மனிதர்கள் – காதலால் பித்தன் ஆனான்

பல வருடங்கள் கழித்து அன்று கல்லூரி நண்பன் ஒருவனைப் பார்த்தேன். தன் புது ஹோண்டா காரில் வந்திருந்தான். பரஸ்பர நலம் விசாரித்தல், பிறகு நண்பர்களைப் பற்றி புரணி பேசுதல் என உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு நல்ல ஏசி பாருக்கு மது அருந்த அழைத்து சென்றான்.

தொடர்ந்து இரண்டு மணி நேரம் உரையாடி விட்டு அடுத்து பேச என்ன என தெரியாமல் ஓர் அமைதி நிலவியது. பாரில் ஓர் ஓரத்தில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த டீவியில் ஓடிக் கொண்டிருந்த கிரிக்கெட் மேட்ச்சை இருவரும் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தோம். மது அருந்தும் போது பேச்சு ஒரு கூடுதல் போதையூட்டி. அதனால் நண்பன் மீண்டும் பேச தொடங்கினான்.

“உனக்கு பாண்டியன் நினைவிருக்கா?” என நண்பன் டீவி திரையில் இருந்து கண்களை அகற்றாமல் கேட்டான். நான் பதில் பேசுவதற்குள் அவனே மீண்டும் பேச தொடங்கினான்.

“பாண்டியனைக் பட்டிக்காட்டான், பட்டிக்காட்டான்னு நாம எல்லாரும் கிண்டல் பண்ணோம் நினைவிருக்கா.”

கல்லூரி காலத்தில் எங்களுக்கு ஒரு வருட ஜுனியர் இந்த பாண்டியன். அமைதியானவன். யாரிடமும் அதிகமாய் பேச மாட்டான். எங்கள் கல்லூரி தங்கும் விடுதியில் அவரவர்களுக்குத் தனி தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. பீடி குடித்தபடி அறைக்குள்ளே கிடப்பான். எக்கச்சக்க புத்தகங்கள் குப்பை போல அறையில் குவிந்திருக்கும். அறையே ஒரு பெரிய குப்பை கூடை போல தானிருக்கும். அந்த குப்பை கூடையில் ஒரு குப்பை போல கட்டில் தெரியும். கட்டிலில் ஒரு பழைய அழுக்கு மெத்தையைச் சுருட்டி அதைத் தனக்கான இடமாக மாற்றியிருந்தான். அறையில் அந்த ஒரு பகுதியில் மட்டும் தான் அவன் அமர்வான். அமர்வது என்பது ஏறத்தாழ படுத்து கிடப்பது தான். அந்த போஸில் தான் படிப்பது, தூங்குவது எல்லாம். புகைப்பதற்கு பீடிகள் தீர்ந்து விட்டால் தரையில் இருக்கும் பழைய பீடிகளை தேடி எடுத்து அதன் மிச்சங்களைப் புகைத்து கொண்டிருப்பான்.

“நான் அப்பவே பாண்டியனை ஓர் அறிவு ஜீவின்னு சொல்லிட்டு இருந்தேன், ஞாபகம் இருக்கா? நான் காலேஜ் முடிச்சிட்டு வேலைக்குச் சேர்ந்த முதல் வருஷம் கோயம்புத்தூருக்கு என்னைப் பாக்கறதுக்காக வந்தான். என் அட்ரஸை எப்படி கண்டுபிடிச்சான்னு தெரியலை. அவன் சொன்ன விஷயத்தை முதல்ல நான் நம்பவே இல்லை. இப்ப சொன்னா கூட நீ நம்பவே மாட்ட,” என்றான் நண்பன். அவன் என்ன சொல்ல போகிறான் என என்னால் ஊகிக்க முடிந்தது. ஆனால் நண்பனின் பேச்சில் நான் குறுக்கிடவில்லை. ஏனென்றால் நண்பன் தன் பேச்சின் சுவாரஸ்யத்தில் பேசி கொண்டே இருக்கிறான். அதை கெடுக்க விரும்பவில்லை. அடுத்து முழுமையாய் என்ன சொல்கிறான் கேட்போம் என்கிற ஆவல்.

“ஹெலன் உனக்கு நினைவிருக்கா?” எப்படி மறக்க முடியும்? எங்கள் கல்லூரி விடுதி அருகிலே கல்லூரி ஹாஸ்டல் வார்டனின் வீடு இருந்தது. வார்டனின் மகள் தான் ஹெலன். எங்கள் கல்லூரியில் தான் படித்தாள். பேரழகி என்று தான் சொல்ல வேண்டும்.

“வார்டன் வீட்டுக்கு நேர் வரிசையில தான் பாண்டியன் ரூம் இருந்தது. கவனிச்சிருக்கீயா?” என்று கேட்டான் நண்பன். ஏற்கெனவே பார்த்த திரைப்படத்தை மீண்டும் பார்க்கும் அலுப்புடன் நான் அமர்ந்திருந்தேன்.

“பாண்டியனும் ஹெலனும் லவ் பண்ணியிருக்காங்க. கோயம்புத்தூருக்கு என்னைப் பாக்க வந்தப்ப தான் இத சொன்னான். குரங்கு மாதிரி இருக்கான். இவனுக்குக் கிளி மாதிரி பொண்ணு மாட்டியிருக்கேன்னு பொறாமைப்பட்டேன். தினமும் இவன் ரூம் ஜன்னல்ல இருந்து அவங்க வீட்டு மாடியில அவ ரூமை பாத்து டார்ச் அடிச்சு ஒருத்தருக்கு ஒருத்தர் சிக்னல் கொடுத்துக்கிறது, இப்படி நாம காலேஜ்ல படிக்கிற காலத்தில் இருந்தே லவ் பண்ணிட்டு தான் இருந்திருக்காங்க.” நண்பன் தன் கிளாஸைக் காலி செய்து சில நொடிகள் அமைதியாகி பிறகு மீண்டும் பேச ஆரம்பித்தான்.

