மனிதர்கள் – அவனுக்குள் கேட்கும் குரல்

‘கதையல்ல நிஜம்’ என்று சில வருடங்களுக்கு முன் பிரபலமாக இருந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. அதில் நான் பணிபுரிந்த போது சந்தித்த மனிதர்களை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இன்னும் அதன் தாக்கத்தில் இருந்து நான் மீளவில்லை.

அப்போதெல்லாம் ஒரு நாளைக்கு பல கடிதங்கள் அந்த நிகழ்ச்சிக்கு வரும். அப்படி வரும் கடிதங்களைத் தொகுத்து கோப்புகளாக பராமரித்து வந்தார்கள். ஒரு நாள் யதேச்சையாக ஒரு பழைய கோப்பினைப் புரட்டி கொண்டிருந்த போது ஒரு கடிதத்தினைப் பார்த்தேன். தெளிவான கையெழுத்தில் முழு நீள வெள்ளைத்தாளில் எட்டு பக்கங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது அந்தக் கடிதம்.

“என் பெயர் கிருஷ்ணன்,” என தொடங்கியது கடிதம். கடிதத்தின் சுருக்கத்தைக் கீழே தந்து இருக்கிறேன்.

கிருஷ்ணனுக்கு இப்போது முப்பத்தி இரண்டு வயது. ஏழு வருடங்களுக்கு முன்பு அவர் மும்பையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவருக்குச் சொல்லப்பட்டது கணக்கு வேலை. ஆனால் அவரை வேறு வேலைகள் செய்ய அந்த நிறுவனத்தில் நிர்பந்தம் செய்து வந்தார்கள். மொழி புரியா ஊரில் கிருஷ்ணனுக்கு எல்லா விஷயமும் பெரும் மனச் சோர்வாக இருந்தது. இச்சமயத்தில் அவருக்குள் எதோ மர்மமான மாற்றங்கள் நிகழ்ந்தன. முதலில் தாங்க முடியாத வலி உடல் எங்கும் பரவியது. பிறகு எதோ கதிர்கள் தன் உடலுக்குள் ஊடுருவது போல் இருந்தது. தனது கம்பெனிக்காரர்கள் தான் எதோ மந்திரம் செய்து இந்தக் கதிர்களை ஏவி விட்டு இருக்கிறார்கள் என நினைத்தார் கிருஷ்ணன்.

கிருஷ்ணனின் தாங்க முடியாத வலிக்கு ஒரு விடிவு கிடைத்தது. நிரஞ்சன் என்றொரு நபர் கிருஷ்ணனின் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவரும் தமிழர். அதோடு உயர் அதிகாரி. தனக்குக் கீழ் இருக்கும் பணியாளர்களிடம் ஆதரவாய் பேசுபவர். இது போல ஒரு நாள் நிரஞ்சன் கிருஷ்ணனைக் கூப்பிட்டு ஆறுதலாய் பேசி இருக்கிறார்.

அடுத்த நாள் காலை கிருஷ்ணன் விழித்த போது அவருக்குள் கேட்டது நிரஞ்சனின் குரல். ஆம்! நிரஞ்சன் பக்கத்தில் இல்லாமலே அவரது குரல் மட்டும் கிருஷ்ணனின் தலையில் கேட்க தொடங்கியது. என்ன ஆச்சரியம், இவ்வளவு நாட்கள் பாடாய் படுத்திய உடல் வலி சுத்தமாய் மறைந்து விட்டது. தனக்கு நல்லது செய்வதற்காக தன் உடலுக்குள்ளே வந்திருக்கிறார் நிரஞ்சன் என நினைத்தார் கிருஷ்ணன்.

கிருஷ்ணனிடம் பரிவாய் பேசியபடி இருந்தது நிரஞ்சனின் குரல். கிருஷ்ணனுக்கு முதல் நாள் சந்தோஷம். இரண்டாம் நாள் அந்தக் குரலோடு சகஜமாய் தன் வாழ்க்கையைப் பற்றி தன்னுடைய கவலைகள் பற்றி என்று எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள தொடங்கினார். ஒரு வாரம் ஆன பிறகும் அவருக்குள் நிரஞ்சனின் குரல் இன்னும் கேட்டு கொண்டிருந்தது.

