உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – இனப்படுகொலை

அது ஓர் அகதிகள் முகாம். சில கிலோமீட்டர் தொலைவில் அவர்களுடைய சொந்த ஊர் இருந்தது. எனினும் அவர்களால் அங்குப் போக முடியாது. சொந்த ஊரில் இருந்து வரும் தகவல்கள் திகிலூட்டுவதாக இருக்கின்றன. ஊரில் இருந்த 17 வயதிற்கு மேற்பட்ட 70 வயதிற்குட்பட்ட ஆண்களை எல்லாம் மொத்தமாய் ஓரிடத்தில் கைது செய்து வைத்திருக்கிறார்கள். அங்கிருந்து தப்பித்தவர்கள் அந்த இடத்தில் எப்போதும் சித்ரவதை செய்யப்படுபவர்களின் ஓலம் நிரம்பியே இருக்கிறது என்று சொன்னார்கள். அருகில் இருந்த பாதையில் பயணித்தவர்கள் வழியெங்கும் பிணங்களாய் இருக்கிறது என்றார்கள். பலர் உயிரோடு புதைக்கப்பட்டார்கள். சிலரது கை கால்கள் வெட்டப்பட்டன. கொடூரமான சித்ரவதைகள் நிகழ்த்தப்பட்டன. மரணம் மட்டுமே அவர்களை அந்த நரகத்தில் இருந்து விடுவிக்கும் வழியாக இருந்தது.

அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் இருக்கிறார்கள். இன்னும் சில நேரத்தில் இடமே மக்கள் நெருக்கடியால் வெடித்து விடும் என்பது போல இருக்கிறது. சூரியன் பகல் பொழுதில் கொளுத்துகிறது. உணவோ குடிப்பதற்கு நீரோ இல்லை. கழிவு நீர் ஓடையில் தான் நீர் ஓடி கொண்டிருக்கிறது. தாகம் தாங்க முடியாதவர்கள் அதிலே குடித்து கொள்ள வேண்டியது தான். தங்களுடைய வீட்டு ஆண்களுக்கு, தங்கள் தந்தைக்கு, சகோதரனுக்கு, கணவனுக்கு, மகனுக்கு என்ன ஆகியிருக்கும் என்கிற பதட்டம் ஒவ்வொருத்தர் முகத்திலும் நிரம்பி கிடக்கிறது.

genocide03

யாரோ ஒரு பெண்

புகைப்பட கலைஞர்  ஒருவர் தான் பணிப்புரியும் செய்தி நிறுவனத்திற்காக செய்தி சேகரிக்க  அங்கு சென்றார். அகதிகளைப் பார்த்தவுடனே அவருக்கு ஒரு விஷயம் பளீரென உறைத்தது. பல்லாயிரக்கணக்கானோர் அங்கிருந்தாலும் அவரால் 17 வயதிற்கு மேற்பட்ட ஓர் ஆணைக் கூட அங்குப் பார்க்க முடியவில்லை.

ராணுவ வீரர்கள் தங்களுடைய ஆண்களையெல்லாம் கைது செய்து விட்டார்கள் என்றார்கள். அகதிகள் முகாமிற்குச் செல்லும் பேருந்துகள் எல்லாவற்றையும் பரிசோதித்து எல்லா ஆண்களையும் ராணுவம் இழுத்து சென்று விட்டது. தங்கள் கண் முன்னாலே தங்களுடைய ஆண்கள் மரணத்தின் முகாமிற்கு இழுத்து செல்லப்படுவதைப் பார்த்திருந்த அகதிகளின் நிலைப் பரிதாபத்திற்குரியதாக இருந்தது.

அதிகாலை பொழுதில் புகைப்பட கலைஞரிடம் மூன்று சிறுமிகள் அருகில் உள்ள காட்டில் ஒரு பெண் தூக்கில் தொங்குகிறாள் என்றார்கள். புகைப்படக்காரர் அவர்களுடன் நடந்தார். அருகிலிருந்த காட்டிற்குள் பிரவேசித்த சிறிது நேரத்தில் தூரத்தில் மரத்தில் வெள்ளை நிற கவுன் உடுத்தி சிகப்பு நிற மேலாடை அணிந்த பெண் ஒருத்தி தூக்கில் தொங்கி கொண்டிருப்பது தெளிவாக தெரிந்தது. அவருக்கு என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது. தூக்கில் தொங்கும் காட்சியைப் படமாக எடுத்தாலும் பத்திரிக்கைகளில் போடுவார்களா என்பது சந்தேகமாக இருந்தது. அவர் வந்து கொண்டிருந்த திசையில் இருந்து அந்தப் பெண்ணின் முகம் நன்றாக தெரிந்தது. எனினும் சடலத்திற்குப் பின்பக்கமாய் நின்று இரண்டு புகைப்படங்கள் எடுத்து கொண்டார்.

