸையும் வாசித்து இருப்பேன். அவ்வபோது எடுத்து புரட்டி பார்த்து இருக்கிறேன். எப்போது புரட்டினாலும் வாசித்தாலும் இன்னும் சுவாரஸ்யம் குன்றாமல் இருக்கிறது இரத்தப் படலம்.
இரத்தப் படலம் முழு தொகுப்பு
இரண்டு ஆண்டுகளுக்கு முன் தீபாவளிக்குப் பிறகு ஒரு நாள். இந்த காமிக்ஸ் 18 பாகங்களும் சேர்ந்து ஒரு முழு தொகுப்பாக லயன் காமிக்ஸில் வெளிவந்து இருக்கிறது என்று இணையத்தில் படித்தேன். தெரிந்த புத்தக விற்பனை கடைகளில் எல்லாம் விசாரித்த போது இப்போது லயன் காமிக்ஸ் கிடைப்பதில்லை என்று சொல்லி விட்டார்கள். நண்பர்களிடம் தெரிந்தவர்களிடம் எல்லாம் கேட்டும் இந்தப் புத்தகத்தை வாங்கும் வழி தெரியாமல் இருந்தது. லயன் காமிக்ஸை அச்சிடும் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் அலுவலகம் சிவகாசியில் இருக்கிறது என கண்டுப்பிடித்தேன். என் கல்லூரி கால நண்பன் ஆண்டனி தற்போது சிவகாசியில் தான் இருக்கிறான். அவனிடம் செல்பேசியில் பேசி அந்தப் புத்தகத்தை வாங்கி தரும்படி கேட்டேன். அடுத்த நாள் அவன் அந்தக் காமிக்ஸை வாங்குவதற்குள் இரண்டு மூன்று முறை அவனைத் தொல்லை கொடுத்தபடி இருந்தேன். அடுத்த நாள் அவன் அந்த அலுவலகத்தைக் கண்டுபிடித்து செல்பேசியில் காமிக்ஸ் வாங்கி விட்டதாய் சொன்ன போது சந்தோஷமாய் இருந்தது. அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் கழித்து கூரியர் பார்சலில் தடித்த புத்தகம் என் வீடு தேடி வந்தது. அதை ஆர்வமுடன் வாங்கி பிரிக்கையில் என் மனைவி இந்தக் காமிக்ஸ் புத்தகத்தை என மகனுக்காக தான் நான் கஷ்டப்பட்டு வாங்கியதாய் நினைத்து கொண்டிருந்தாள். இது எனக்காக என்று நான் சொன்ன போது அவளால் அதை நம்பவே முடியவில்லை. தடித்த பார்சலைப் பிரித்து கடற்பறவைகள் பறக்கும் கடற்கரையோரம் முதியவர் ஒருவர் மீன் பிடித்து கொண்டிருக்க தொலைவில் அவரது வீடு தெரியும் முதல் ஓவியத்தைப் பார்த்தவுடன் மனம் சிறு வயது நினைவுகளில் திளைத்து போனது.
காமிக்ஸ் உலகம்
நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய அம்மா வண்ண படங்களுடன் கூடிய ஆங்கிலத்தில் இருந்த லாரல் ஹார்டி காமிக்ஸை எனக்கு வாசித்து காட்டியது இன்னும் நினைவில் இருக்கிறது. அது தான் தொடக்கம். அதற்குப் பிறகு காமிக்ஸ் உலகில் திளைத்து மகிழ்ந்த சிறுவர்களில் நானும் ஒருவனாகி விட்டேன். அப்போதெல்லாம் இணையம் கிடையாது, வீடியோ கேம்ஸ் கிடையாது, தொலைக்காட்சி கிடையாது. வீதியில் ஓடியாடி விளையாடியது போக எங்களுக்குக் காமிக்ஸ் தான் பொழுதுபோக்கு. சிறுக சிறுக காசு சேர்த்து, பெற்றோரிடம் நச்சரித்து தர்மபுரி ராமா லாட்ஜில் இருந்த புத்தக கடையில் காமிக்ஸை வாங்கும் போது அத்தனை சந்தோஷமாய் இருக்கும். வண்ண வண்ண அட்டைகளோடு ஆங்கில புத்தகங்கள் தொங்கும் அந்தக் கடை எதை எதையோ எங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. அங்கே தான் ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், திகில் காமிக்ஸ் எல்லாம் விற்கப்பட்டது. எப்போதாவது வண்ண வண்ண கலரில் ஸ்பைடர் மேன் ஆங்கில காமிக்ஸ் இதழும் அங்கே கிடைக்கும். பெங்களூருவில் இருந்து எங்கள் ஊருக்குக் குடிமாறி வந்த சிறுவனின் வீட்டில் வண்ண வண்ண ஆங்கில காமிக்ஸில் சூப்பர் மேன், பேட் மேன், சிகப்பு ஸ்பைடர் மேன் ஜொலிப்பார்கள்.