“என் பிரச்சனைகள் எல்லாம் உங்கள் தயவால் தீர்ந்து விட்டது. உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள். இப்போது நீங்கள் என்னிடம் இருந்து பிரியலாம்,” என்று கிருஷ்ணன் தன் மனதிற்குள் சதா பேசியபடி இருந்த நிரஞ்சனின் குரலிடம் சொன்னார். அவ்வளவு தான், நிரஞ்சன் கெட்ட வார்த்தைகளால் அவரை அபிஷேகிக்க ஆரம்பித்து விட்டார். அதோடு கிருஷ்ணன் பகிர்ந்து கொண்ட அந்தரங்க விஷயங்களை எல்லாம் வெளியில் சொல்வேன் என்பது போன்ற மிரட்டல்.

கிருஷ்ணனுக்கு அதிர்ச்சி. அன்று தொடங்கி இன்று ஏழு வருடங்களாகிறது. இன்று வரை தினமும் தனக்குள் நிரஞ்சனின் குரல் கேட்டபடி இருக்கிறது என அந்தக் கடிதம் முடிந்தது. எதாவது தட்டி கேட்டால் அந்த குரல் பயங்கரமாய் திட்டுகிறது. இதன் காரணமாய் தன்னால் சராசரி மனிதர்கள் போல வாழ முடியவில்லை. எப்படியாவது நிஜ நிரஞ்சனிடம் பேசி அவரை தனக்குள் இருந்து வெளியே போக வழி செய்து தர வேண்டுமென ஒரு வேண்டுகோளும் இருந்தது.

கடிதத்தினை வாசித்து முடித்த போது இது ஒரு மன வியாதி என தோன்றியது. ஒரு வங்காள படத்தில் கூட கதாநாயகனுக்கு சதா காதில் மணி சத்தம் கேட்டபடி இருக்கும் என்று பார்த்ததாய் நினைவு. ஆனால் கடிதம் எழுதப்பட்டிருந்த முறையும் பயன்படுத்தப்பட்டிருந்த மொழியும் இது மன வியாதி உள்ளவரால் எழுதப்பட்ட கடிதம் போலவே தோன்றவில்லை.

கடிதத்தில் இருந்த விலாசத்திற்கு அடுத்த நாள் பைக்கில் பயணமானேன். அது கோடைக்காலத்து வெப்பம் மிகுந்த நாள். சென்னையின் புற நகர் பகுதி. சொற்ப வீடுகள் இருந்த ரெஸிடென்சியல் காலனி. வீடு இருக்கும் தெருவை நெருங்கும் போது அங்கு மிகுந்து கிடந்தது ஓர் அமானுஷ்ய அமைதி. மஞ்சள் மஞ்சளாய் பழைய காலத்து கட்டிடங்கள். வீடுகள் இருந்தன தவிர வழி கேட்க கூட ஆட்கள் யாரையும் தெருவில் பார்க்க முடியவில்லை. நாய்களைப் பார்க்க முடியவில்லை. ஆனால் அது குலைக்கும் சத்தம் மட்டும் கேட்டபடி இருந்தது.

கடைசியில் கண்ணில் பட்டார் ஓர் இஸ்திரி கடை ஆள். இறுக்கமான முகத்தோடு பதில் சொல்லி விட்டு திரும்பவும் வந்த வழியே போய் விட்டார். கடைசியில் அந்த வீட்டிற்கு போய் சேர்ந்தேன்.

ஒரு பிராமண குடும்பம். வயதான தாய் தந்தை மட்டும் இருந்தார்கள். நான் யார் என்றும் எதற்காக வந்து இருக்கிறேன் என்றும் சொன்ன போது அவர்களுக்கு அதிர்ச்சி. கிருஷ்ணன் வெளியே போய் இருக்கிறார் என்று சொன்னார்கள்.

“அவனை டாக்டரிடம் வாடா போலாம்னு சொன்னா கத்தி கலாட்டா செஞ்சிடுறான். அவனை என்ன செய்யறதுன்னே தெரியல,” என்றார் கிருஷ்ணனின் தந்தை.

