இலங்கை கிழக்கு மாகாணத்தில் கருணா படைகளால் மனித உரிமை மீறல் – பிரபல மனித உரிமை கழகம் பகிரங்கம்

உலகளவில் பிரபலமான தன்னார்வ தொண்டு நிறுவனம் ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் (HRW – Human Rights watch.) சர்வதேச அளவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை தைரியமாய் பகிரங்கபடுத்துவதில் இந்த தன்னார்வ நிறுவனம் பெயர் பெற்றது. சில நாட்களுக்கு முன்பு இந்த நிறுவனம் இலங்கையில் உள்ள கிழக்கு மாகாண அரசாங்கத்தை குற்றம் சாட்டி, அங்கு கடுமையான மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக தெரிவித்து இருக்கிறது.

இலங்கையின் கிழக்கு மாகாணம் தற்போது ராஜ பக்சே அரசின் கட்டுபாட்டில் உள்ளது. விடுதலைபுலிகளின் நம்பிக்கைக்குரிய போர்படை தளபதியாக இருந்த கருணா அம்மன் 2004 ஆம் ஆண்டு விடுதலைபுலிகளிடமிருந்து பிரிந்து இலங்கை அரசிற்கு துணை போனார். தற்போது அவரது தலைமையின் கீழ் செயல்படும் ‘தமிழ்மக்கள் விடுதலைபுலிகள்’ என்கிற அமைப்பு கிழக்கு மாகாணத்தின் ஆட்சி பொறுப்பில் இருக்கிறது. கடந்த மே மாதம் முதல் இந்த அமைப்பை சேர்ந்த பிள்ளையன் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன் என்பவர் இங்கு முதலமைச்சராக பதவி வகிக்கிறார். இவர் சிறுவனாக இருந்த போது விடுதலைபுலிகளால் வலுக்கட்டாயமாக அவர்களது படையில் சேர்க்கபட்டார் என்று இலங்கை அரசாங்கம் சொல்கிறது. இலங்கையில் 18 வயதிற்கு குறைவான சிறுவர்களை வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடுத்தினார்கள் என்பது விடுதலைபுலிகளின் மீதான பரவலான குற்றசாட்டு. இதன் பின்னணியில் பிள்ளையன் முதலமைச்சராக பதவியேற்றது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிக பெரிய வெற்றி என இலங்கை அரசாங்கம் கொண்டாடியது.

HRW அமைப்பின் ஆசிய பிரிவு தலைவரான பிராட் ஆடம்ஸ், “இலங்கை அரசாங்கம் கிழக்கு மாகாணத்தை ஜனநாயக பாதைக்கு திரும்பிய பகுதியாக சொல்வது பொய். அங்கு கொலைகளும் ஆள் கடத்தல்களும் ஏராளமாய் நடக்கின்றன. குற்றவாளிகள் எந்த தண்டனையும் இல்லாமல் சுதந்திரமாய் நடமாடுகிறார்கள்,” என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.

விடுதலைபுலிகளிடமிருந்து பிரிந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த கருணா லண்டனில் சமீபத்தில் கைதானார். பாஸ்போர்ட் தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யபட்டிருந்தார். கடந்த ஜுலை மாதம் அவர் இலங்கை கிழக்கு மாகாணத்திற்கு திரும்பி வந்து ‘தமிழ்மக்கள் விடுதலைபுலிகள்’ அமைப்பின் தலைமை பொறுப்பினை ஏற்றார். ஆனால் முதலமைச்சராக இருக்கும் பிள்ளையனுக்கும் கருணாவிற்கும் இடையில் அதிகார பகிர்வு காரணமாக பகைமை உண்டானது என்றும், இன்று ‘தமிழ்மக்கள் விடுதலைபுலிகள்’ கருணா மற்றும் பிள்ளையன் என இரண்டு பிரிவுகளாக பிரிந்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

அக்டோபர் மாதம் கருணா இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார். கருணாவும் சரி, தற்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையனும் சரி 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை வலுகட்டாயமாக தங்கள் படையில் சேர்த்து கொண்டிருக்கிறார்கள் என குற்றம் சாட்டுகிறது HRW நிறுவனம்.

‘தமிழ்மக்கள் விடுதலைபுலிகள்’ ஆயுதங்களோடு கிழக்கு மாகாணத்தில் சுதந்திரமாய் சுற்றுகிறார்கள் என்பது பிபிசி நிறுவனம் தொடங்கி எல்லாரும் வெளியிட்ட தகவல். இலங்கை அரசாங்கம் இது குறித்து கவலைபடுவதே இல்லை. செப்டம்பர் மாதம் தொடங்கி 30 கொலைகளுக்கு மேல் நடந்திருக்கிறது என சொல்கிறது HRW நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை. கடந்த மாதம் அக்டோபர் மூன்றாம் தேதி இரண்டு தமிழ் இளைஞர்கள் இங்கு காவல்துறையினரால் கைதானார்கள். ஆறு நாட்கள் கழித்து அவர்களது உடல்கள் கடற்கரையோரம் ஒரு தூணில் கட்டபட்ட நிலையில் கண்டெடுக்கபட்டது. அவர்களது உடலில் கடுமையான சித்ரவதைகள் நடந்ததற்கான சான்றாய் காயங்கள் இருந்தன. இது போல பல சம்பவங்கள்.

திரிகோணமலையின் கோனேஸ்வரம் கோயிலின் தலைமை பூசாரி சிவ குருராஜ குருக்கள் பகலில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது சுட்டு கொல்லபட்டார். மனித உரிமை அமைப்பு செயலாளர்களும் பத்திரிக்கையாளர்களும் கடத்தபடுவதும் கொல்லபடுவதும் மிரட்டபடுவதும் வாடிக்கையான நிகழ்வாகி கொண்டிருக்கிறது.

HRW நிறுவனம் இலங்கை கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் அங்கு ஆட்சி பொறுப்பில் இருக்கும் ‘தமிழ்மக்கள் விடுதலைபுலிகளும்’ அவர்களுக்கு கண்மூடித்தனமான ஆதரவு தரும் ராஜ பக்சே அரசாங்கமுமே காரணம் என குற்றம் சாட்டி இருக்கிறது.

இலங்கையில் தமிழ் மக்கள் மீது எந்த தாக்குதலும் நடக்கவில்லை என இந்திய அரசாங்கத்திடம் ராஜ பக்சே சொல்வதை வடி கட்டிய பொய் என நிருபிக்க HRW வெளியிட்டுள்ள அறிக்கையும் ஒரு சான்று.

இந்திய அரசாங்கம் இனியாவது இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தமிழர்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ளது என்கிற உண்மையை ஒப்பு கொள்ளுமா அல்லது பல வருடங்களாய் கடைபிடித்து வரும் அமைதியை தொடருமா?

மேலதிக விவரங்களுக்கு

HRW நிறுவனம் வெளியட்டுள்ள அறிக்கை


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.