genocide01

பிறகு அந்தப் புகைப்பட கலைஞர் அகதிகள் முகாமிற்குத் திரும்பி அங்கிருந்த அமைதிப்படை வீரர் ஒருவரிடம் தூக்கில் தொங்கும் பெண்ணைப் பற்றி சொன்னார். “உயிரோடு இருப்பவர்களை முதலில் கவனிப்போம்,” என்று பதில் கிடைத்தது. பிறகு அந்தப் பெண்ணின் பிரேதம் அகதிகள் முகாம் அருகிலே புதைக்கப்பட்டது. அது யார் என அப்போது யாருக்கும் தெரியவில்லை. யாரென்று தெரியவில்லை என்று சமாதியில் எழுதி வைத்தார்கள்.

தூக்கில் தொங்கும் பெண்ணின் புகைப்படத்தினைப் பிரசுரிப்பது குறித்து முதலில் பத்திரிக்கை அலுவலகங்களில் விவாதம் நடந்தது. சடலத்தின் படத்தைப் பத்திரிக்கையில் பிரசுரிக்கலாமா? இந்தப் பெண் உண்மையில் அங்கிருக்கும் சமூக அவலங்களால் தான் தற்கொலைச் செய்து கொண்டாளா அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக தன் உயிரை மாய்த்து கொண்டாளா என்று பல விவாதங்கள். ஆனால் ஒன்றன்பின் ஒன்றாக பல பத்திரிக்கைகளில் இந்தப் படம் இடம் பெற ஆரம்பித்தது. சில நாட்களில் உலகமெங்கும் ‘தூக்கில் தொங்கும் பெண்’ பரபரப்பினை ஏற்படுத்த தொடங்கினாள்.

காட்டின் பச்சை நிறம் எங்கும் வியாபித்திருக்க, அதற்கு நேர் எதிர் நிறமான சிகப்பு நிற மேலாடையும் வெள்ளை நிற கவுனும் சட்டென மாறுபட்டு தெரிகிறது. அவள் எதற்காக தற்கொலைச் செய்து கொண்டாள்? ராணுவத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாளா? அவளுடைய குடும்பத்தில் இருந்த ஆண்களைக் கொன்று விட்டார்கள் என்கிற செய்தி தாங்க முடியாமல் மனமொடிந்து போனாளா? அகதிகள் முகாமில் இருந்த நரகத்தனமான சூழலைக் கண்டு பயந்து விட்டாளா? தனக்கு நெருங்கியவர்கள் காணாமல் போய், அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் மக்கள் நெருக்கடியில் தனித்து நின்றாளா? கொலைச் செய்யப்பட்டாளா? எதற்காக தற்கொலைச் செய்து கொண்டாள்? யாருக்கும் பதில் தெரியவில்லை. அவளுடைய பெயர் கூட தெரியாது. எனினும் எதோ ஒரு சோகமும் அதனூடாக குற்றவுணர்வும் அதைத் தாண்டி கையாலாகாதனத்தால் உண்டான இயலாமையும் நம் முன்னால் நிற்கும் அசுரனைக் கண்டு பயமும் அந்தப் புகைப்படத்தின் மீது கவிந்து கிடக்கின்றன.

இதைத் தடுக்க முடியாதா?

அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி கிளிண்டன் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. விவாதத்தின் ஊடாக அன்றைய துணை ஜனாதிபதி அல் கோர் குறுக்கிட்டார்.

“என் மகளுக்கு 21 வயதாகிறது. நேற்று அவள் இந்தப் புகைப்படத்தினை என்னிடம் காட்டினாள். இந்தப் பெண் ஏன் தற்கொலைச் செய்து கொண்டாள் என்று கேட்டாள். இதைத் தடுக்க நாம் ஏன் ஒன்றுமே செய்யவில்லை என்று கேட்டாள். எனக்குப் பதில் சொல்ல தெரியவில்லை. இன்று அதே கேள்வியைத் தான் நானும் இப்போது கேட்கிறேன். இந்தப் பெண்ணின் தற்கொலைக்குப் பின்னால் ஆயிரக்கணக்கானோரின் கதை இருக்கிறது. அவர்களது அவலத்தினைப் போக்க நாம் ஏன் ஒன்றுமே செய்யவில்லை?”