“போன மாசம் அவள் விகடன்ல இத பத்தி ஒரு கட்டுரை போட்டிருந்தாங்க. இந்த மாதிரி காதுல சத்தம் கேட்கிறது ஒரு மனோ வியாதி. அது பேரு Hallucination-ன்னு போட்டிருந்தா. இவன் நல்லா தான் இருக்கான். ஆனா இப்படி ஒரு வியாதி இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு,” என்று சொன்னார் தாய்.

“சரி இவன் சொல்ற மாதிரியே அந்த நிரஞ்சன் உண்மையிலே எதாவது மாய மந்திரம் செஞ்சிருப்பாரான்னு அவரையே போய் பார்த்தேன். அவங்க கம்பெனி எம்.டி கூட நிரஞ்சனைக் கூப்பிட்டு பேசினாங்க. ஒண்ணும் மாத்த முடியல்லை. கிருஷ்ணனை டாக்டர்கிட்ட கூப்பிட்டா வர மாட்டேன்கிறான். சரி யாராவது மந்திரம் தெரிஞ்சவாள்கிட்ட போலாம்னா அதுக்கும் ஒப்புக்க மாட்டேங்கறான். என்ன செய்யறதுன்னே புரியலை,” என்றார் தந்தை.

எனது அலுவலக தொலைபேசி எண்ணை அவர்களிடம் கொடுத்து விட்டு வந்தேன். அன்று மாலையே என்னிடம் தொலைபேசினார் கிருஷ்ணன். நாளை காலை அலுவலகத்திற்கு வாங்க என்றேன்.

“இல்ல முடியாது. வெயில் அதிகமா இருக்கும். சாயந்திரமா வர்றேன்,” என்றார் கட் அண்ட் ரைட் குரலில்.

அதே போல மாலையில் வந்தார். கொஞ்சம் சிகப்பாய் அவர் வயதிற்கு மற்றவர்கள் எப்படி இருப்பார்களோ அப்படித் தான் இருந்தார். மன வியாதி என்று எல்லாம் அவரைப் பார்த்த பிறகு எனக்குத் தோன்றவில்லை.

கடிதத்தில் இருந்த விஷயத்தைத் தெளிவான குரலில் மீண்டும் சொன்னார்.

“நீங்க நிரஞ்சனை அதுக்கு அப்புறம் பார்த்து இருக்கீங்களா,” என்று கேட்டேன்.

“ஒவ்வொரு வருஷமும் நான் சென்னைக்கு லீவிற்கு வரும் போது நிரஞ்சன் சாரைப் போய் பார்ப்பேன். அவர் அலுவலகத்திற்குப் போய் பார்ப்பேன். அவர் வீட்டிற்கும் போய் பார்ப்பேன். உன் உடம்புக்குள்ள நான் இல்லன்னு பொய் சொல்றார்.”

“நிரஞ்சன் பாம்பேயில இல்லையா?” என்றேன்.

“இல்ல, அவரும் சென்னையில தான் இருக்கார்,” என்றார் கிருஷணன்.

அடுத்த நாள் நிரஞ்சனின் அலுவலகத்திற்குச் சென்றேன். நிரஞ்சனுக்கு நாற்பது வயதிற்கும். பார்த்தவுடனே பிடித்து விடுகிற மாதிரியான கேரக்டர். நான் எதற்காக வந்து இருக்கிறேன் என்று சொன்னவுடன் அவரால் நம்பவே முடியவில்லை.

“அவன் ஒரு பைத்தியம் சார்,” என்றார் அடக்க முடியாத உணர்வோடு. பிறகு தெளிவாகி என்னைக் கேண்டினுக்கு அழைத்து சென்றார்.

நான் அவரிடம் எனக்கு இது மன வியாதி சார்ந்த பிரச்சனை என்று தெரியும் என்று சொன்னேன். இதை டீவியில போட போறீங்களா என்று கேட்டார். அதற்கு வாய்ப்பு குறைவு தான் என்று சொன்னேன்.

நிரஞ்சன் மற்றொரு வித்தியாசமான கதாபாத்திரம். அவரது மனைவிக்கு depression மனப்பிரச்சனை இருந்தது.

