என் ஓவியங்களிலே சிறந்தது
என்னுடைய அறுப்பட்ட காது தான்.
பேரிரைச்சலையும்
நரம்புகள் எங்கும் முறுக்கும் வலியையும்
சிறிது நேரமாவது தொலைத்திட வைக்கும்
அருள் நிறைந்தது அது.
பரத்தையர் இல்ல பணிப்பெண்
முரட்டுக் காட்டில் மலர்ந்த காந்தள் மலர்.
காந்தள் மலருக்குப் பரிசளித்தேன்
என் ஓவியத்தை.
Author: சாய்ராம் சிவகுமார்
-
-
மனநல காப்பகத்தில் இருந்து – 5
எனக்கும் வானத்திற்கும் இடையே
பெருமழையொன்று சுவர் கட்டிய நாளன்று
பெருந்துக்கம் சூழ்ந்தது.
பிரிவாற்றாமையால்
பெரு உண்மை உதித்தது.
குழந்தைப் போன்றே ஏங்கியிருக்கிறேன்.
வானமோ கடிகார முள்ளின் முனைப்போடு
வேறு எங்கோ பார்த்து இருந்திருக்கிறது.
இருதயத்தைக் குலைத்து போடும் ஒரு தலைக்காதலின் வலியோடு
காதை அறுத்து கொண்டேன்.
-
மனநல காப்பகத்தில் இருந்து – 4
பாதியில் நிற்கும் என் ஓவியம்
விழித்தவுடன் கலைந்திடும் கனவின் எச்சம் போல
வேறு யாரோ வரைந்த ஓவியம் போல
இரகசிய தூது போல
மறை ஆற்றலின் விளையாட்டு போல
கைவல்யத்தின் தொடக்கம் போல
ஏமாற்றுகிறது என்னை.
-
மனநல காப்பகத்தில் இருந்து – 3
பேரிரைச்சலுடன் ஓடி கொண்டிருக்கும்
மிக்ஸி போல
மூளைக்குள் எது எதோ
நிசப்தத்திற்கு இடமில்லாமல்
ஓடி கொண்டே இருக்கின்றன.
வண்ண குப்பிகள் குவிந்து கிடக்கின்றன.
தரையெங்கும் தூரிகைகள்.
மனநல காப்பக அறையில்
ஒரே ஒரு ஜன்னல்.
ஜன்னலுக்கு வெளியே வானமும் நிலபரப்பும்
அதில் மரங்களும்.
ஓர் ஓவியத்தை உருவாக்க வேண்டும்.
அது உருவாகும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும்
இந்தப் பேரிரைச்சல்.
-
மனநல காப்பகத்தில் இருந்து – 2
புயலோ பெருமழையோ வருமென அறிவிக்கும்
கருமேகங்கள் சூழ்ந்த வானம்,
உலகம் இருட்ட போகிறது என சொல்லும்
சிகப்பு வானம்,
உருண்டு உருண்டு கோர உருவம் காட்டிடும்
வெண்மேகங்கள் திரண்ட வானம்
இவையனைத்தும் பயமுறுத்தியதில்லை.
ஆனால்
முட்டுச்சந்தின் கடைசி சுவரில் அடிக்கப்பட்ட வண்ணம் போல
சவப்பெட்டியின் மேல்மூடி போல
மேகங்களே இல்லாத நீலநிற வானம்
எப்போதும் பயமுறுத்துகிறது.
-
மனநல காப்பகத்தில் இருந்து – 1
வானம் என்பது கற்பிதம்!என் ஜன்னலில் இருந்து தெரியும் மற்றொரு சாளரம்!சாளரத்தில் காணும் அரைகுறை அண்டம்!அண்ட வாயுகளின் மண்டலம்!நீளம் குறைந்த நீலம்!தொலைவுகள் தொலைந்திட்ட தூரம்!ஓளிகளின் நாட்டியம்!இறந்த காலத்தின் ஓவியம்!வண்ணங்களின் முடிவுறா சித்திரம்!இருண்மையின் கோலம்!நேரத்தினைச் சுட்டும் கடிகாரம்!காலங்களைத் தீட்டும்உருவமில்லாத உருவம்!நீளமும் அகலமும் ஆழமும் உறைந்திட்டமறை ஆற்றலின் வீரியம்!மாயைகளிலிருந்து விடுவிக்கும் கைவல்யம்!
-
மூட்டை மூட்டையாய் வார்த்தைகள்
மர நிழல் போர்த்திய சாலையில் தினமும் மூட்டை மூட்டையாய் வார்த்தைகளை நிரப்பி தனியாளாய் இழுத்து வருகிறேன். பூட்டப்பட்ட கதவு திறந்ததே இல்லை. உன் வீட்டருகே மலை போல வளர்ந்து விட்டன நான் தினமும் விட்டுச் செல்லும் மூட்டைகள்.
-
மரணத்திற்கு ஆயுத்தம்
பூச்சிகளின் இசைக்கேற்ப காற்றினைக் கிழித்தபடி தாளமிடும் இலைகளின் பாடலில் எப்போதாவது சிறு சிறு துணுக்களாய் மரணத்தின் உறுமல் கேட்பதுண்டு. சில சமயம் தடங்கள் பதியா வனத்தின் பரப்பில் மரணத்தின் கால்தடம் கண்டதுண்டு. பிறகுத் தேய் பிறை வருடக்கணக்கில் நீண்ட ஒரு காலத்தில் காற்றிலே நிரம்பி புயலாய் ஊளையிட்டது அது. காடே ஸ்தம்பித்து பிறகுப் பேரரவமிட்டு அழுதது. நிலம் எல்லாம் அதிர்ந்தது. முதுகிலே பயத்தினைச் சுமந்தபடி ஒளிந்து இருந்தேன் நான் பெருமழையாய் சுழன்றடித்து வரும் அதன் ஈரம் என்னை நனைக்கும் வரை.
-
தத்தளிப்பு
மழைக்கு ஒதுங்கியவன் மனநிலைப் போல் கல்லில் இடித்து தண்ணீரில் தத்தளிக்கிறது காகித கப்பல்!
-
நீரை உலர்த்த காத்திருக்கும் வெயில்
பாலைவனத்தின் நடுவே முளைத்து எழுந்து தலைக் குனிந்து நிற்கிறது குடிநீர் குழாய் ஒன்று. குழாயிலிருந்து துளிர்த்து நிற்கும் நீர் சொட்டு ஒன்று பல்கி சூரிய ஒளியில் பிரகாசித்து கீழே விழ காத்திருக்கிறது. மணல்வெளியில் நீர் விழும் தருணத்தில் அதனை உலர்த்த காத்திருக்கிறது வெயில்.