தூக்கில் தொடங்கும் பெண்ணின் புகைப்படம் ஐரோப்பாவிலும் அமெரிக்காலும் உள்ள மத்திய வர்க்கத்தினரிடையே தாக்கத்தினை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் மேலும் சில செனட் உறுப்பினர்கள் இந்தப் புகைப்படத்தினைக் காட்டி, “இந்த இனப்படுகொலையைத் தடுக்க சர்வதேச சமூகம் முயற்சிகள் எடுக்க வேண்டும்,” என பிரச்சாரம் செய்ய தொடங்கினர்.

சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் இனப்படுகொலை மேற்கொண்டு நடைபெறாமல் தடுக்கப்பட்டதுடன் அமைதிக்கான முயற்சிகள் மெதுவாக தொடங்கியிருக்கின்றன. இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குகளும் நடைப்பெற்று வருகின்றன.

இனப்படுகொலையின் அவலத்தைத் தன் மரணம் மூலம் சர்வதேச சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வந்த அந்தப் பெண் யாரென்பது ஒரு வருட காலம் வெளியே தெரியாமல் இருந்தது. பிறகு அந்தப் பெண்ணின் பெயர் ஃபெரிடா ஒஸ்மானியோவிக் என தெரிய வந்தது.genocide04

ஃபெரிடாவின் கதை

ஐரோப்பாவில் பால்கன் தீபகற்பத்தின் மேற்குப் பகுதியில் இருந்த நாடு யூகோசுலாவியா. அது பல துண்டுகளாக சிதறிய காலகட்டம். குரோஷியா, ஸ்லோவேனியா, மெக்டோனியா என்று பல நாடுகள் உருவாயின. ‘போஸ்னியா மற்றும் ஹெர்ஜிகொவினா’ என்கிற பெயரில் ஒரு நாடும் அப்போது உருவாக்கப்பட்டது. இந்த நாட்டில் தான் மேற்சொன்ன இனப்படுகொலை நடந்து கொண்டிருந்தது. பிரிவினையில் யாருக்கு என்னென்ன நில பகுதிகள் என்பதில் தொடங்கிய போர் விரைவில் போஸ்னிய முஸ்லீம்களுக்கு எதிரான போஸ்னிய செர்பிய ராணுவத்தினரின் இனப்படுகொலையாக வடிவம் கொள்ள தொடங்கியது. அன்றைய போஸ்னியாவில் செர்பிய எல்லைக்கு மிக நெருக்கமாக அமைந்திருந்த பகுதி செர்பிரேடனிட்சா. இதனாலே இனப்படுகொலை இங்கு வீரியம் கொண்டது.

செர்பிரேனிட்சாவிற்கு அருகே இருந்த அழகிய மலைக்கிராமத்தில் தான் ஃபெரிடா வாழ்ந்து கொண்டிருந்தார். அமைதியான வாழ்க்கை. இவருடைய கணவரது பெயர் சல்மான். வீடுகளுக்கான பர்னிச்சர் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். டாமிர் என்றொரு மகனும் பாத்திமா என்றொரு மகளும் இருந்தார்கள். கிராமத்து சூழலில் மிக மெதுவாக நகரும் பொழுதுகள். அதனுடன் அவ்வப்போது துளிர்க்கும் மகிழ்ச்சி தருணங்கள். விடுமுறை நாட்களில் அவர்களுடைய கார் தொலைதூரம் பயணிக்கும். டாமிரும் பாத்திமாவும் ஜன்னலுக்கு வெளியே தெரியும் மக்களைப் பார்த்து கையாட்டியபடி பயணத்தில் மூழ்கியிருப்பார்கள். ஒரு நாள் கிராமத்தில் கேட்ட குண்டுச் சத்தம் அவர்களுடைய வாழ்க்கையை வேறொரு திசைக்குத் திருப்பி விட்டது.

“வீடுகள் தீப்பற்றி எரிவதைப் பார்த்தேன். ஒவ்வொருவர் முகத்திலும் உலகமே அழிய போவது போன்ற பயம் மிகுந்திருந்தது,” என்று தன் சிறு வயது நினைவுகளைச் சொல்கிறார் டாமிர்.