“ஓட்டலுக்கு எல்லாரும் போவோம். திடீரென சிரிக்க ஆரம்பிச்சா சிரிச்சுக்கிட்டே இருப்பா. ஓட்டல்ல இருந்து அவளை வெளியே கூட்டிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும். அதே மாதிரி அழ ஆரம்பிச்சா விடாம அழுதுக்கிட்டே இருப்பா. தொடர்ந்து டாக்டர்கிட்ட காண்பிச்சு இப்ப சரியாயிட்டா. உங்க நிகழ்ச்சிக்கு கூட வந்து எப்படி இதுல இருந்து மீண்டோம்னு பேச ஆசைபட்டா. இந்த மாதிரி மன வியாதி உள்ளவங்க கூட வாழ்ந்து வந்ததால அவன் மேல எனக்கு அனுதாபம் கூட உண்டு. ஆனா திடீரென ஆபிஸிற்கு வந்து உங்க கால்ல வேணா விழறேன் சார், என்னை விட்டு போயிடுங்கன்னு அழுவுறான். எவ்வளவு வீடு மாத்தினாலும் கரெக்டா அட்ரஸ் கண்டுபிடிச்சு வர்றான். என்னால அவனுக்குப் பிரச்சனை இல்லை. அவனால தான் எனக்குப் பிரச்சனை. அவங்க அப்பா வேற மந்திரம் செய்யறவங்க கிட்ட போக போறதா சொன்னார். இவனைக் காப்பாத்த போய் எனக்குச் செய்வினை வைச்சுடுவாங்களோன்னு பயமா இருக்கு,” என்று சொன்னார் நிரஞ்சன்.

இதற்கு மேல் இந்த விஷயத்தில் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. கிருஷ்ணன் அவ்வப்போது அலுவலகத்திற்கு வருவார்.

“இது மன வியாதின்னு சொல்றாங்களே,” என்று அவரிடம் கேட்டேன்.

“நான் எவ்வளவு தெளிவா இருக்கேன் சார். என்னை பார்த்து இப்படிச் சொல்றீங்களே,” என்று சலித்து கொண்டார் கிருஷ்ணன்.

“எனக்குப் பேய் பிசாசு மேல எல்லாம் நம்பிக்கை இல்லை சார்,” என்று தொடர்ந்து அவரே சொன்னார்.

“அப்ப இது எப்படி சாத்தியம்?” என்று கேட்டேன்.

“ஏழாவது அறிவு இருக்குன்னு இப்ப கண்டுபிடிச்சு இருக்காங்க. அது மாதிரி நிரஞ்சன்கிட்ட எதோ பவர் இருக்கு. சயிண்டிஸ்ட் எல்லாம் சேர்ந்து ஆராய்ச்சி செஞ்சு தான் கண்டுபிடிக்கணும்,” என்று சொன்னார் கிருஷ்ணன்.

“எனக்கு இந்த வாய்ஸ் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. யாராவதுகிட்ட பேசும் போது உள்ளுக்குள்ள இந்த வாய்ஸ் எதாவது தப்பா தப்பா பேசுது. திடீரென்னு யாராவது நீ என்ன தனியா பேசிட்டு இருக்கேன்னு என்னை பாத்து சிரிக்கிறாங்க. எனக்கும் வயசாயிடுச்சு. கல்யாணம் செஞ்சுட்டு வாழ்க்கையில செட்டிலாகணும்ன்னு ஆசையிருக்காதா. ஏற்கெனவே வேலை செஞ்ச இடங்கள்ல இதனாலே பிரச்சனையாகி வருஷத்துக்கு ஒரு முறை வேலை மாத்திட்டு இருக்கேன். உனக்கு வேற யாரும் உதவி செய்ய தயாரா இல்ல. நீங்க தான் நிரஞ்சன்கிட்ட பேசணும். ப்ளீஸ் சார், நீங்க தான் என்னைக் காப்பாத்தணும்.”

நன்றி:

முதல் படம் – j-No
இரண்டாவது படம் – youarea0
மூன்றாவது படம் – mod as hell

மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


Comments
One response to “மனிதர்கள் – அவனுக்குள் கேட்கும் குரல்”
  1. pappu Avatar

    என்ன இது?

    அந்த ஆளுக்கு hallucination அப்பட்டமா தெரியுது! அப்புறமும் விட்டுட்டிருக்காங்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.