“கோயம்புத்தூருக்கு பாண்டியன் என்னைத் தேடி வந்து தன்னோட லவ் ஸ்டோரியைச் சொன்னான். இரண்டு நாள் என் ரூம்ல தான் தங்கினான். விஷயம் அந்த பொண்ணோட அப்பா, அதான் நம்ம வார்டனுக்குத் தெரிஞ்சு அவங்க வீட்ல ஒரே சண்டையாம். பொண்ணை வீட்டை விட்டு வெளியே அனுப்ப மாட்டேன்கிறாங்களாம். இவனுக்கு அவள பாக்காம பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆயுடுச்சு. அப்புறம் என்கிட்ட ஓர் ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிட்டு திரும்பவும் மெட்ராஸ் போனான்,” என்று நண்பன் பேச்சை முடித்தான். நண்பனின் பேச்சு முடிந்து விட்டதா என அறிவதற்காக சற்று காத்திருந்தேன். ஆமாம் பேச்சை முடித்து விட்டான் என ஊர்ஜிதமானது.

“மூன்று மாசத்துக்கு முன்னாடி தான் ஹெலனுக்கு கல்யாணமாச்சு,” என்று ஒரு வரியை மட்டும் சொல்லி விட்டு நண்பனின் முகத்தை நோக்கினேன். கிரிக்கெட்டில் ஸ்கோர் கார்டு பார்த்து கொண்டிருந்த நண்பன் அதிர்ச்சியாகி, “என்ன சொன்ன?” என்று கேட்டான். திரும்பவும் சொன்னேன்.

“மாப்பிள்ளை?”

“லவ் மேரேஜ் தான். ஸ்டீபன்னு ஒரு நார்த் இண்டியன். அவ கூட வேலை செய்யற பையன் தான்.”

“பணக்கார பொண்ணுங்க புத்தியே இப்படி தான்.”

“பாண்டியன் உன்கிட்ட சொன்னது அத்தனையும் பொய். உன்கிட்ட மட்டுமில்ல. நிறைய பேருகிட்ட அப்படி சொல்லியிருக்கான். அது மட்டுமில்ல. அந்த பொய்களை அவனே நம்ப ஆரம்பிச்சிட்டான். ரூம்குள்ள இராத்திரி பூரா அவன் தனியா பேசிட்டு இருக்கிறதை அவன் பேட்ச்மெட்ஸ் கேட்டிருக்காங்க.”

“அப்படினா அவனைப் பைத்தியம்னு சொல்றீயா?”

“சந்தேகம் இல்லாம பைத்தியம் தான். உன்கிட்ட பணம் வாங்கின மாதிரி நிறைய பேருகிட்ட இந்தக் காதல் கதைய சொல்லி பணம் வாங்கியிருக்கான். அவன் நார்மலா இருந்தப்பவே பைத்தியக்காரன் தோற்றத்துல தான் இருந்தான். அதுனால மற்றவர்களுக்கு அவன் பைத்தியமான விஷயம் தெரியவில்லை.”

“அடப்பாவி.”

“அந்த பொண்ணுக்கு தொடர்ச்சியா போன் பண்ணி கண்டதையும் பேசிட்டு இருந்திருக்கான். அந்த பொண்ணு அவங்க அப்பாகிட்ட சொல்லி, அவரு போலீஸ்கிட்ட சொல்லிட்டாரு. போலீஸ் அவன் திரும்ப போன் பண்ணா எதாவது குறிப்பிட்ட இடத்துக்கு வா, சந்திக்கலாம்னு அந்த பொண்ணுக்கிட்ட பேச சொல்லியிருக்கு. அதே மாதிரி அந்த பொண்ணு அவனை ஒரு பார்க்குக்கு வர சொல்லியிருக்கு. நம்மாளும் போயிருக்கான். போலீஸ் சுத்தி வளைச்சு பிடிச்சுட்டாங்க. இதுல பெரிய கொடுமை என்னன்னு அந்த பொண்ணுக்கு இவன யாருன்னே தெரியல. வார்டன் தான் இவனை அடையாளம் கண்டுபிடிச்சிருக்கார். அப்புறம் அவன் என்ன ஆனான்னு தெரியாது. இந்த விஷயம் காலேஜ் முழுக்க தெரியுமே. உனக்கு எப்படி தெரியாம போச்சுன்னு ஆச்சரியமா இருக்கு.”

“உண்மையாவா சொல்ற,” என்று நண்பன் கேட்டான். அவனது நாக்கு போதையில் தடுமாறியது. அன்று நான் அவனிடம் இருந்து விடைபெறும் வரை இந்த வசனத்தை தான் திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தான்.

நன்றி:

ஓவியம்: ‘Les Trois Sphinx de Bikini‘ by Salvador Dali

மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


Comments
3 responses to “மனிதர்கள் – காதலால் பித்தன் ஆனான்”
  1. Anonymous Avatar
    Anonymous

    nice

  2. Anonymous Avatar
    Anonymous

    nice

  3. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    காதல் தோல்வியால் பித்துப் பிடித்ததா இல்லை பித்துப் பிடித்திருந்ததால் காதலிப்பதாக நினைத்துக் கொண்டானா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.