போஸ்னிய செரிபிய ராணுவம் பலம் பெற தொடங்கியது. போஸ்னிய முஸ்லீம்களை அந்த ராணுவம் அறவே வெறுத்தது. ஃபெரிடாவின் உறவினர் ஒருவர் தோட்டத்தில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார். பயந்து போன மற்ற முஸ்லீம்கள் தங்களுடைய உடைமைகளைச் சுமந்து கொண்டு வட மேற்கு நோக்கி நகர தொடங்கினார்கள். ஃபெரிடாவின் குடும்பமும் அகதிகளாய் மாறியது. செர்பிரேனிட்சா நகரத்திலே அகதிகள் எல்லாம் கூடுகிறார்கள் என்கிற தகவல் கேட்டு ஃபெரிடாவின் குடும்பமும் அங்குச் சென்றது.

genocide05
1995இல் செர்பிரேனிட்சா அகதிகள் முகாம்

வெறும் ஒன்பதாயிரம் பேர் வாழ்ந்து கொண்டிருந்த செர்பிரேனிட்சா நகரத்தில் அப்போது 60000 முஸ்லீம்கள் அகதிகளாய் கூடியிருந்தார்கள். கடும் உணவு நெருக்கடி. மருத்துவமனையிலோ மருந்துகள் பற்றாக்குறை. பட்டினியும் நோய்களும் அகதிகளை பாடாய் படுத்த தொடங்கின. இந்தச் சூழலில் ராணுவம் அங்கே தாக்குதலைத் தொடங்கியது. இந்தத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. நிலவரத்தினைத் தெரிந்து கொள்வதற்காக ஐநா அமைதிப்படையின் ஜெனரல் பிலிப் நேரடியாக செர்பிரேனிட்சா நகரத்திற்கு வந்தார். ஊருக்குள் அவரது வாகனம் வந்த போதே அங்கிருந்த அகதிகள் முக்கியமாக பெண்கள் அவரது வாகனம் முன்னால் வந்து படுத்து கொண்டார்கள். பெரும்திரளாக அகதிகள் நின்று தங்களுடைய ‘வாழ்வா சாவா’ பிரச்சனையைப் பற்றி சொன்னார்கள். தன் வாழ்க்கை முழுக்க தன்னைப் பாடாய் படுத்த போகும் ஒரு காரியத்தை ஜெனரல் பலிப் அன்று செய்தார். இங்கிருக்கும் அனைவரின் பாதுகாப்பிற்கும் தான் உறுதி கொடுப்பதாக சொன்னார். அகதிகள் முகமெல்லாம் மகிழ்ச்சி. விரைவிலே தங்களுடைய பிரச்சனைகள் தீருமென்று நம்ப தொடங்கினார்கள். ஜெனரல் பிலிப்பின் வாக்குறுதிக்குப் பிறகு ஐநாவின் அமைதிப்படை செர்பிரேனிட்சாவைத் தங்கள் வசமாக்கி கொண்டார்கள். சிறிது காலம் ராணுவத்தினரைப் பற்றிய பயம் அகதிகளிடையே குறைந்தது.

ஃபெரிடாவின் கணவர் சாந்தமானவர். பிரச்சனைகள் அதிகரிக்கும் போது கூட அவர் அமைதியானவராய் இருந்தார். மரக்கட்டைகள் எடுத்து வந்து தன்னிடம் இருந்த சிறு கத்தியால் அதிலே பொம்மைகள் செய்வார். பிறகு அதனை அங்கே விற்க முயல்வார். இப்படியாக அகதிகளாய் அவர்களது வாழ்க்கை கடும் பொருளாதார தட்டுப்பாடுகளுடன் நகர தொடங்கியது.

1995ம் ஆண்டு ஜுலை மாதம் மோதல் மீண்டும் கடுமையானது. பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்து கொண்டிருந்தன. அங்கிருந்த அமைதிப்படையினரின் எண்ணிக்கை மிக மிக குறைவு. விரைவிலே செர்பிரேனிட்சா நகரம் போஸ்னிய செர்பிய ராணுவத்தின் வசம் போய் விடுமென கவலை தோன்றியது. ஆண்கள் மொத்தமாய் கொன்று ஒழிக்கப்படுவார்கள் என்கிற யதார்த்தம் உறைக்க தொடங்கியது. அதனால் நகரத்திலே இருந்த 15000ற்கு மேற்பட்ட ஆண்கள் இரவு நேர இருட்டில் நகரத்தை விட்டு வெளியேறி போஸ்னிய மலைகளுக்குப் பயணப்பட்டார்கள். ஆனால் காடுகளின் உக்கிரமும் ராணுவத்தினர் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடிகளும் பலரது உயிரினைப் பதம் பார்க்க தொடங்கியது. நகரத்தினை நெருங்கி விட்டது ராணுவம்.