சிறுவர்கள் ஒவ்வொருவரும் நாங்கள் வாங்கிய காமிக்ஸ் இதழை அடுத்தவருக்குத் தந்து அவர்களுடையதை நாங்கள் வாசிக்க எடுத்து கொள்வோம். அதிலே எத்தனையோ சண்டைகள் நடக்கும். பிறகு கூடி குலாவுதலும் உண்டு. எங்களை விட வயதில் பெரிய அண்ணன்கள் எங்களை மிரட்டி காமிக்ஸ் புத்தகங்களை பிடுங்கி சென்றதும் உண்டு. மற்றவர் வீட்டிலே காமிக்ஸ் திருடியதும் உண்டு.
ராணி காமிக்ஸ் தான் முதலில் அறிமுகமாயிற்று. கைகளில் பிடிக்க வசதியான அளவிலே இருந்தது அது. வரிசையாக படங்கள் வாசிக்க சிரமம் தராத வகையில் அடுக்கப்பட்டு இருக்கும். ஜேம்ஸ் பாண்ட் கதைகள் தான் அதில் பிடித்தமானவை. டாக்டர் நோ கதை இன்னும் நினைவில் இருக்கிறது. ஜேம்ஸ் பாண்ட் துப்பறியும் என்று தொடங்கும் அதன் தலைப்புகளே சுவாரஸ்யமானவை. பிறகு லயன் காமிக்ஸ் மற்றும் முத்து காமிக்ஸ் அறிமுகமான போது அது ராணி காமிக்ஸ் போல கைகளில் பிடிக்க வசதியாக இல்லையே, அளவில் சிறியதாக இருக்கிறதே என தோன்றியது. அதோடு படங்கள் நுணுக்கி நுணுக்கி வரையப்பட்டாற் போலவும் தோன்றியது. லே அவுட் வேறு வித்தியாசமாக இருந்தது. வரிசையாக இல்லாமல் இருந்த படங்களை முதலில் புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. ஆரம்பம் தான் அப்படி. அழுத்தமான கதாபாத்திரங்கள், நேர் கோட்டில் பயணிக்காத கதைகள், பின்னணியையும் விரிவாக காட்டும் படங்கள் அல்லது மனவோட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஓவியங்கள் இப்படி விரைவிலே எங்களை கொள்ளை கொண்டன லயன், திகில் மற்றும் முத்து காமிக்ஸ்.
செவ்விந்தியர்கள் போகுமிடத்தில்
கெட்டவனாகவும் நல்லவனாகவும் மாறும் நீள மூக்கு ஸ்பைடர், ஆர்ச்சி ரோபோ, காமெடி லக்கிலுக், லேடி ஜேம்ஸ் பாண்ட் மாடஸ்தி, ரிப்போர்ட்டர் ஜானி, டெக்ஸ் வில்லர், மந்திரங்கள் செய்யும் மாண்ட்ரேக், இரும்புக்கை மாயாவி இப்படி எத்தனை எத்தனையோ ஹீரோக்கள், வில்லன்கள், கதாநாயகிகள் என வித்தியாசமான காமிக்ஸ் உலகில் தனக்கென அழிக்க முடியாத தனி இடத்தை உருவாக்கி கொண்ட தொடர் தான் இரத்தப் படலம்.