ஃபெரிடாவின் கணவர் சல்மானும் ஊரை விட்டு வெளியேற திட்டமிட்டார். ஆனால் அவரது மனைவி ஃபெரிடாவோ அவரிடம் மன்றாடி அங்கேயே தங்க வைத்து விட்டார். அமைதிப்படையினர் இருக்கும் வரை தங்களது பாதுகாப்பு உறுதி என ஃபெரிடா நம்பினார். தங்களுடைய உடைமைகளை எடுத்து கொண்டு அவர்கள் அமைதிப்படையினரின் அலுவலகத்திற்குக் கிளம்பினார்கள்.

1995ம் ஆண்டு ஜுலை மாதம் 11ம் தேதி நகரம் கிட்டதட்ட ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் வர தொடங்கி விட்டது. அதிகாலையில் நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் குடும்பம் குடும்பமாய் வடக்கில் இருந்த அமைதிப்படையினரின் அலுவலகத்தினை நோக்கி கிளம்பினார்கள். கைத்தடியை ஊன்றியபடி முதியவர்களும் குழந்தைகளைச் சுமந்தபடி பெண்களும் தங்களால் எவ்வளவு தூக்க முடியுமா அவ்வளவு உடைமைகளைத் தூக்கி கொண்டு ஆண்களும் தங்களுடைய பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக கூட்டமாய் அங்குப் போனார்கள்.

அமைதிப்படையினர் கூடாரமடித்திருந்த பகுதியில் நுழைவாயிற் கதவு பூட்டப்பட்டிருந்தது. முறுக்கப்பட்ட கம்பிகளால் ஆன வேலிகளில் சிறு சிறு ஓட்டைகள் செய்து தங்களுடைய உடலில் அந்த இரும்பு முட்கள் குத்த குத்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் அமைதிப்படையினரின் பகுதிக்குள் போய் விட்டார்கள். மீதமிருந்த ஆயிரக்கணக்கானோர் வெளியே உயிரைக் கையில் பிடித்தபடி காத்திருந்தார்கள். ஃபெரிடாவின் குடும்பம் வேலிக்கு வெளியே ஒரே போர்வையில் அன்றைய இரவைக் கழித்தது. ராணுவத்தினர் நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தியைக் கேட்டதும் சல்மான் இருமுறை அங்கிருந்து காட்டிற்குத் தப்ப முயன்றார். ஆனால் தொடர்ந்து வெடித்து கொண்டிருந்த வெடிகுண்டுகளைக் கண்டு மிரண்டு மீண்டும் குடும்பத்தினர் இருக்கும் பகுதிக்கே வந்து விட்டார். ஐநா அமைதிப்படை இருக்கும் போது நம்மை ஒன்றும் செய்து விட மாட்டார்கள் என்று ஃபெரிடா கணவருக்கு ஆறுதல் சொல்லி கொண்டிருந்தார்.

ஒரு பேரலை போல ராணுவம் உள்ளே வந்தது. எண்ணிக்கையில் குறைவாய் இருந்த அமைதிப்படையினர் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட முயன்றனர். பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்கிற தகவல் சொல்லப்பட்டு கொண்டிருந்த போதே கூட்டத்தில் இருந்த முஸ்லீம்கள் சிலர் ராணுவத்தினரால் தனியே அழைத்து செல்லப்பட்டு கொல்லப்படுகிறார்கள் என்கிற தகவலும் பரவ தொடங்கியது. அமைதிப்படையின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களில் சிலர் அன்று போஸ்னிய செர்பிய ராணுவத்தினரோடு மதுவருந்தினார்கள் என்று பிறகுக் கண்டறியப்பட்டது. அதே சமயம் பாலியல் பலாத்கார சம்பவங்களும் கொலைகளும் நிகழ தொடங்கின. முஸ்லீம் அகதிகளில் 17 வயதிற்கு மேற்பட்ட 70 வயதிற்குட்பட்ட அனைத்து ஆண்களும் போர் குற்றங்களைப் பற்றிய விசாரணைக்காக ராணுவத்தினரால் தனியிடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்கள். அமைதிப்படையினர் வெறுமனே வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள்.