பொதுவாக காமிக்ஸில் ஒரு ஹீரோவின் அதிரடிகள் நிறைய கதைகளாக பல காமிக்ஸ் புத்தகங்களாய் வந்தாலும் ஒரு புத்தகத்திலே ஒரு கதை முடிவடைந்து விடும். அடுத்த புத்தகத்தில் அந்த ஹீரோ வேறொரு அதிரடியில் ஈடுபடுவார். ஆக ஒரு காமிக்ஸ் புத்தகம் வாங்கினால் ஒரு கதையைப் படித்தோம் என்கிற நிறைவு கிடைத்து விடும். ஆனால் ஒரே கதை ஒரு புத்தகத்தில் முடிவடையாமல் பாகம் பாகமாய் அடுத்தடுத்து வெளிவர தொடங்கியது இரத்தப் படலம் கதையில் தான்.
இரத்தப் படலத்தின் இரண்டாவது பாகம் தான் எனக்கு முதலில் கிடைத்தது. செவ்விந்தியர்கள் போகுமிடத்தில் என்கிற தலைப்பில் வெளிவந்து இருந்தது இரண்டாவது பாகம். அதிலே முன் கதை சுருக்கம் இருந்தது. மலையடிவாரத்தில் பெரிய சாலையொன்றில் ராணுவ வாகனங்கள் விரைந்தபடி இருக்கும் படம் தான் முதல் படம். வண்டிகளின் வேகத்தை குறிக்கும் கூடுதல் கோடுகள், சாலை எவ்வளவு நீளமாக இருக்கிறது என்கிற depth-யினை காட்டும் கருப்பு தடங்கள், நுட்பமான விவரங்கள் இப்படி படங்கள் உடனடியாக கவர்ந்து இழுத்தன. சடசடவென காட்சிகள் மாறினாலும் கதை குழப்பாமல் நகர்ந்தது. நிறைய இடங்களில் வசனங்களே இல்லாமல் கதை நகர்வது புதுமையாக அப்போது சிறுவயதில் தோன்றியது. வசனங்களும் நீளம் குறைவாக கதையோட்டத்திற்கு ஏற்ற அளவு மட்டுமே இருந்தன. லயன் காமிக்ஸ் ஆட்கள் மொழிபெயர்ப்பதில் கில்லாடிகள். முதல் வாசிப்பிலே இரத்தப் படலத்தின் காதலானேன் நான்.
சஸ்பென்ஸ் சுவாரஸ்யம்
தான் யார், தன்னுடைய பெயர் என்ன என்று தெரியாத கதாநாயகன். ஒரு துப்பாக்கி குண்டு அவனது மண்டையைப் பதம் பார்த்ததன் விளைவாய் தனது கடந்த காலத்தை முழுமையாய் மறந்து விட்டான். அவன் எங்கு சென்றாலும் அவனைக் கொல்வதற்கு வித்தியாசமான மர்ம கும்பல்கள் தோன்றுகின்றன. அமெரிக்க அதிபரைக் கொன்றதாய் ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது. தோளில் XIII என்று ஒரு ரோமன் நம்பர் பச்சை குத்தப்பட்டு இருக்கிறது. ஏன் எதற்கு என்று தெரியவில்லை. இதனால் அவனது பெயரும் XIII என்று மாறி போகிறது. திடீர் திடீரென அறிமுகமாகிறார்கள் மனிதர்கள். சிலர் நண்பர்கள். பலர் அவனைக் கொல்ல துணிந்தவர்கள். தான் யார் என்று கண்டுபிடித்து விட்டதாய் கதாநாயகன் ஒவ்வொரு முறை நம்பும் போதும் வித்தியாசமான ஆபத்துகளை சந்திக்க நேரிடுகிறது. அதோடு அவனது நம்பிக்கை சிதைந்து மீண்டும் தான் வேறு யாரோ என புரிந்து தன்னைப் பற்றிய உண்மை அறியாமல் குழம்பி போகிறான். இரண்டாம் பாகத்தின் தொடக்கத்தில் கதாநாயகன் தான் ராணுவ காப்டன் ஸ்டீவ் ராலாண்ட் என அறிந்து கொள்கிறான். அவனுடைய மாற்றந்தாய் மற்றும் சித்தப்பா அவனை கொலை குற்றத்தில் சிக்க வைக்கிறார்கள். விரைவிலே கதாநாயகனுக்குத் தான் உண்மையில் ஸ்டீவ் ராலாண்ட் இல்லை என தெரிய வருகிறது. பாகத்தின் இறுதியில் அவனுக்கு மனநோய் காப்பகத்தில் ஆயுள் தண்டனை கொடுக்கப்படுகிறது.