அடுத்த நாள் காலை அங்கிருக்கும் பெண்களையும் குழந்தைகளையும் பக்கத்திலிருக்கும் டூசலா நகரத்தில் உள்ள அகதிகள் முகாமிற்கு அழைத்து செல்ல பேருந்துகள் வரிசையாக வந்தன. ஃபெரிடாவும் அவரது கணவரும் இரண்டு குழந்தைகளும் ஒரு பேருந்தினை நோக்கி நடக்க தொடங்கினார்கள். சுற்றிலும் ஒரே கூச்சல். குழந்தை டாமிர் தன் தந்தையின் கையை இறுக்க பற்றி கொண்டிருந்தான். எது நடந்தாலும் தன்னுடைய தந்தை தன்னைக் காப்பாற்றுவார் என்று நினைத்திருந்தான். சாலையின் இருபுறமும் ராணுவ வீரர்கள் நின்றிருந்தார்கள். பேருந்தில் அவர் ஏற முனைந்த சமயம் இரண்டு வீரர்கள் வந்து சல்மானைப் பிடித்தார்கள். துப்பாக்கியை நீட்டி சல்மானை அங்கிருந்த மற்ற ஆண்களோடு நிற்க சொன்னார்கள். சிறுவனும் தன் தந்தையோடு நின்றான். ஃபெரிடா பேருந்தில் இருந்து சத்தமாய் அழுதபடி அங்கு ஓடி வந்தார். தன் கணவனை விட்டு விடும்படி ராணுவ வீரர்களிடம் கெஞ்சினார். சிறுவனைத் தன் பக்கம் இழுத்து கொண்டார். ஆண்கள் எல்லாரும் தனியே கூட்டமாய் நின்றிருக்க பெண்களையும் குழந்தைகளையும் ஏற்றியபடி பேருந்துகள் கிளம்பின. எல்லாருமே சத்தமாய் அழுது கொண்டிருந்தார்கள்.

genocide06
1995இல் செர்பிரேனிட்சா

டூசலா நகரத்தில் இருந்த அகதிகள் முகாம் வாழும் நரகமாய் இருந்தது. தன்னுடைய கணவர் திரும்ப வந்து விடுவார் என்று ஃபெரிடா காத்திருந்தார். கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஆண்கள் கொடூரமாய் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகிறார்கள் என்கிற தகவல்களும் முஸ்லீம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என்கிற செய்தியும் நிமிடத்திற்கு நிமிடம் வந்தபடி இருந்தது. அகதிகள் முகாமிலோ எந்த வசதிகளும் இல்லை, வாழவே முடியாதபடி நெருக்கடி. ஐந்து நாட்களில் ஃபெரிடா பித்து பிடித்தாற் போல் ஆகியிருந்தார்.

ஆறாவது நாள் காலை குழந்தைகள் டாமிரும் பாத்திமாவும் விழித்த போது அவர்களுடைய தாயைக் காணவில்லை. அகதிகள் முகாம் முழுக்க சுற்றி திரிந்து தங்களுடைய தாயின் பெயரைச் சத்தமாய் சொல்லி அழைத்து அழைத்து பார்த்து சோர்ந்தார்கள் குழந்தைகள்.

அதே சமயம் அருகிலே காட்டில் தூக்கில் தொங்கி கொண்டிருந்த ஃபெரிடாவின் சடலத்தைப் படம் எடுத்து கொண்டிருந்தார் ஏபி செய்தி நிறுவனத்திற்காக பணிப்புரியும் புகைப்பட கலைஞர் டார்கோ பேண்டிக். தனியே சுற்றி கொண்டிருந்த குழந்தைகளை அவர்களது உறவினர்கள் தங்களுடைய பொறுப்பில் எடுத்து கொண்டார்கள்.

ஃபெரிடாவிற்குப் பிறகு

ஃபெரிடாவின் மரணத்திற்குப் பிறகும் இனப்படுகொலை பல மாதங்கள் தொடர்ந்தது. ஃபெரிடாவின் மகனும் மகளும் ஆறு மாதங்கள் கழித்து தான் தங்களுடைய தாய் தூக்கில் தொங்கும் புகைப்படத்தினைப் பார்த்தார்கள். சமாதியில் ‘யாரென தெரியவில்லை’ என்கிற வார்த்தைகளை அழித்து பேனாவால் ஃபெரிடாவின் பெயரை எழுதினார்கள். பல மாதங்கள் கழித்து மீண்டும் அவர்கள் அங்கு வந்த போது எக்கச்சக்க சமாதிகள் அப்பகுதியில் முளைத்திருந்தன. அதில் எது தங்கள் தாயின் சமாதி என அவர்களால் கண்டுபிடிக்க முடியிவில்லை. அவர்களுடைய தந்தை என்னவானார் என்பது இப்போது வரை தெரியவில்லை. இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட 8000ற்கும் மேற்பட்ட முஸ்லீம்களில் தங்களுடைய தந்தையும் ஒருவர் என அவருடைய மகனும் மகளும் சொல்கிறார்கள்.