இரண்டாம் பாகம் முடித்த போது இனி XIII-யின் கதி என்னவாகும் என்பது பெரிய சஸ்பென்சாக இருந்தது. மூன்றாம் பாகம் எப்போது வரும் என தெரியாது. விரைவில் என போட்டு இருக்கிறார்கள். எவ்வளவு விரைவில் என தெரியாது. ஒரு காத்திருத்தலுக்குப் பிறகு மூன்றாம் பாகம் வாசிக்க கிடைத்தது. மூன்றாம் பாகம் படங்களின் தரத்திலும் கதை நகர்விலும் இரண்டாம் பாகத்தை விட சிறப்பாக இருந்தது. மனநோய் காப்பகத்தில் இருந்து கதாநாயகன் தப்பிப்பது தான் கதை. கதாநாயகன் உண்மையில் அமெரிக்க அரசு உளவாளி ராஸ் டான்னராக இருக்கலாம் என இந்தப் பாகத்தில் ஒரு சந்தேகம் விதைக்கப்படுகிறது. மிக கொடூரமான மனநோய் காப்பகத்தில் சூரிய ஒளிக்கு கூட உள்நுழைய அனுமதி கிடையாது. அங்கே இருந்து மிக குறுகலான கழிவு நீர் பாதையில் கதாநாயகன் தப்பிக்கும் காட்சி நுட்பமாய் சித்தரிக்கப்பட்டு இருக்கும். அது போல தனிமை சிறையில் வைக்கப்பட்டு பிறகு மீண்டும் கதாநாயகனை பொது சிறைக்கு கொண்டு வரும் காட்சியினை குறிப்பாக சொல்ல வேண்டும். தனிமை சிறையில் கைகள் கட்டப்பட்டு இருந்த நாட்கள் முழுவதும் தன் வாயில் ஒரு கோட் பட்டனை வைத்தபடி இருப்பான் கதாநாயகன். பொது சிறைக்கு மாற்றப்பட்ட பிறகு தான் அது வாசகர்களுக்கு தெரிய வரும். அந்தப் பட்டனின் உதவியோடு தான் கதாநாயகன் அங்கிருந்து தப்பிப்பான். தன் வாயில் இருந்து பட்டனை கதாநாயகன் எடுக்கும் அந்த வசனங்களற்ற காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
ஆக இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் என இரண்டு பாகங்கள் மட்டுமே நான் இரத்தப் படலத்தைச் சிறு வயதில் வாசித்து இருந்தேன். கல்லூரி படிக்கும் போது ஒரு நண்பனின் வீட்டில் இரண்டாம் பாகத்தை மீண்டும் வாசித்தது நினைவில் இருக்கிறது. XIII என்னவானான் என அவ்வபோது யோசனைகள் தோன்றும். கிட்டதட்ட பதினைந்து வருடங்களுக்குப் பிறகு தான் லயன் காமிக்ஸில் XIII-யின் மொத்த கதையும் (18 பாகங்கள்) ஒரு தொகுப்பாக வெளி வருவதை அறிந்து அதை வாங்கி வாசித்தேன். இப்போது நான் சிறுவனில்லை என்றாலும் இரத்தப் படலம் இன்னும் சுவாரஸ்யமானதாகவே தோன்றுகிறது. சில இடங்களில் ஆங்கில மசாலா சினிமா பாணி கதை போல இடறினாலும் பல இடங்களில் கதையின் போக்கு, அது பின்னப்பட்ட விதம் கவர்கிறது. ஐரீஸ் போராட்ட குழு, லத்தீன் அமெரிக்க கிளர்ச்சியாளர்கள், அமெரிக்க அதிபர், மூன்றாம் உலக நாடுகளில் தங்களது வளம் பெருக எதை வேண்டுமானாலும் செய்ய துணியும் அமெரிக்க தனியார் நிறுவனங்கள், தங்கத்தைத் தேடி நடக்கும் வேட்டை, அமெரிக்க உளவு பிரிவான சிஐஏவின் அராஜகம் இப்படி பல தளங்களில் பின்புலங்களில் கதை தொய்வின்றி நகர்கிறது.
பன்முக கதாபாத்திரங்கள்
இரத்தப் படலத்தின் சுவாரஸ்யத்திற்கு முக்கியமான காரணம் அதன் கதாபாத்திரங்கள். தான் யார் என்கிற குழப்பத்தில் திரியும் கதாநாயகனைப் போலவே ஒவ்வொரு கதாபாத்திரமும் பார்த்து பார்த்து நுட்பமாக சித்திரிக்கப்பட்டு இருக்கிறது. தொடர் முழுக்க வரும் கதாபாத்திரங்கள் மட்டுமல்ல, சில காட்சிகளில் வந்து போகும் சில கதாபாத்திரங்கள் கூட நுட்பமாக படைக்கப்பட்டு இருக்கிறது. உதாரணத்திற்கு மனநோய் காப்பகத்தில் கதாநாயகன் XIII- வுடன் அடைக்கப்பட்டு இருக்கும் பில்லி கதாபாத்திரத்தைப் பற்றி சொல்ல வேண்டும். 858 பக்கங்களில் பில்லி கதாபாத்திரம் தோன்றுவது அதிகபட்சம் பத்து பக்கங்கள் கூட இருக்காது. சாலையில் போய் கொண்டிருந்த ஆறு அப்பாவிகளை காரணம் இல்லாமல் சுட்டு கொன்றதாய் அவன் மீது குற்றச்சாட்டு. பார்ப்பதற்கு சாதுவாய் தோற்றம் தரும் பில்லி தான் நிரபராதி என்றும் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டவன் என்றும் சொல்கிறான். அவனுக்கு மனநலம் சரியாகவே இருப்பது போல தோன்றுகிறது. கதாநாயகன் தப்பிக்க முனையும் போது பில்லியும் கட்டாயப்படுத்தி அவனோடு இணைந்து கொள்கிறான். ஒரு ஜெயில் அதிகாரியிடம் இருவரும் சிக்குகிறார்கள். அப்போது பில்லியின் சுயரூபம் தெரிய வருகிறது. அதிகாரியைக் கொல்ல துணியும் பில்லி மனதளவில் கொடூரன் என அப்போது தான் கதாநாயகனுக்குப் புரிகிறது. இப்படி பற்பல கதாபாத்திரங்கள்.
இத்தொடரில் கதாநாயகிகள் எக்கசக்க பேர். அதில் முக்கிய கதாநாயகி கறுப்பின பெண் ஜோன்ஸ். கதையின் இறுதியில் XIII அவளிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று சொல்கிறார். தன்னைத் திருமணம் செய்ய தான் கேட்கிறார் என புரிகிறது ஜோன்ஸிற்கு. முடியாது என மறுக்கிறாள்.
“என்னைக் கொஞ்சம் கூர்ந்து பார்… நம்பர் XIII… சிகாகோ சேரி ஒன்றில் பிறந்து வளர்ந்த கறுப்பு இன பெண் நான்… உன் கூற்றுப்படியே 32 வயதில் கர்னல் பதவி என்பது யாருக்கும் வாய்க்கக் கூடியதல்ல. கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாமல் அதன் பயனை முழுமையாக அனுபவிக்கும் தீர்மானத்தில் இருக்கிறேன் நான். மாறாக உன்னுடைய சாக்ஸை துவைத்துப் போட்டு பாத்திரங்களைக் கழுவி அடுக்கி… மிச்ச நேரத்தில் அட்லாண்டிக்கை வெறிக்க பார்த்து கொண்டு வாழ்நாளை கழிக்க என்னாலாகாது. நான் உன்னை ஆழமாக நேசிப்பது நிஜம் நம்பர் XIII. ஆனால் அந்த நேசத்திற்கும் ஓர் எல்லை உண்டு.” இந்த வசனத்தைப் படிக்கும் போதே கதையின் தீவிரம் மற்றும் கதாபாத்திரங்களின் உயிர்ப்பு திறன் உங்களுக்குப் புரிந்திருக்கலாம். இப்போது பதினெட்டு பாகங்களில் கதை முடிவடைந்து விட்டாலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் கதை என தனி தனியே புத்தகங்கள் வெளி வர தொடங்கி இருக்கின்றன. மங்கூஸ், இரினா, லிட்டில் ஜோன்ஸ், கர்னல் அமோஸ் மற்றும் ஸ்டீவ் ராலாண்ட் ஆகியவர்களின் கதைகள் தனி தனி புத்தகங்களாக வெளிவந்து இருக்கின்றன. இன்னும் நிறைய கதாபாத்திரங்கள் இருப்பதால் இரத்தப் படலம் ரசிகர்களுக்கு இன்னும் தீனி இருக்கிறது என்பது நிச்சயம்.