கிட்டதட்ட 19 வருடங்களாகியும் இனப்படுகொலை ஏற்படுத்தி சென்ற காயங்கள் ஆறவில்லை. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இனப்படுகொலை நிகழ்ந்ததை ஐரோப்பிய நாடுகள் இங்கு தான் அதிகாரப்பூர்வமாய் ஒப்பு கொண்டிருக்கிறார்கள். உயிருடன் தப்பித்தவர்கள் ஒவ்வொருவரும் மிக கொடூரமான கதைகளைச் சொல்கிறார்கள்.

உறவினர்களின் உதவியோடு பாத்திமாவும் டாமிரும் கல்லூரி வரை படித்து தங்களுக்கான வாழ்க்கை வாழ தொடங்கிவிட்டார்கள். தன்னுடைய தாயின் ஒரே பிம்பமாக அந்தப் புகைப்படம் மட்டுமே தன் மனதில் ஓடுகிறது என அழுகிறார் பாத்திமா.

ஃபெரிடா ஏன் தற்கொலைச் செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. அந்தச் சமயத்திலே சூழலின் கொடூரத்தைத் தாங்க முடியாமல் நிறைய பேர் பித்து பிடித்தாற் போல் இருந்தார்கள். பலர் தற்கொலைச் செய்து கொண்டார்கள். காட்டிற்குத் தப்பித்து ஓட இருந்த கணவரைத் தடுத்து நிறுத்திய தன் செயலை நொந்து இந்த முடிவினை எடுத்தாரா அல்லது முகாமில் ராணுவத்தினர் அவருக்கு எதேனும் தொல்லைகள் கொடுத்தார்களா என்பதும் தெரியவில்லை. உலகமே தனக்கு எதிராக திரும்பி விட்டது என உணர்ந்திருப்பார். அவருடைய மரண புகைப்படத்தினை இன்று அதே உலகம் ‘இனப்படுகொலையைச் சித்திரிக்கும் கொடூரம்’ என சித்தரிக்கிறது.

புகைப்பட கலைஞர் டார்கோ பேண்டிக்
புகைப்பட கலைஞர் டார்கோ பேண்டிக்

புகைப்பட கலைஞர் டார்கோ பேண்டிக் போர் நிகழ்வுகளைப் புகைப்படங்களாய் எடுப்பதிலே புகழ் பெற்றவர். அவருடைய கல்லூரி படிப்பு போர் காரணமாகவே தடைப்பட்டது. இதற்குப் பிறகு அவரது வாழ்க்கையும் போர் சார்ந்ததாகவே மாறியது. குரோஷியா, போஸ்னியா, குசோவா, மெசிடோனியா, இராக், இரான், ஆப்கானிஸ்தான், எகிப்து என பல நாடுகளுக்குப் பயணித்திருக்கிறார். போரில் பாதிக்கப்பட்ட எளியவர்களைத் தொடர்ந்து புகைப்படம் எடுத்திருக்கிறார்.

இனப்படுகொலை

ஈழத்திலே நடந்த இனப்படுகொலையும், குஜராத்திலே நடந்த இனவொழிப்பு நடவடிக்கைகளும் பலவிதமான புகைப்படங்களினாலும் வீடியோகளாலும் தான் மக்களிடையே தாக்கத்தினை ஏற்படுத்தி விழிப்புணர்வு கொண்டு வந்தன. ஃபெரிடாவின் புகைப்படம் மட்டுமே இனப்படுகொலைக்கு எதிரான நடவடிக்கைகளைக் கொண்டு வரவில்லை எனினும் அந்த நகர்வில் அது ஒரு முக்கிய புள்ளி.

சேனல் 4 உட்பட பல ஊடகங்களும் தனி நபர்களும் இன்று ஈழ இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் போராட்டத்தில் முக்கிய புள்ளிகளாக இருக்கிறார்கள். போஸ்னிய முஸ்லீம்கள் ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தையை அரசாங்கங்கள் ஒப்பு கொள்ள வேண்டும் என்பதற்காக பல காலம் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள்.

இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள், அந்தச் சமயத்தில் இருந்தவர்கள் அனைவரது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு அந்தக் காலத்தில் அரங்கேறிய கொடூரங்கள் அனைத்தும் அத்தாட்சிகளுடன் ஆவணப்படுத்தப்படுகின்றன. ஆங்காங்கே மொத்தமாய் புதைத்து வைக்கப்பட்டிருந்த சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு டிஎன்ஏ மூலம் அது யார் என கண்டறியும் முயற்சிகள் ஒரளவு வெற்றி பெற்றிருக்கின்றன. இறந்தவர்களுக்கான நினைவிடங்கள் கட்டியிருக்கிறார்கள்.

இனப்படுகொலையில் ஈடுப்பட்டவர்கள் யார் யார் என்பதும் அதற்கு உதவியவர்கள் யார் யார் என்பதும் ஓரளவு தெளிவாக பட்டியலிடப்பட்டிருக்கிறது. சிலர் தலைமறைவாக இருக்கிறார்கள். பலர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து கொண்டிருக்கிறது. வேடிக்கை பார்த்த அமைதிப்படையினர் மீதும் வழக்கு நடைபெறுகிறது. அண்டை நாடான செர்பியா அதிகாரப்பூர்வமாக இந்த இனப்படுகொலைக்கு ஆதரவு கொடுத்ததை அந்நாட்டு பாராளுமன்றமே ஒப்பு கொண்டு மன்னிப்பு கோரி இருக்கிறது.

genocide07
செர்பிரேனிட்சாவில் கண்டெடுக்கப்பட்ட பிணக்குவியல்

செர்பிரேனிட்சா இனப்படுகொலைக்குக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் ராத்கோ மிலாடித். ராணுவ தளபதியாக அந்தச் சமயங்களில் படையை வழிநடத்தி சென்றவர் இவரே. போர் குற்றங்கள் குறித்த விசாரணைத் தொடங்கிய பிறகுக் கிட்டதட்ட பதினாறு ஆண்டுகள் இவர் தலைமறைவு வாழ்க்கை நடத்த வேண்டி இருந்தது. 2011-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தற்போது போர்குற்றங்களுக்கான விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது.

2009ல் ஈழத்தில் நடைப்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் முடிவில் முள்ளிவாய்க்காலிலும் பிற இடங்களிலும் கொடூரமான இனப்படுகொலைகள் நடைப்பெற்றதற்கான பல அத்தாட்சிகள் வெளிவந்தபடி இருக்கிறது. கண்கள் கட்டப்பட்ட விடுதலைப்புலி வீரர்களை நிற்க வைத்து கொன்று போடும் சிங்கள வீரர்களின் வீடியோ காட்சி உண்மையானது என ஐக்கிய நாடுகள் சபை ஒப்புக் கொண்டிருக்கிறது.

ஐநா பொது செயலாளர் பான் கீ மூன் ஈழ இனப்படுகொலையைப் பற்றி புலனாய்வு செய்ய ஒரு வல்லுனர்கள் குழு அமைத்தார். அந்தக் குழுவும் ‘வலுவான ஆதாரங்கள்’ இருப்பதாக சொல்லியிருக்கிறது. சர்வதேச வல்லுனர்களின் முழு வீச்சிலான புலனாய்வு சர்வதேச சட்டத்திற்குட்பட்டு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கான சர்வதேச சமூகத்தின் ஆதரவும் பெருகியபடி இருக்கிறது. இதற்கிடையில் ஈழத்து ஃபெரிடாக்களின் கதைகள் இன்னும் வெளிவராமலே இருக்கின்றன.

குறிப்பு: நபர்களின் பெயர்கள் மற்றும் ஊர் பெயர்கள் உச்சரிப்பு பிழை இருக்கலாம்.

நன்றி
முதல் ஓவியம்: கனடா நாட்டு ஓவியர் Ty Agha
இரண்டாம் ஓவியம்: சோபா
படங்கள் அனைத்தும் செய்தி நிறுவன படங்கள். பெரும்பாலானவை புகைப்பட கலைஞர் டார்கோ பேண்டிக் எடுத்தவை.

உலகப் புகழ் பெற்ற புகைப்படங்களின் பின்னணியில் உள்ள உணர்ச்சிமிகு உண்மை கதைகள் அனைத்தையும் வாசியுங்கள்.


Comments
One response to “உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – இனப்படுகொலை”
  1. அருமை

    http://www.nattumarunthu.com
    nattu marunthu kadai online
    nattu marunthu online

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.