கதாநாயகன் உண்மையில் யார்? XIII, ஸ்டீவ் ராலாண்ட், ராஸ் டான்னர், கெல்லி ப்ரையன், ஜாக் ஷெல்டன், ஆலன் ஸ்மித், ஸ்டண்ட் மேன், ஹூச் மிச்செல், கார்ல் மெரிடித், ஸீமஸ் ஓ’நீல், ஜேஸன் மக்லேன், ஜேஸன் மல்வே என பல அவதாரங்கள் எடுத்தாலும் எது உண்மையில் தான் என்று கதை முழுக்க குழப்பம் கதாநாயகனுக்கு. அது வாசகர்களையும் தொற்றி கொள்கிறது. கடைசியில் சஸ்பென்ஸ் உடையும் வரை கதையின் சுவாரஸ்யம் சிறிதும் கெடுவதில்லை. சற்று அதிகபடியாக நீட்டிக்கப்பட்ட கதை என்றாலும் பதினெட்டு பாகங்களையும் நிறுத்தாமல் வாசிக்க வைக்கும் சக்தி உடையது இந்தக் கதை.
ஃபிரெஞ்சு XIII
இரத்தப் படலம் கதையினை ஃபிரெஞ்சு மொழியில் XIII என்கிற பெயரில் எழுதியவர் ஷான் வான் ஹாமே. இந்தக் காமிக்ஸின் பெரும்பாலான படங்களை வரைந்தவர் ஓவியர் வில்லியம் வான்ஸ். உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட XIII காமிக்ஸ் பல விருதுகளைத் தட்டி சென்றது. பெல்ஜியம் நாட்டில் XIII-ற்காக ஒரு தபால் தலை வெளியிடப்பட்டது.
அட்லாண்டிக் கடற்கரையோரமாய் தொடங்கும் கதை கடைசியில் அதே கடற்கரையோரமாய் முடிகிறது. அங்கே தனிமையில் XIII நின்று கொண்டிருக்கும் காட்சியோடு தொடர் முடிவுறுகிறது. எத்தனையோ சுவாரஸ்யங்களுக்கும் சோகங்களுக்கும் மத்தியில் மனிதர்கள் இன்னும் விளங்கி கொள்ள முடியாத குணாதிசயம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் என்பதைத் தான் இரத்தப் படலம் காமிக்ஸ் உணர்த்துகிறது.
குறிப்பு:
- இரத்தப் படலம் முழு தொகுப்பு இப்போது கிடைப்பதில்லை என்று கேள்விப்பட்டேன். லயன் காமிக்ஸ் வெளியிடும் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் முகவரி: 8/D-5, சேர்மன் P.K.S.A.A.ரோடு, அம்மன் கோவில்பட்டி, சிவகாசி – 626189. ஆசிரியர்: விஜயன். தொலைபேசி எண்: 04562272649.
- காமிக்ஸ் ஆசிரியர் விஜயனின் வலைப்பதிவு
- இரத்தப் படலம் ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த வீடியோ விருந்தாக இருக்கும். ஃபிரெஞ்சு மொழியில் இருந்தாலும் ரசிக்கதக்கதாய் இருக்கிறது.
Leave a Reply